

அந்தக் காலத்தில் ஊர் பயணத்துக்கும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் கால்நடையாகவே பயணம் செய்பவர்கள் பலர் உண்டு. வசதி படைத்தவர்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டி அதாவது, ரயில் மற்றும் பேருந்துகள் இல்லாத நிலையில் அப்படியே இருந்தாலும் பேருந்துகளே போக முடியாத இடங்களுக்குச் செல்லும் நிலையில் நடை பயணமாகவே செல்வது வழக்கம். அப்படி அவர்கள் செல்லும் அந்தப் பாதையில் அக்காலங்களில் பல்வேறு இடங்களில் சுமைதாங்கி கற்கள் காணப்படும்.
அதேபோல், மலை மீதிருக்கும் கோயில்களின் பாதைகளில் பயணிக்கும் பாதசாாிகள், தங்களது பயணக் களைப்பு தீர ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் கருங்கற்களால் ஆன சுமைதாங்கிகளில் தங்களின் முதுகில், தலையில், கையில் கொண்டுவந்த பொருட்கள் அடங்கிய பை மற்றும் மூட்டைகளை சுமைதாங்கி கற்களில் வைத்து விட்டு இளைப்பாறுவது வழக்கம். அந்த சுமையானது சுமைதாங்கி கற்களுக்கு வலிக்காது, வலிக்கிறது என சொல்லவும் தொியாது. அதேசமயம், சுமைகளையும் சுமை எனக்கருதி கீழே தள்ளிவிடாதல்லவா!
சுமைதாங்கி கற்கள் எப்படி பிரதிபலன் எதிா்பாராமல் வழிப்போக்கர்களின் சுமையைத் தாங்குகிறதோ, அதே போலத்தான் நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து, முகவரி தந்த தாய், தந்தை இருவரும் இன்றைய இளைய தலைமுறையினர்க்கு சுமைதாங்கிகள்தான்.
பத்து மாதம் உங்களை சுமந்து பெற்ற தாய் மற்றும் உங்களை வளா்த்து ஆளாக்க அரும்பாடு பட்ட தந்தை இருவரும் தெய்வத்தோடு ஒப்பிடக்கூடியவர்கள். உங்களின் வளா்ச்சிக்காக பல விதங்களில் சுமைகளைத் தாங்கியவர்கள். அவர்கள் அவர்களுடைய முதுமையில் என்ன கேட்கிறாா்கள்? அவர்கள் இருவரும் உங்களுக்கு சுமையாகப் போனதேன்? நீங்கள் கரையேறி வாழ்க்கைப் பயணம் செய்ய அவர்கள் சுமந்த சுமை கொஞ்ச நஞ்சமல்லவே. அது தொியாமல் அவர்களை உதாசீனம் செய்யும் உங்கள் மனது என்ன கருங்கற்களால் உருவாக்கப்பட்டதா?
பொதுவாகவே குடும்ப உறவுகளில் விாிசல் விழாமல் இருக்க கலந்து பேசுங்கள், கலைந்து பேசாதீா்கள், அனைத்தையும் களைந்தும் பேசாதீா்கள். மனம் விட்டுப் பேசாமல் போனால் ஏற்படும் மன உளைச்சலில் மருத்துவரைத்தான் பாா்க்க நோிடும். மனசும் நேரமும் சரியில்லை என ஜோசியரைப் பாா்க்க வேண்டாம். நமது மனதில் நல்ல எண்ணம் இருந்தால், இறை நம்பிக்கை இருந்தால், மனசாட்சி கடைபிடிப்பவராய் இருந்தால், பெற்றோரின் மனது சங்கடப்படாதவாறு இருந்தால், சந்தோஷமே சந்தடி சாக்கில்லாமல் நமது வீட்டிற்கு வருமே!
பொதுவாக, பெற்றோா்களே குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்காதீா்கள். வறுமை என்றால் என்னவென்று குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக்கொடுத்து வளருங்கள். நல்ல நெறிமுறைகளோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் வழிமாறிப் போவதில்லை. அப்படியும் சிலர் மனைவி வந்ததும் மாறினால் பெற்றோா்களை சுமையாய் நினைத்தால் அவர்கள் மனது மென்மையானதே அல்ல, சாலைகளின் நடுவே நட்டு வைத்திருக்கும் சுமைதாங்கி கருங்கற்கள்தான். அவர்கள் மனதில் ஈரம் அறவே இருக்க வாய்ப்புகளே இல்லை.