
ஈகோ என்பது மனிதர்கள் அனைவருக்குள்ளும் ஆணித்தரமாய் அமர்ந்திருக்கும் ஓர் உணர்வு. 'ஈகோ' என்பதற்கு, 'தான் என்ற அகங்காரம்', 'தன்னை மிஞ்ச எவருமில்லை' என்றெல்லாம் அர்த்தம் கூறப்படுகிறது. தற்காலத்தில் சோஷியல் மீடியாவுக்குள் மூழ்கியிருக்கும் ஒரு பெண்ணோ அல்லது ஒரு முக்கியமான மீட்டிங்கில் அமர்ந்திருக்கும் ஓர் ஆணோ, எவராயிருந்தாலும் அவர் மனதிற்குள் ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு அதை வெளியில் சொல்லி நிரூபிக்க முயன்று கொண்டிருப்பார்.
தன்னம்பிக்கை கொண்டிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், எப்பவும் தான் சொல்வதே 'சரி', தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும், தான் சொல்வதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றெல்லாம் நினைப்பது உங்கள் விருப்பமல்ல, உங்கள் ஈகோவின் விருப்பம். உங்கள் ஈகோவின் விருப்பத்தை நிறைவேற்ற நினைப்பது உங்களுக்கு அதிக மன அழுத்தத்தைத் தந்து, சண்டை சச்சரவுகளை உண்டுபண்ண மட்டுமே உதவும். அது எந்த விதத்திலும் மன அமைதியைத் தராது.
எவரும் உங்களை விமர்சிப்பதோ அல்லது பிறர் உங்கள் நற்பெயரைத் தட்டிச் செல்வதோ உங்களது ஈகோவிற்குப் பிடிக்காது. சுய விழிப்புணர்வுடன் கீழே கூறப்பட்டுள்ள 5 வகையான நல்ல பழக்கங்களை தினசரி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஈகோவை மூட்டைக்கட்டி வைத்து, முதிர்ச்சியுற்ற மனோநிலையில் சிறப்புடன் வாழலாம்.
1. யாராவது உங்கள் கருத்துக்களுடன் உடன்படவில்லை என்றால் அல்லது காட்டமாகப் பதிலளித்தாரென்றால் அதற்கு நீங்கள் உடனடியாக எதிர் வினையாற்றத் தேவையில்லை. அமைதியாய் இருந்து விடுவது உங்களுக்கு நிம்மதி தரும். தேவையற்ற வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தும்.
2. சில நேரம் உங்கள் கருத்து பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால், உங்கள் ஈகோ உங்களை மதிப்பற்றவராய் உணரச் செய்யும். அது உண்மையல்ல. ஒவ்வொரு வாக்குவாதத்தின்போதும் நீங்களே ஜெயிக்க வேண்டும் என நினைக்காமல் பிறர் கூறுவதையும் கேளுங்கள். அது தவறாகவே இருந்தாலும் அதை நிரூபிக்க நீண்ட நேரம் போராடுவதைத் தவிர்த்து, போனால் போகட்டும் என விட்டுவிடுவது உங்களுக்கு அதிக பலம் தரும்.
3. எந்த நேரமும் நல்லவராயிருந்து, அதிகம் உழைத்து, நற்பெயரைத் தக்க வைத்துக்கொள்ள நினைப்பது சில நேரம் சலிப்படையச் செய்யும். ஈகோ சொல்வதைக் கேட்டு, 'இன்னும், இன்னும்' என்று பறக்காமல், இருப்பதை வைத்து திருப்திப்படுவது மன நிம்மதிக்கு வழிவகுக்கும்.
4. நாலு பேருடன் சேர்ந்திருக்கும்போது, எப்பொழுதும் உங்கள் பேச்சு உரக்க ஒலிக்க வேண்டும், மற்றவர்கள் அதைக் கேட்க வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். பிறரையும் பேச அனுமதியுங்கள். அவர்களும் நற்பெயரை தட்டிச் செல்லட்டும். உண்மையில், நீங்கள் நம்பிக்கையோடு ஒரு அடி பின்னால் நிற்கும்போது, உங்களின் உண்மையான பலம் அதிகரிக்கும்.
5. ஒவ்வொரு விஷயத்தையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைப்பது தவறானது. அதாவது உங்கள் ஈகோ, வாழ்க்கையில் அடுத்து நடக்கவிருக்கும் திருப்பங்களை நம்ப மறுக்கிறது என்பதையே இது காட்டுகிறது. வாழ்க்கை எப்பவும் நாம் திட்டமிட்டபடி நடப்பதில்லை. எனவே, உங்களால் செய்யக்கூடிய செயல்கள் மீது கவனத்தை செலுத்துங்கள். உங்களால் செய்ய முடியாதவற்றை விட்டுவிடுங்கள். அப்போதுதான் உங்கள் மனம் அமைதி பெறும்.