சுவாரஸ்யங்கள் நிறைந்த வாழ்க்கை சாத்தியமாவது எப்படி?

Life
Life

- மரிய சாரா

எல்லோருக்கும் எல்லாமும் மிக சுலபத்தில் கிடைத்துவிடுவது இல்லை. சிலருக்கு ஓரிரு முயற்சிகளில் கிடைக்கிறது,  சிலருக்கு பல போராட்டங்களுக்குப் பிறகு. இதுதான் வாழ்க்கையின் எதார்த்த நிலை. சிலருக்கு வாழ்க்கை முழுதும் போராட்டம்.

வெற்றி எனும் உச்சாணிக்கொம்பில் உட்கார, குறிக்கோளை அடைவது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை என்பதுதான் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் ஒரே ஒரு ஆயுதம்.

கரடுமுரடான பாதை கடினமானதுதான். ஆனால், அது தரும் பலன்தான் அசைக்கமுடியா பரிசாகிறது. குறுகிய வழி என்றுமே சிறியதாக, எளிதானதாக தோன்றலாம். ஆனால், அது சரியான வெற்றிக்கு வழி வகுப்பதில்லை.

ஒரு முறை மட்டுமே வெற்றியை அடைவது சாதனை அல்ல, மாறாக ஒவ்வொரு முறையும் அந்த வெற்றிக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. அப்படி வெற்றியை மீண்டும் மீண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் பல வழிகளை நிச்சயம் கடந்தாக வேண்டும்.

முயல் ஆமை கதை நாம் சிறுவயதில் கேட்டிருப்போம். முயல் விரைவில் வெற்றி இலக்கை அடையும் தன்மை இருந்தாலும் தனது அதீத கர்வத்தால்  ஓய்வெடுத்ததால்,  ஆமை மிக சிறிய அடிகளாக அளந்து சென்று வெற்றி பெற்றதாம்.

அந்த ஆமையின் வலிமை எவ்வளவு என நம்மால் அளந்து கூற முடியுமா? வெற்றிக்கான இலக்கின் தொலைவை பற்றியோ அல்லது தனது மிக பொறுமையாக நகரும் தன்மை பற்றியோ அல்லது முயல் போன்ற வேகம் கொண்ட சக போட்டியாளர் பற்றியோ எந்தக் கவலையும் கொள்ளாமல் மிகப் பொறுமையாக வெற்றியைத் தக்கவைத்த ஆமைக்கு இருந்த அதே மனநிலைதான் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

ஓராயிரம் தடைகள் வரலாம், பலர் நம்மை வீழ்த்த நினைக்கலாம், நம்மீது பலர் கற்களை வாரி எறியலாம். விமர்சனம் எனும் நெருப்பை உமிழலாம். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் கடிவாளம் கட்டிய குதிரை போல் இலக்கு ஒன்றே குறிக்கோள் என நாம் அனைத்தையும் ஏறி மிதித்து முன்னேறி செல்ல வேண்டும்.

சிறிய எறும்புகள் கூட்டமாய் செல்லும் பாதையில் நீங்கள் சிறிய தடை ஏற்படுத்தினாலும், சற்றும் தாமதிக்காமல் மாற்று பாதை வகுத்து பயணத்தைத் தொடர்வதைப் பார்த்திருப்பீர்கள். எறும்பிடம் நாம் கற்க வேண்டியது இந்தப் பண்பைத்தான். எங்கும், எதற்காகவும், யாருக்காகவும் கொண்ட இலக்கின் கவனம் சிதறாமல் செல்லும் உயரிய பண்பு அது.

இதையும் படியுங்கள்:
கருப்பு வெள்ளை சிந்தனை ஏற்படுத்தும் விளைவுகள் தெரியுமா?
Life

இலக்கை நோக்கிய பயணத்தில் சிலர் சிறு வேகத்தடை வந்தாலும் முயற்சியை கைவிட்டு விலகி விடுகின்றனர் அல்லது தங்களையே மாய்த்துக்கொள்கின்றனர். வாழ்வை வாழ்வாங்கு வாழ்வதுதான் நமக்கு இந்த வாழ்வைப் பரிசாக தந்த இறைவனுக்கு நாம் திருப்பித் தரும் பரிசு.

கருவுக்குள் உருவாகும் சிசுகூட 10 மாதங்கள் தாயின் வயிற்றில் காத்திருந்து அனைத்தையும் பொறுத்து சரியான நேரம் வந்ததும்தான் இந்தப் பூமியைப் பார்க்கிறது.

மனிதனின் வாழ்நாளும் இப்படித்தான். அவனின் ஒவ்வொரு நிமிடமும் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தது. இதை ஒவ்வொருவரும் உணரும்போது வாழ்க்கை என்பது பாரமாக இல்லாமல் மிகவும் சந்தோஷமானதாக  இருக்கும். வெற்றிகரமாகவும் அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com