

1. ரெஸ்டாரன்ட் ஆஃப் மிஸ்டேக்கன் ஆர்டர்ஸ் (restaurant of mistaken orders): இந்தப் பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? பெயருக்கு ஏற்ற மாதிரியே இந்த உணவகத்தில் நாம் ஒன்று ஆர்டர் செய்தால் மற்றொரு உணவு கொண்டு வருவார்கள். ஆனால், இங்கே உண்ண வருபவர்கள் இதற்கெல்லாம் கோபம் கொள்ள மாட்டார்கள். இந்த உணவகத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் டிமென்ஷியா என்ற மறதி வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்.
பொதுவாக, இம்மாதிரி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரால் ஒதுக்கப்படுவார்கள். ஆனால், இவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டதுதான் ரெஸ்டாரன்ட் ஆப் மிஸ்டேக்கன் ஆர்டர்ஸ். இந்த உணவகம் ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ளது.
2. Twins restaurant in New York: 1994 முதல் 2000 வரை மான்ஹாட்டனின் அப்பர் ஈஸ்ட் சைடில் இயங்கி வந்த இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது டெபி மற்றும் லிசா கான்ட்ஸ் என்ற இரட்டை சகோதரிகளால் நடத்தப்பட்டது. இங்கு பணிபுரிபவர்கள் அனைவருமே இரட்டையர்கள். இங்கு ஆர்டர் செய்யும் உணவுகளும் இரண்டாக வரும்; கொண்டு வருவோரும் இரண்டு பேர்தான். இதுபோல் ரஷ்யாவிலும் உள்ளது.
3. இக்ளு கஃபே (Igloo cafe): இந்த இக்ளு ஹோட்டல் பல இடங்களில் உள்ளது. இக்ளூ கஃபே காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ளது. இங்கு காஷ்மீரி காவா (டீ), சூடான காபி மற்றும் ஸ்நாக்ஸ் மட்டுமே கிடைக்கும். இங்கு நுழைவதற்கே நூறு ரூபாய் கொடுக்க வேண்டும். காஷ்மீரின் குல்மார்க்கில் அமைந்துள்ள பனிக்கட்டியால் கட்டப்பட்ட ஒரு காபி ஷாப் இது. இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மிகப்பெரிய இக்ளு கஃபே என்று கூறப்படுகிறது. இந்த கஃபே முழுவதும் பனிக்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. அதன் உட்புறத்தில் மேஜைகள் மற்றும் பெஞ்சுகள் பனிக்கட்டிகளால் செய்யப்பட்டவை. கஃபேயின் சமையலறை அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இயக்கப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் பனி சூழலில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறுகிறார்கள்.
4. நேச்சர்ஸ் டாய்லெட் கஃபே, அகமதாபாத் (Toilet hotel): இது பல நாடுகளில் இருந்தாலும் இந்தியாவிலும் உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அருகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஒரு கருப்பொருள் உணவகமாகும். இது கழிப்பறை கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வழக்கமான நாற்காலிகளுக்கு பதிலாக கழிப்பறை தொட்டிகள் அல்லது கமோட்கள் மீது அமர்ந்து உணவு உண்கிறார்கள். இங்குள்ள நாற்காலி, மேஜை, உணவு பாத்திரங்கள், உணவுகள் அனைத்துமே கழிவறை வடிவில் மற்றும் கழிவறை சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.
5. நியூ லக்கி உணவகம், குஜராத்: உண்மையான கல்லறைகளுக்கு மத்தியில் உணவருந்தும் மக்கள்.குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நியூ லக்கி உணவகம் லால் தர்வாசா (Lal Darwaza) பகுதியில், நேரு பாலம் அருகே அமைந்துள்ளது. சூஃபி துறவிகளின் 26 கல்லறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. உணவகம் கட்டப்பட்டுள்ள நிலம் ஒரு பழைய முஸ்லிம் கல்லறை ஆகும். உணவகத்திற்குள் உள்ள கல்லறைகளை அகற்ற விரும்பாமல் அவற்றை சுற்றியுள்ள காலி இடங்களில் மேசைகள் மற்றும் இருக்கைகளை அமைத்து இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலமானது.
குறிப்பாக தேநீர் மற்றும் மாஸ்கா பன் (Bun - Maska) போன்றவற்றிற்கு பெயர் பெற்றது. கல்லறைகளுக்கு அருகில் சாப்பிடுவது மக்களுக்கு சகஜமாகி விட்டது. இது ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான உணவு அனுபவத்தை வழங்குவதாகக் கூறுகிறார்கள். புகழ் பெற்ற ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் இந்த உணவகத்தின் வழக்கமான வாடிக்கையாளர் ஆவார். அவர் தன்னுடைய ஒரு ஓவியத்தை பரிசாகவும் அளித்துள்ளார். அது இன்றும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
6. ஜெயில் கஃபே: பீகாரில் ‘ஜெயில் கஃபே’ என்ற பெயரில் சிறைச்சாலை கருப்பொருள் கொண்ட உணவகம் உள்ளது. இந்த உணவகம் ராம்பூர் நீதிபதிகள் காலனியில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு பணியாளர்கள் கைதிகள் போல உடை அணிந்து சேவை செய்கிறார்கள். காவலர்கள் சிறை காவலர்கள் போலவும் உடை அணிந்து காணப்படுகிறார்கள். மேலும், உணவகத்தின் உட்புறம் சிறிய கேபின்கள் மற்றும் சிறைச்சாலை கிரில்கள் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இது பீகாரின் முதல் தீம் - சார்ந்த ஜெயில் கஃபே என்றும் கூறப்படுகிறது.