
தற்போதைய நவீன காலத்தில், அலுவலகம் மற்றும் குடியிருப்புகளை அமைக்க, வானளாவிய உயர்ந்த பல அடுக்குமாடிக் கட்டடங்களே கட்டப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் தாங்கள் குடியிருக்கும் அல்லது பணிபுரியும் தளத்தை சென்றடைய எலவேட்டர் (Elevator) எனப்படும் மின் தூக்கி (Lift)களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
கட்டடத்தின் அளவு மற்றும் அதைப் பயன் படுத்தும் மனிதர்களின் சராசரி எண்ணிக்கைக்கு ஏற்றபடி இந்த லிஃப்ட்களின் அளவும் எண்ணிக்கையும் அமையும். இந்த லிஃப்ட்களின் உள்ளே முகம் பார்க்கும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் பார்த்திருக்கக் கூடும். அந்தக் கண்ணாடியின் பயன்பாடு என்ன என்பதை எப்பொழுதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பாதுகாப்பு உள்ளிட்ட பல வகையான காரணங்களை இதற்கு நாம் கூறலாம். லிஃப்ட்டின் உள்ளே சென்றதும், அங்குள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கும் உங்கள் உருவத்தை நீங்கள் பார்க்க ஆரம்பித்தால், அங்கு நீங்கள் தனியாக இல்லை என்ற மனநிலையை உங்களுக்கு ஏற்படுத்தலாம். எலவேட்டரில் உள்ள கண்ணாடி, மனோதத்துவ சாஸ்திரப்படி உங்கள் உள் மனதை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும், கிளாஸ்ட்ரோஃபோபியா என்னும் பய உணர்வை குறைக்க உதவும். மேலும், 'லிஃப்ட் எப்போது நமது தளத்தை சென்றடையும்' என்ற உணர்வில் உண்டாகும் இதய படபடப்பு மற்றும் கை கால் நடுக்கத்தைக் குறையச் செய்யும்.
நாம் இருக்கும் சூழலைப் பற்றின விழிப்புணர்வை கண்ணாடி அதிகரிக்கச் செய்யும். இதனால், சிலர் மனதிற்குள் கிளர்ந்தெழும் வன்முறையைத் தூண்டும் உணர்வு தடுக்கப்படும். சிலருக்கு, மற்ற நண்பர்களுக்கிடையே நிகழும் காமெடியான பேச்சு மற்றும் சிறு சிறு சில்மிஷமான செயல்கள் கண்ணாடி பார்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். லிஃப்ட்டில் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது உங்கள் மனதிற்குள் ஓடும் சொந்த பிரச்னைகள் மறந்து, பிறரின் பேச்சிலோ, செயலிலோ உங்கள் கவனம் திசை திருப்பி விடப்படும். லிஃப்ட்டிற்குள் வருவோர் போவோரின் உடையலங்காரம் மற்ற அக்ஸசரீஸ் போன்றவற்றை அவர்கள் அறியாமலே கண்ணாடியில் மேம்போக்காகப் பார்த்து ரசித்து மகிழலாம். இது நேரடியாக ஒருவரை உற்றுப் பார்க்கும்போது எழும் தர்ம சங்கடம் தராது.
கண்ணாடி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் உதவும். லிஃப்ட்டின் சுவரில் மோதிக்கொள்ளாமல், இயல்பாக லிஃப்ட்டிற்குள் நுழைந்து, அவர்கள் இருக்கையை நிலைநிறுத்தி, விபத்தில்லாமல், கண்ணாடி பிரதிபலிக்கும் உருவத்தைப் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி அமர்ந்துகொள்ள உதவிகரமாயிருக்கும்.
ஒரு அலுவலக மீட்டிங்கில் பங்கு பெற அல்லது நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள், தங்கள் உடை மற்றும் தலையலங்காரம் சரியாக உள்ளதா என்பதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள லிஃப்ட்டின் கண்ணாடி உதவும்.
லிஃப்ட்டின் உள்ளே இருக்கும் கண்ணாடி, விளக்கு வெளிச்சத்தில் மேலும் அதிக பிரகாசம் கொடுத்து, சூழ்நிலையை மேம்படுத்தவும், வசதிப்படுத்தவும், ஆடம்பரமான தோற்றத்தைத் தரவும் உதவி புரியும்.