
பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி, வாகன சோதனை அதிகாரிகளிடம் பிடிபட்டால், அச்சிறுவன் ஓட்டிய வாகனத்தின் ஆர்.சி.யை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1 முதல் அமலாகும் என்ற செய்தியும், அதோடு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 25 வயது ஆகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்ற செய்தி பலருக்கும் நிம்மதியைத் தந்துள்ளது.
பதினெட்டு வயது முழுமை என்பது முறையான ஓட்டுநர் உரிமம் பெறும் வயது என்பதை நிர்ணயித்திருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாத பெற்றோர்கள் தங்கள் மகனின் ஆர்வத்தை கண்டு சிறு வயதிலேயே இரு சக்கர வாகனங்களை அவர்களிடம் தந்து இயக்க விடுவது தற்போது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. இதனால் விளையும் விபரீதங்களை உணராமலேயே பெற்றோர்கள் இந்தச் செயலுக்கு துணை போகின்றனர். ‘மைனர்’ எனப்படும் இந்தச் சிறுவர்கள் வண்டி ஓட்டுவதால் என்னென்ன பாதகங்கள் விளையும் என்பது தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பாதுகாப்பு அச்சம்: மைனர்களுக்குத் தேவையான ஓட்டுநர் திறன்கள் அல்லது போதிய அனுபவம் இல்லாமல் இருக்கலாம். இது விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறுவர்களால் உண்டாகும் விபத்துக்களால் மீள முடியாத கடுமையான காயங்கள் அல்லது இறப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். மேலும், விபத்துக்கள் வாகனங்கள், சொத்துகள் மற்றும் எத்தகைய கட்டடங்களின் உள்கட்டமைப்புக்கும் சேதத்தை ஏற்படுத்தலாம்.
பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான முதிர்ச்சி அல்லது விவேகம் சிறார்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
வாகனம் ஓட்டும்போது அலைபேசிகளைப் பயன்படுத்துவது போன்ற கவனத்தை சிதறடிக்கும் செயல்களைச் செய்தபடி சிறார்கள் வாகனம் ஓட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
சாகசம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் வித்தைகளில் ஈடுபடுமாறு நண்பர்களிடமிருந்து சிறார்கள் அழுத்தத்தைப் பெறலாம்.
சட்ட சிக்கல்கள்:
வயது குறைந்தவர்கள் வாகனம் ஓட்டுதல் என்பது பல அதிகார வரம்புகளில், செல்லுபடியாகும் உரிமம் அல்லது அனுமதி இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்ட விரோதமானது.
மைனர்கள் சரியான மேற்பார்வை அல்லது உரிம அங்கீகாரம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பொறுப்பேற்கப்படலாம். இதன் விளைவாக மைனர்கள் அபராதம், சமூக சேவை அல்லது சிறார் தடுப்புக்காவல் போன்ற கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும்.
எப்படித் தடுக்கலாம்?
வாகனம் ஓட்டும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நெருக்கமாக கண்காணித்து வழிநடத்த வேண்டும்.
வாகனம் ஓட்டுவதற்கு முன்பு சிறார்களுக்கு முறையான ஓட்டுநர் கல்வி மற்றும் பயிற்சி அளிக்க வேண்டும்.
சட்ட அமலாக்கம் சிறார் வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு பெருகும்.
மேலும், சிறுவர்களால் ஏற்படும் விபத்தில் அடிபட்டவர்களின் குடும்பம் பாதிக்கப்படுவதுடன் சிறுவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு விபத்து ஏற்படுத்திய குற்ற உணர்வுடன் வாழும் வேதனையான சூழலும் இருக்கும்.
‘எவ்வித சூழலிலும் சிறுவர்களிடம் வாகனங்களை இயக்கத் தர மாட்டோம்’ என முதலில் பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும்.
மேற்கண்டவற்றை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருந்து சிறார் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க நாமும் துணை நிற்க வேண்டியது அவசியம்.