

வெற்றிலை நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு மகிழ்ச்சியின் அடையாளம். அது எப்படி நம் வாழ்வில் ஆன்மிகம், ஆரோக்கியம், அழகு என்ற அனைத்திற்கும் ஈடு கொடுத்து விளங்குகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.
பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிப்பது வெற்றிலையே. இறைவனுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு நம் உடம்புக்கு தேவையான கால்சியம் சத்தை தருகிறது. சுப நிகழ்ச்சிகளில் விருந்துக்குப் பின் ஜீரணத்துக்காக வெற்றிலைப் பாக்கு கொடுத்து வழி அனுப்பும் வழக்கம் இது போன்ற காரணங்களால்தான் ஏற்பட்டது.
வெற்றிலையும் பாக்கும் மகாலட்சுமி அம்சங்கள் ஆகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்கள் நிவேதனம் செய்தாலும் வெற்றிலைப் பாக்கு வைக்காவிட்டால் அந்த நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பது நமது நம்பிக்கை.
பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின்போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. ‘பாக்கு வெற்றிலை படைத்தாயிற்றா?’ என்று கேட்டாலே பத்திரிக்கை படையல் முடிந்து விட்டதா? என்பதுதான் அர்த்தம். விருந்தினர்களுக்கும், சுப நிகழ்ச்சியின்போது நமது வீட்டுக்கு வருபவர்களுக்கும் வெற்றிலையும் பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழிப்புடன் இருக்கும் என்பது நம்பிக்கை.
கிராமங்களில் வயதான பாட்டிகள் வெற்றிலை போடும்பொழுது அதன் காம்பை கிள்ளி குழந்தைகளுக்குக் கொடுத்து விடுவார்கள். அதில் உள்ள மருத்துவ குணம் மகத்துவம் மிக்கது என்பதால் அப்படிச் செய்கிறார்கள். வெற்றிலை சளியைக் குணப்படுத்தி, சளி பிடிக்காமல் செய்யும் திறன் கொண்டதால் அணிச்சையாக பாட்டிகள் வெற்றிலைக் காம்பை குழந்தைகளுக்குக் கொடுத்து விடுகின்றனர்.
வெற்றிலைச் சாறுடன் தண்ணீர், பால், சர்க்கரை சேர்த்துக் குடித்தால் சிறுநீர் பிரச்னை சரியாகும். வெற்றிலையில் விளக்கெண்ணெய் தேய்த்து சூடுபடுத்தி குழந்தைகளின் முதுகில் போட சளி கரையும். நரம்பு தளர்ச்சிக்கு வெற்றிலை நல்லது. வெற்றிலைச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட நல்ல டானிக்காக வேலை செய்யும். வெற்றிலையை வாட விடுவதும், இடது கையால் வாங்குவதும் கூடாத காரியங்கள்.
இப்படி மகிமை மிக்க வெற்றிலை வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆதலால், ‘உணவு உண்ட பின் வெற்றிலையைப் போட்டுக் கொள்’ என்று கூறுவதுண்டு. உடல் அலங்காரத்துக்கு ஆபரணங்கள் எவ்வளவு அழகை தருகிறதோ, அதுபோல் சாப்பிட்ட உடன் செரிமானத்தைத் தூண்டி, வாயைச் சிவக்கச் செய்து லிப்ஸ்டிக் போட்ட அழகை சேர்த்துத் தருவதால் வெற்றிலையை போட்டுக்கொள் என்று கூறி ஒரு தாம்பாளத்தில் வைப்பதும், அதைப் போட்டுக் கொண்டு கண்ணாடியில் உதட்டைப் பார்த்து எவ்வளவு சிவந்திருக்கிறது என்று கூறி ரசித்து சிரிப்பது நம் ஆனந்தத்தின் உச்சம்.