
சீட்டுக் கட்டுக்குள் ஒரு காலண்டரே ஒளிந்திருக்கும் ரகசியம் தெரியுமா உங்களுக்கு?
ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள்; சீட்டுக் கட்டிலும் 52 சீட்டுகள்.
ஒவ்வொரு பருவத்துக்கும் 13 வாரங்கள்; சீட்டுக் கட்டின் ஒவ்வொரு இனத்திலும் (க்ளாவர், ஆட்டின், ஸ்பேட், டயமண்ட்) 13 சீட்டுகள்.
வருடத்துக்கு நான்கு பருவங்கள்; ஒவ்வொரு எண் மற்றும் ஏஸ், கிங், குயின், ஜாக்குக்கும் 4 சீட்டுகள்.
வருடத்துக்கு 12 மாதங்கள்; படம் போட்ட (ராஜா, ராணி, ஜாக்கி) சீட்டுகள் ஒவ்வொன்றும் 4 வீதம் 12.
சிவப்பு நிறச் சீட்டுகள் பகலையும், கறுப்பு நிறச் சீட்டுகள் இரவையும் குறிக்கின்றன.
தோராயமாக இப்படி கணக்குப் போட்டால் – அதாவது பத்துக்கு அடுத்து, ஜாக் -11, ராணி – 12, ராஜா – 13. இவற்றின் கூட்டுத் தொகை – 31. இத்துடன், (1+2+3+4+5+6+7+8+9+10+11+12+13 =) 88 சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது 91.
இந்தத் தொகையை 4 இன எண்களோடு பெருக்கிக் கொள்ளுங்கள். 364, சரியா? இத்துடன் ஒரு ஜோக்கரை சேருங்கள். மொத்தம் 365. அதாவது ஒரு வருடத்தின் நாட்கள்!
ஆங்கிலத்தில் எண்கள் மற்றும் ராஜா, ராணி, ஜாக் எழுத்துகளின் எண்களைக் கூட்டுங்கள் – one, two, three, four, five, six, seven, eight, nine, ten, king, queen, jack – மொத்தம் 52! மீண்டும் 52 வாரங்கள்!
ஸ்பேடு இனம் விவசாயப் பணியைக் குறிக்கிறது; ஹார்ட்ஸ், அந்தப் பயிர்களை நேசிக்கச் சொல்கிறது; க்ளப்ஸ் செழுமை, வளர்ச்சிக்கானது; டயமண்ட் வளமையான அறுவடையைக் குறிக்கிறது.
சில சீட்டுக் கட்டுகளில் ஒரு ஜோக்கர் கூடுதலாக இருக்கும். இது லீப் வருடத்தைத் தெரிவிக்கிறது.
சீட்டு விளையாட்டும் கணக்கை அடிப்படையாகக் கொண்டதுதான். தம்மிடம் என்னென்ன சீட்டுகள் இருக்கின்றன, கீழே விழுவதும், எடுக்கப்படுவதுமான சீட்டுகள் எவை என்றெல்லாம் உன்னிப்பாக கவனிப்பது, எதிராளிகளிடம் என்னென்ன சீட்டுகள் இருக்கலாம் என்ற அனுமானம், அதற்கேற்ப தன் சீட்டுகள் தொகுப்பிலிருந்து செட்டுகளைச் சேர்ப்பதும், பிரிப்பதும் அல்லது புது செட்டை உருவாக்குவதுமாக விளையாடப்படும் புத்திசாலி விளையாட்டு என்றே சொல்லப்படுகிறது.
கைக்கு சீட்டுகள் வருவது அதிர்ஷ்டவசம்தான் என்றாலும், தொடர்ந்து விளையாடுவதும், வெற்றி பெறுவதும் புத்திசாலித்தனைத்தைச் சார்ந்தே இருக்கிறது என்பார்கள்.
அதுமட்டுமா, காலண்டரோடு சீட்டுக் கட்டை ஒப்பிடுவதும் சுவையானதுதானே!