- பி.ஆர். இலட்சுமி
“வருடம்தோறும் சொல்லிக்கிட்டே இருந்தேன்… காதிலேயே வாங்கினால்தானே! எதிர்வீட்டுப் பெண் நம்ம பெண்ணோட இருபது மார்க் அதிகம் வாங்கிட்டா… உங்க சித்தப்பா பையன் பத்து மார்க் அதிகம் வாங்கிட்டான்…” இப்படியாக ஒவ்வொரு வீட்டிலும் பேருந்திலும், மெட்ரோ டிரெயினிலும் தினமும் கேட்டுக்கொண்டு பயணம் செய்வது நகர்ப்புறங்களில் பழக்கமாகிவிட்டது.
“நானும், அப்பாவும் உன்னை நம்பித்தான் இருக்கோம்னு நினைக்காதே! இது உன் வாழ்க்கைப் பிரச்னை. படிப்பு இருந்தால்தான் பணி. பணி இருந்தால்தான் மண வாழ்க்கை, புகழ், வசதி” என்று அன்புடன் குழந்தைகளிடம் அமர்ந்து பேச நேரம் ஒதுக்குவது கிடையாது. இதன்விளைவு பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே தலைமுறை இடைவெளி! இப் பிரச்னை பள்ளி, கல்லூரிவரைக்கும் சென்றுவிடும். 2020ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்குக் காரணமே இல்லாமல் அதிகப்படியான கோபம், மன அழுத்தம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன.
மதிப்பெண் குறைந்து ஃபெயிலாகிவிட்டால் என்ன? அடுத்தமுறை தேர்வாகி விடலாம். அதற்காக குழந்தைகளை ஓவரா அடுத்தவர் மத்தியில் அசிங்கப்படுத்தினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கிறது. யாரும் இல்லாத நேரத்தில் பெற்றோர்களைப் பற்றி இணையத்தில் எழுதுவது, பேசுவதில் தொடங்கி, தற்கொலைக்கு முயற்சி செய்வது வரை பல செயல்களில் ஈடுபடுகின்றனர்.
படிக்க வைப்பது என் கடமை, படித்தால் உனக்கு நன்மை என்ற உண்மையை மட்டும் குழந்தைகளுக்குப் புரிய வைத்துவிட்டு விலகி விடுவது பெட்டர்! எல்கேஜி படிக்கும்போது கீபோர்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், கராத்தே கிளாஸ் என அருகில் இருந்து பார்த்து வகுப்புகள் முடிந்து வீட்டிற்குக் கூட்டி வருவது பாதுகாப்பு. அதையே கல்லூரிவரை தொடர்வது சரியாகுமா? கைப்பிடி பிள்ளையாக வளர்த்தால் பிள்ளையின் வருங்காலத்திலும் பெற்றோரின் பாதுகாப்பைத்தானே தேடுவர்?
ஒரு பிள்ளையின் அப்பா குழந்தையின் படிப்பு முதல் திருமணம் செய்து, பேரன் பேத்தி எடுத்தவரை தொடர்ச்சியாக வீடு, பணியிடம் என காவல் செய்துகொண்டே இருந்தார். திடீரென ஒருநாள் அவர் இறந்துவிடவே அந்தப் பிள்ளையினால் சுயமாக இயங்கமுடியவில்லை.
மதிப்பெண்ணிற்கும், நாம் வாழும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என பலர் நினைக்கின்றனர். அது தவறு. நாம் வாங்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் உலக வாழ்க்கையைப் படிக்க உதவும் அடித்தளம். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் நாம் வாழப்போகும் வாழ்க்கைக்கான அஸ்திவாரக்கல். அவ்வளவுதான்… கல்லூரி வாழ்க்கை வாழ்க்கையை வாழ்வதற்கான சின்ன பேஸ்மெண்ட். அதுக்குப் பிறகு அந்த வீட்டிற்குத் தேவையான சுற்றுச்சுவர், தளம், சன்னல், கதவு இவையெல்லாம் அனுபவப்பாடங்கள்தான். எனவே, மதிப்பெண்ணை வைத்து எதற்காக ஒருவரை அளவிட வேண்டும்? வாழ்க்கை என்பது மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்கிறது என்ற போலியான கானல்நீர் மனிதர்களுக்கு எதற்கு?!