

வாசனைக்கும் உடலுக்கும் நேரடி தொடர்பு உண்டு. வாசனை உணர்வு, நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டும் மூளையின் லிம்பிக் அமைப்புடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. உணவின் வாசனை நினைவுகளைத் தூண்டுவதுடன், மனநிலையை பாதிப்பதன் மூலம் உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான எதிர்வினைகளை ஏற்படுத்தும்.
மனநிலை மற்றும் உணர்ச்சிகள்: குறிப்பிட்ட சில வாசனைகள் மகிழ்ச்சியான அல்லது சோகமான நினைவுகளைத் தூண்டும். அதன் மூலம் நம் உணர்ச்சி நிலை பாதிக்கப்படலாம். நம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வடிவமைப்பதில் வாசனை ஒரு சக்தி வாய்ந்த பங்கை அளிக்கிறது. இனிமையான நறுமணம் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும். இவை மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவும். ஒரு உணவின் வாசனையை உள்ளிழுக்கும்பொழுது மூளையின் உணர்ச்சி மையங்களுக்கு நேரடியாக சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இதனால் சில வாசனைகள் சக்தி வாய்ந்த உணர்வுகளையோ, நினைவுகளையோ உடனடியாகத் தூண்டுகிறது.
உணவு தேர்வுகள்: ஒரு உணவினுடைய வாசனை, அதன் சுவை உணர்வோடு இணைந்து அந்த உணவு உடலுக்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதையும் அறிய உதவுகிறது. கெட்டுப்போன உணவு விரும்பத்தகாத வாசனையை ஏற்படுத்தும். இது நாம் அந்த உணவை உண்ணுவதைத் தவிர்க்க நம் உடலை எச்சரிக்கும். வாசனை என்பது சுவையுடன் நெருங்கிய தொடர்புடையது. வாசனை அல்லது சுவை மோசமாக இருக்கும் உணவு பெரும்பாலும் கெட்டுப்போனதாகத்தான் இருக்கும். சில வாசனைகள் நம் பசியைத் தூண்டும். அதன் சுவை மற்றும் மணமும் நம்மை சாப்பிடத் தூண்டும்.
உடல் செயல்பாடுகள்: சில வாசனைகள் மனதை அமைதிபடுத்தவும், உடல் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். மேலும், சில வாசனைகள் நம் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். இது உணவு மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. மணங்களும் சுவைகளும் நினைவகப் பகுதிகளில் பதிவு செய்யப்படுகின்றன. மோசமான சுவைகள் அல்லது வாசனைகள் எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணவின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது.
உடல் ஆரோக்கியம்: வாசனைக்கும், சுவைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனமும் உடலும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் அல்ல. உடலில் நடக்கும் விஷயங்கள் ஏதோ ஒரு வகையில் நம் மனதையும் பாதிக்கின்றன. ஒரு உணவை உண்ணும்பொழுது செரிமான செயல்முறை மனித அமைப்பில் ஒரு குறிப்பிட்ட மந்தநிலை உணர்வை உருவாக்குகிறது. இதன் காரணமாக மனம் சிறப்பாக செயல்படுவதில்லை. எனவே, ஆரோக்கியமான உணவின் வாசனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு. நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவாகவே இருக்கிறோம். ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான மனத்தையும், உடலையும், நல்ல உணர்வுகளையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
சமூக மற்றும் கலாசார தாக்கங்கள்: உணவின் வாசனை சமூக மற்றும் கலாசார தாக்கங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது கலாசார அடையாளங்கள், குடும்ப நினைவுகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் பாரம்பரியத்தை வலுப்படுத்துகிறது. மேலும், வாசனை என்பது உணவுத் தேர்வுகளின் மீது ஒரு முக்கிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சுவை மற்றும் இன்ப உணர்வுகளில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.