

நம் உடலோடு ஒட்டி உறவாடுவதில் உள்ளாடைகளுக்கு பெரும் பங்கு உண்டு. அதிலும் பெண்களின் ஆரோக்கியம் அவர்கள் அணிந்திருக்கும் உள்ளாடையின் வகைகளை பொறுத்தே இருக்கிறது. சிலர் இதனை சிறிய விஷயமாக பொருட்படுத்தாமல் இருப்பதால், அசௌகரியம் முதல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த வகையில். ஒவ்வொரு பெண்ணும் உள்ளாடைகளில் அவசியமாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
உள்ளாடையின் துணி வகை: உள்ளாடைகள் வாங்கும்போது தளர்வான காட்டன் துணிகளாக இருக்கும்படி பார்த்து வாங்குவது ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில். இது ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி, காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும். நைலான், பாலிஸ்டர் போன்ற துணிகள் உள்ள உள்ளாடைகளால் ஈரப்பதம் மற்றும் வெப்பம் அடைபடுவதோடு, ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உள்ளாடையை மாற்றுதல்: ஒரு நாளைக்கு மேல் அணியும் உள்ளாடைகளால் பாக்டீரியா வளர்ச்சி ஏற்பட்டு துர்நாற்றம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் தினமும் உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும், நன்றாக சுத்தம் செய்யப்பட்ட உள்ளாடைகளிலும் பாக்டீரியா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், பயணம் செய்பவர்களுக்கு அதிகமான வியர்வை வெளியேறும் என்பதால் தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றுவது சிறந்தது.
தாங் (Thong) வகையிலான உள்ளாடைகள்: ஒருவர் பின்பற்றும் சுகாதார பழக்க வழக்கங்களே அனைத்திற்கும் முதன்மையானதாகும். அந்த வகையில் தாங் (Thong) வகையிலான உள்ளாடைகளைப் பயன்படுத்துவதால் தொற்றுகள் ஏற்படும் என்ற தவறான நம்பிக்கை பலருக்கும் உள்ளதால், இவற்றை அணிவதால் எரிச்சல் மற்றும் அசௌகரியம் இருக்கும் பட்சத்தில் கவனமாக இருக்கவும்.
உள்ளாடைகள் இல்லாமல் தூங்குவது: அவ்வப்போது உள்ளாடைகள் இல்லாமல் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதால் காற்றோட்டம் மேம்பட்டு, ஈரப்பதத்தை குறைத்து, வெப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, சௌகரியம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. இல்லையெனில் தளர்வான காட்டன் ஆடைகளை அணியுங்கள்.
வொர்க் அவுட்டுகள் செய்யும்போது அணிய வேண்டிய உள்ளாடைகள்: வொர்க் அவுட் செய்யும் சமயங்களில் தசைகள் உராய்வு மற்றும் வியர்வை ஏற்படும் என்பதால் சருமத்தைப் பாதுகாப்பதற்காக உடற்பயிற்சிக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவதே சிறந்தது. இத்தகைய ஆடைகள் ஈரப்பதத்தை உடனடியாக உறிஞ்சி வறண்ட நிலையில் சருமத்தை வைத்து எரிச்சலை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாடைகளை சுத்தம் செய்தல்: உள்ளாடைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்த வாசனை இல்லாத எரிச்சல் அல்லது அலர்ஜி ஏற்படுத்தாத சோப்பு மற்றும் மென்மையான டிடர்ஜென்ட் வகைகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மேலும், உள்ளாடைகளை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைக்காமல் தனியாக துவைப்பதே நல்லது.
பழைய உள்ளாடைகளை மாற்றுவது: நாள்தோறும் உள்ளாடைகளை தவறாமல் சுத்தம் செய்து பயன்படுத்தினாலும், நாளடைவில் பாக்டீரியாக்கள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பழைய உள்ளாடைகளுக்கு பதிலாக புதியதை அணிவது சிறந்தது.
மேற்கூறிய முறைகளை கவனத்தில் கொண்டு உள்ளாடைகளை சுத்தம் செய்யும்போது உடலோடு ஒட்டி உறவாடும் உள்ளாடைகளால் பெண்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது.