பெட் டைம் ஸ்டோரீஸ் சொல்வதன் கிளைமாக்ஸ்!

Bedtime stories
Bedtime stories

அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் குழந்தைகள் அடுத்து அடுத்து வரிசையாக தரையில் பாய்களில் படுத்து இருக்கும். இரவில் தூங்க செய்ய தாத்தாவோ, பாட்டியோ, ' ஒரு ஊரில் ஒரு ராஜா..!' என்று ஆரம்பித்து அவர்களுக்கு தெரிந்த அல்லது தோன்றியவற்றை இட்டுக்கட்டி ஒரு கதையாக கூறுவார்கள். அவர்கள் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். கதை அதோடு ஓவர். முழு கதையை எந்த தாத்தாவது அல்லது பாட்டியாவது கூறியது என்பது சரித்திரத்திலேயே கிடையாது. இப்பொழுது நிலைமையே வேற லெவல். நோ தரை. கட்டிலில், மெத்தை மீதுதான் உறக்கம். இரண்டு குழந்தைகள் இருந்தாலே அதிகம். அந்த 'ஒரே ஒரு ஊரிலே..' கதையெல்லாம், இங்கு வேலைக்கு ஆகாது. குறிப்பாக ஆங்கில சொற்கள் அதிகம் இடம் பெற வேண்டும். போனால் போகிறது என்று இடையில் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் வார்த்தைகள் 'அலவ்ட்.' கதை கேட்பவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டும்.

கதை கேட்கும் பேரனோ, பேத்தியோ நடுநடுவில் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கூற வேண்டும். இல்லாவிட்டால், "போங்க, கிராண்ட்ப்பா (அல்லது கிராண்டமா) உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை,” என்று ஆங்கிலம் கலந்த தமிழில் இன்ஸ்டன்ட் சர்டிபிக்கெட் கிடைக்கும். போதா குறைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் கூறிய கதையிலிருந்து குவிஸ் கேட்டு அசரடிப்பார்கள்.

அவர்கள் டிவியில் பார்க்கும் கார்ட்டூன்கள், ஷோக்களிலிருந்து வரும் காரெக்டர்கள், தாத்தாவோ, பாட்டியோ கூறும் கதையில் இடம் பெற வேண்டும். அதில் மிருகங்கள், பறவைகள், கார்கள், ரயில்கள், ராக்கெட்டுக்கள் போன்ற எல்லாவறிற்கும் இடம் உண்டு. அப்படிப்பட்ட பாத்திரங்கள் பெயர்கள் தாத்தா, பாட்டிக்கு நினைவில் வராவிட்டால், கதை சொல்பவர்கள் பாடு திண்டாட்டம்தான். கதைக்கு ஒரு பாதையும் கிடையாது, முடிவும் கிடையாது. நடு நடுவில் தடம் மாறி ஆகாயம், பூமி, காடு, வீடு போன்று பல இடங்களுக்குக் கதை சென்றுவரும்.

இதையும் படியுங்கள்:
உற்சாகமும் பயனும் தரும் பொழுதுபோக்குகள் எவை தெரியுமா?
Bedtime stories

நடுவில் கதை கேட்கும் குழந்தை யோசிக்க ஆரம்பித்தால் , டேஞ்சர் கியூவில் நிற்கின்றது என்று பொருள். 'அட்டாக்' எந்த ரூபத்தில் வரும் என்று சொல்லமுடியாது. கதை சொல்பவருக்குத் திக்கென்று இருக்கும். யானை, புலி, சிங்கம், கரடி இவைகளைவிட கதையில் டைனோஸார்ஸ் இடம் பெற்று அவைகளின் வகைகள், பெயர்கள், பூர்வீகம் போன்ற விவரங்கள் இடம் பெற்றால் கதையின் சுவாரசியம் கூடும்; கதை சொல்பவருக்கும் தனி மதிப்பு கிட்டும்.

முக்கால்வாசி இரவுகளில் இந்த கதை டைமின் கிளைமாக்ஸில் தூங்கிவிடுவது குழந்தைகள் அல்ல; தாத்தாவோ பாட்டியோதான்.

சும்மா சொல்லக்கூடாது, இந்தக் காலத்தில் பெட் டைம் ஸ்டோரீஸ் சொல்வது சுலபமல்ல; பெரும் சவால்! அனுபவித்தவர்களுக்குத் தெரியும், அதன் அருமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com