கல்லின் மீது தவறி விழுந்த பானை..!

lifestyle story...
lifestyle story...Image credit - pixabay.com
Published on

பாவம்! ஏதோ கஷ்டப்படுகிறானே என்று நினைத்து கெட்டவனுக்கு, நல்ல எண்ணத்தோடு நாம் செய்யும் உதவி, கல்லின் மீது தவறி விழுந்த பானைக்கு சமம்.

எப்படி...??

ஔவைப்பாட்டி சொல்லும் உண்மை என்ன...??

"வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி

அங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் - பாங்கு அறியாப்

-பல அறிவாளருக்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம் "

அந்தக் காலத்தில், நாட்டு வைத்தியர் வீடு வீடாக சென்று வைத்தியம் பார்ப்பது வழக்கம். அவரது பை அல்லது பெட்டியில் விதவிதமாக சூரணங்கள், தைலங்கள், பொடிகள், லேகியங்கள் என பல மருந்துகள் இருக்கும்.

ஒரு வீட்டு திண்ணையில் போய் அவர் உட்கார்ந்தவுடனே, உடல்நலம் சரியில்லாமல் அந்த வீட்டில் இருப்பவர்களும், அக்கம்பக்கத்தினரும் வருவார்கள். பல்வலி, உடம்பு வலி, கண் கோளாறு, வயிற்றுக் கோளாறு, வாயு உபத்திரவம் என எல்லாவற்றிற்குமே அவர் மருந்து கொடுப்பார். ஒரு சர்வரோக நிவாரணியே அவரிடம் இருக்கும்.

"இதை ரெண்டு நாள் சாப்பிடு! எண்ணெய் சேர்க்காதே! கத்திரிக்கா சாப்பிடாதே! வெறும் வயிற்றில் சாப்பிடாதே!" எனக் கூறி மருந்துகளை கொடுப்பார். அவர் புறப் படுகையில், அரிசி, பருப்பு, பழங்கள், துணிமணி, நெய் என மருந்துக்கு பீஸாக அனைவரும் கொடுப்பார்கள். பணமெல்லாம் கிடையாது. பின், வைத்தியர், பக்கத்து தெரு, ஊர்கள் எனச் சுற்றிவிட்டு அடுத்த மாதம்தான் வருவார். எப்போதுமே பிஸி. அவரோடு கூடவே, அவரது பையன் பெட்டியைத் தூக்கி கொண்டு வருவான்.

ஒரு சமயம் வைத்தியர், காட்டுப்பாதையில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்கையில், வழியில் ஒரு புலி குறுக்கே உறுமிக்கொண்டு படுத்தவாறே, முன்னங்கால்களில் ஒன்றை நக்கி கொண்டு நகராமல் அமர்ந்திருந்தது. அதைப்பார்த்த வைத்தியர், ஒரு மரத்தின் பின்னே ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

மணிக்கணக்காக புலி நகரவில்லை. வைத்தியர் கூர்ந்து கவனிக்கையில், புலியின் முன்னங்காலில் பெரிய கம்பி முள் குத்தி, அதைச்சுற்றி ரத்தம், சீழ் வடிந்தது. அதைக்கண்ட வைத்தியர் பரிதாபப்பட்டு, வைத்தியம் செய்ய எண்ணினார். மெதுவாக அதன் அருகே சென்று, தன் பெட்டியிலிருந்து குறடை எடுத்து அதன் காலில் இருந்த கம்பி முள்ளை பிடுங்கிப் போட்டு, நன்கு துடைத்து மருந்து வைத்து கட்டுப் போட்டார். வலி குறைந்ததால், புலி மெதுவாக எழுந்து காலை ஊன்றிவைத்து கண்களில் மகிழ்ச்சியுடன் வைத்தியர் அருகே வந்தது.

இதையும் படியுங்கள்:
ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!
lifestyle story...

பிறகு…?

அவரின் செருப்பு, பெட்டி, தலைப்பாகைதான் அங்கிருந்தது. பாவம்!....அவர் பசித்த புலிக்கு இரையாகிவிட்டார்

இது எது போலவென்றால், நன்றி இல்லாதவனுக்கு, நல்லெண்ணத்தோடு அவன் கஷ்டப்படும் சமயம் உதவுவது, "ஒரு கல்லின் மீது தவறி விழுந்த பானையின் கதிக்கும் மேலே" அதாவது வைத்தியரின் கதி மாதிரி என மேற்கூறிய பாடல் மூலம் அனைவருக்கும் புரிய வைத்துள்ளார் ஔவைப்பாட்டி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com