
ரத்த சொந்தங்களாக இல்லாமல் நம்முடைய வாழ்வில் புதிதாக இணையும் நட்புகள், உறவுகள் போன்றவை வந்தவை. வாய்த்தவை என்பது நம்முடன் பிறந்த சகோதர சகோதரிகள், அத்தை, மாமா, சித்தி போன்ற ரத்த சம்பந்தமுடைய உறவுகள். இந்த இரண்டிலும் சேராத நமக்கு வாய்த்த ஸ்பெஷல் உறவான கணவனோ அல்லது மனைவியோ (திருமண உறவு) சரியில்லை என புலம்புபவர்களா நீங்கள்?
இரு கை தட்டினால்தான் சத்தம்:
எப்போது பார்த்தாலும் சண்டை எதற்கெடுத்தாலும் வாக்குவாதம். வீட்டில் நிம்மதி என்பது கிடையாது என்று புலம்பினால் அதற்குக் காரணம் ஒருவர் மட்டும் அல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இரு கை தட்டினால்தான் சத்தம் வரும். எனவே குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவ இருவரின் பங்களிப்பும் அவசியம் தேவை. ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டுவது தேவையற்றது.
அவமதிப்பது ஆபத்து:
பேச்சு முற்றி வாக்குவாதமாக மாறும்பொழுது நீ நான் என போட்டி போடாமல் யாரேனும் ஒருவர் சட்டென பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை விடுத்து ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேசி, அவமதிக்கும் வகையில் பேசுவது பிரச்னையை பெரிதுபடுத்தும். சண்டை முடிந்து சமாதானம் ஆகும் பொழுது அடடா இப்படி பேசி விட்டோமே என்று வருத்தம் ஏற்படும். எனவே பேசும்பொழுது யோசித்து பேசுவது அவசியம்.
குடைச்சல் கொடுக்கக் கூடாது:
கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் வழக்கு ஒன்றுண்டு. நம் கணவரைப் பற்றி மற்றவர் தவறாக பேசினால் அதையே சாக்காக வைத்து குத்தி குடைந்து எடுக்கக் கூடாது. அதேபோல் மனைவியைப் பற்றி பிறர் தவறாக பேசினால் உடனே தையா தக்கா என்று குதிக்காமல் உண்மை என்ன என்று தெரிந்துகொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும்.
ஈகோ தலை தூக்கக்கூடாது:
தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று எப்பொழுதும் நாம் சொல்வதுதான் சரி என்று நினைக்காமல் வாழ்க்கைத் துணையின் பேச்சுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும். ஈகோ என்பது குடும்பத்திற்குள் எட்டிப் பார்க்க விடக்கூடாது. நான்தான் பெருசு, நான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று எண்ணினால் மகிழ்ச்சி என்பது காணாமல் போய்விடும்.
புரிதல் அவசியம்:
தம்பதிகளுக்கு இடையே புரிதல் என்பது மிகவும் அவசியம். என்னை புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறா என்று கணவனும், இவர் என்னை புரிந்து கொள்வதில்லை, என் விருப்பம் எது என்று தெரிந்து கொள்வதில்லை என்று இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இருவருமே எதிர் தரப்பினரின் ஆசைகளையும், ஏக்கங்களையும், விருப்பங்களையும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்:
கணவன் மனைவி இருவருமே மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். வீண் சந்தேகமும், கோபமும், எரிச்சலும், எதற்கெடுத்தாலும் அட்வைஸ் மழை பொழிவதும் உறவின் தன்மையை பாதிக்கும். நாம் மனதில் என்ன நினைக்கிறோம் என்பதை எதிர் தரப்பினரால் சரியாக புரிந்துகொள்ள முடியாது. எனவே பரஸ்பரம் எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக தெரிவித்து கொள்ளப்பழகினால் இல்லறம் நல்லறமாக அமையும்.