கீரைகளும் இலைக்காய்கறிகளும் ஆரோக்கியமானதாகவும் சத்தானதாகவும் இருந்தாலும் மழைக்காலத்தில் சிலவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். அதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மழைக்காலத்தில் இலைக் காய்கறிகளையும் கீரைகளையும் தவிர்க்க வேண்டியதன் காரணங்கள்:
தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள்: பொதுவாக, எல்லாக் காய்கறிகளுமே ரசாயன உரங்கள் போட்டுதான் விளைவிக்கப்படுகின்றன. மேலும், அவற்றில் பூச்சிகள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் போன்றவை தங்கியிருக்கும். கடையில் அவற்றை வாங்கி வந்ததும் சமைக்கும் முன்பு, நீரில் நன்றாக அலசி விட்டுத்தான் உபயோகிக்கிறோம். ஆனால், மழைக்காலத்தில் என்னதான் நீரில் அலசி எடுத்தாலும் இலைக்காய்கறிகள் மற்றும் கீரைகளில் ஒளிந்துள்ள பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்றவை நோய்க்கிருமிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஏனென்றால், மழைக்காலம் ஈரப்பதத்தை அதிகரிக்க வழி வகுக்கும். மேலும், இலைக் காய்கறிகள் மற்றும் கீரைகள் மண் அல்லது நீரில் இருந்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளால் எளிதில் மாசுபடலாம்.
அசுத்தங்கள் மற்றும் நச்சுக்கள்: கன மழையினால் மண் அரிப்பு மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படலாம். இவை இலைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் அசுத்தங்கள் மற்றும் நச்சுக்களை கொண்டு சேர்க்கலாம். இவற்றை உண்ணும் போது உடலுக்கு பல விதமான தீங்குகளைத் தரும்.
பூஞ்சை வளர்ச்சி: காய்கறிகளை உரமிட்டு வளர்த்தாலும் அவற்றில் பூஞ்சைகள் இருப்பது சகஜம். வெயில் காலத்தில் இவை தாவரங்களின் இருக்கும்போதே அழிந்து விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், மழைக்காலத்தில் இலைக் காய்கறிகளில் போதுமான சூரிய ஒளி வீசாததால் பூஞ்சை வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் பலவிதமான நோய்கள் ஏற்படலாம்.
பூச்சிக்கொல்லி எச்சம்: மழைக்காலத்தில் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இவற்றில் அதிக அளவில் சேரும் அபாயம் உள்ளது. எனவே, இவை உட்கொள்ள ஏற்றவை அல்ல.
செரிமானப் பிரச்னைகள்: சிலருக்கு செரிமானப் பிரச்னைகள் இயற்கையாகவே உடலில் இருக்கும். ஈரமான நிலையில் இருக்கும் பச்சை இலைக் காய்கறிகளையும் கீரைகளையும் சமைத்து உண்டாலும் அவர்களுக்கு செரிமான அசௌகரியம் அதிகமாக இருக்கும். வாயு அல்லது வீக்கம் ஏற்படலாம்.
ஊட்டச்சத்து இழப்பு: கனமழையின் காரணமாக மண்ணில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் இலைக் காய்கறிகளிலும் கீரைகளிலும் சேராமல் போகும் வாய்ப்பு உண்டு. எனவே, இவற்றை உண்டாலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும். மழையினால் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தாவரங்களால் திறம்பட உறிஞ்சப்படாமல் போகும்.
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய இலைக் காய்கறிகள் மற்றும் கீரைகள்: இலைக் காய்கறிகளான முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃப்ளவர், அரைக்கீரை, பசலைக் கீரை, தண்டுக்கீரை, முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலத்தில் இலைக் காய்கறிகள் கீரைகள் ஏற்படுத்தும் நோய்கள்: மழைக்காலத்தில் இவற்றை உண்பதால் இரைப்பை குடல் தொற்று, ஒவ்வாமை, சுவாசப் பிரச்னைகள், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம். எனவே, இந்த காய்கறிகளை உண்ண நேர்ந்தால் அவற்றை சமைக்கும் முன்பு அழுக்கு, மண் மற்றும் சாத்தியமான அசுத்தங்களை அகற்ற ஓடும் நீரில், கீரைகளை நன்கு அலச வேண்டும். மாசுபாடுகளைத் தவிர்க்க நம்பகமான ஆட்களிடம் இவற்றை வாங்க வேண்டும். வாடிப்போன அல்லது நாற்றம் வீசும் கீரைகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவதைத் தவிர்த்து உடனடியாக அவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.