சச்சரவுகளுக்கு தீர்வாகும் சமாதானப் போக்கின் முக்கியத்துவம்!

Peaceful solution to conflicts
Peaceful solution to conflicts
Published on

குடும்பம், உறவுகள், பணியிடம் மற்றும் வெளியிடங்களில் மனிதர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்படுவது சகஜம். அப்போது சண்டை சச்சரவுகள் எழுவதும் நேரலாம். இவற்றை திறம்பட தீர்ப்பதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சச்சரவுகளை தீர்க்கும் சமாதானத்திற்கு வழிவகுக்கும் சில உத்திகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

கருத்து வெளிப்பாடு: உறவினர்களுக்குள் அல்லது அலுவலகத்தில் கருத்து மோதல்கள் ஏற்படும்போது அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஏதுவாக உரையாடல்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

கவனமாகக் கேட்டல்: மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து எதிராளியிடம் சமாதானமாக போக விரும்புபவர்கள் பொறுமையாக அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். அவர்களின் கண்களைப் பார்த்து குறுக்கிடாமல் அவர்கள் பேசுவதை கவனத்துடன் கேட்கும்போது உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரும். கோபமும் வேகமும் கூட குறையக்கூடும்.

காரணத்தைக் கண்டறியவும்: நம்மிடம் பேசும் நபர்கள் எதற்காக நம் மீது கோபப்படுகிறார்கள் அல்லது குற்றம் சாட்டுகிறார்கள் என்று அறிந்து கொள்வது அவசியம். மோதல்களின் அடிப்படை சிக்கல்களைப் புரிந்து கொள்வதுதான் தீர்வுக்கு வழிவகுக்கும். எப்போதுமே மூன்றாம் நபர் சொல்வதைக் கேட்டு நம்பாமல் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு தெளிவு பெறுவது மிகவும் அவசியம்.

அனுதாபம்: எம்பத்தி எனப்படும் அனுதாபம் எப்போதும் அவசியம். மோதலில் ஈடுபட்டுள்ள பிறரின் கருத்துக்களை, உணர்வுகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய இடத்தில் இருந்து நம்மை வைத்து யோசித்து அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வது மட்டுமே பிரச்னைகளை தீர்க்க வழிவகுக்கும்.

தீர்வுகள்: இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்படும் மோதல்களை தடுக்கும் நிலையில் இருக்கும் ஒருவர் இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்டு அறிவது அவசியம். அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிந்து இரு சாராருக்கும் பரிந்துரை செய்வது அவசியம்.

மரியாதை: ஒருவர் தன்னிடம் மோதல் போக்கை கடைபிடிக்கும்போது அவரிடம் பேசும் வார்த்தைகளில் மரியாதை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் பேச வந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு சம்பந்தமில்லாத பிரச்னை பற்றி பேசுவது சிக்கலை இன்னும் அதிகமாக்கவே செய்யும்.

இதையும் படியுங்கள்:
வாழ்வாங்கு வாழ வைக்கும் வாழைத்தண்டு சாறு!
Peaceful solution to conflicts

அமைதி மற்றும் நிதானம்: எந்த சூழ்நிலையிலும் நிதானத்தைக் கைவிடவே கூடாது. அமைதியான நிலையிலேயே பேசுவதும், பிறர் பேசுவதை பொறுமையாகக் கேட்பதுமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தெளிவான ஒரு தீர்வுக்கு வர முடியும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதோ அல்லது இயங்குவதோ சிக்கலை அதிகமாகி மோதலை தீவிரமாக்கிவிடும். தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை அமைதியாகக் கேட்கும்போதுதான் கோபப்படாமல் நிதானமாக அவற்றுக்கு பதில் அளிக்க முடியும். தாம் தவறே செய்யவில்லை என்றாலும் தேவையே இல்லாமல் வந்து மோதல் போக்கை கடைபிடிப்பவர்களிடம் வீண் விவாதங்களுக்கு தான் தயாராக இல்லை என்பதை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

மன்னிப்பும், பக்குவமும்: பிறர் தனக்கு கெடுதலை செய்திருந்தாலும் மன்னித்து மறப்பதுதான் புத்திசாலித்தனம். ஏனென்றால் காலப்போக்கில் நாம் அவற்றை மறந்து விடுவோம். நிகழ்காலத்தில் மட்டும் ஏன் அவற்றை நினைத்து வருந்தி கசப்பான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்? பதிலுக்கு வெறுப்பையும் துவேஷத்தையும் வெளிப்படுத்துவது இரு சாராருக்கும் தீராத பகையை உண்டாக்கிவிடும். கெடுதல் செய்த நபரிடம் அப்போது பேசப் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது. பின்பு நிதானமாக யோசித்துப் பார்த்து மனதார அவரை மன்னிப்பது தன்னுடைய மனதிற்கும் அமைதியான வாழ்க்கைக்கும் மிகவும் நல்லது. இந்தப் பக்குவம் இருந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட மோதலையும் சமாளிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com