பாடமா..? அதுவும் கண்ணாடியிடமா? கண்ணாடி முன்னாடி...

mirrors
mirrors
Published on

பார்ப்பவர் முகத்தை காட்டுவதே கண்ணாடி என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அதைத் தாண்டி பல பாடங்களை அது நமக்கு தருவதை, யோசித்தால் மட்டுமே உணர முடியும்.

பாடமா…? அதுவும் கண்ணாடியிடமா என நினைக்காமல் யோசித்துப் பாருங்கள்.

முதல்பாடம்:

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது.

அது போல் உன் சகோதரனிடம் - நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

இதையும் படியுங்கள்:
நேசிப்போம் நம்மை நாமே... கண்ணாடி பயிற்சி தெரியுமா?
mirrors

இரண்டாவது பாடம்:

கண்ணாடிக்கு முன்னால்நாம் நிற்கும் போதுதான் நம் குறையைக் காட்டுகிறது. அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடுகிறது.

அது போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.

மூன்றாவது பாடம்:

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லை. மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக எடுத்து வைக்கிறார்.

அது போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

ஆகவே ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள் என்பதை மனதில் நிறுத்தி . மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதன்படிசெய்ய வேண்டும்

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை பார்க்கும்போது இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்.. இவை உங்களின் மனத்தை அலங்கரிக்கட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com