

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.
நாம் காலையில் எழுந்து பல் துலக்கும் பேஸ்ட், குளிக்கும் சோப்பு, உண்ணும் உணவில் கூட பல வகையான வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இப்படி எல்லாவற்றிலும் வேதிப்பொருட்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். இந்த வேதிப்பொருட்களை பற்றி படிக்கக்கூடிய அறிவியல் பிரிவிற்கு வேதியியல் (Chemistry) என்று பெயர். வேதியியல் படிப்பதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி அனுபவங்கள் , மருத்துவத்துறையில் வேதியியலின் பங்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் நம் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை!
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலைக் கல்வியில் வேதியியல் பாடம் (Chemistry) அடங்கியுள்ள ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படியுங்கள். எதற்கும் பயப்பட வேண்டாம். கெமிஸ்ட்ரி கடினமாக இருக்கும். நம்மால் படிக்க முடியாது! என்ற தாழ்வு மனப்பான்மையை சற்று தள்ளி வையுங்கள்! அதுவே உங்கள் வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு ஒருங்கிணைந்த வேதியியல் படிப்பை, ஐஐடி(IIT) என்று சொல்லக்கூடிய இந்திய தொழில்நுட்ப கழகங்கள் வழங்குகின்றன. நமது இந்தியாவில் மொத்தம் 23 ஐஐடி (IIT)உள்ளன. வருடம் தோறும் ஜே.இ.இ (JEE- Joint Entrance Exam) என்ற நுழைவுத் தேர்வை நடத்தி வருகின்றன .இந்த நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று இந்தியாவில் உள்ள ஐஐடியில் எங்கு வேண்டுமானாலும் உதவித்தொகையுடன் படிக்கலாம். ஐஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். மேல்நிலை கல்வியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஐஐடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இந்த வேதியியல் படிப்பானது பல வகையான உட்பிரிவுகளுடன் பல துறைகளைக் கொண்டுள்ளது.
கனிம வேதியியல் (Inorganic Chemistry)
கரிம வேதியியல் (Organic Chemistry)
பௌதிக வேதியியல் (Physical Chemistry)
உயிர் வேதியியல் (Bio - Chemistry)
பலபடி வேதியியல் (Polimer Chemistry)
உட்கரு வேதியியல் (Nuclear Chemistry)
தொழிற்சாலை வேதியியல் (Industrial Chemistry)
இளநிலை வேதியியல் முடித்த மாணவர்கள் முதுநிலை வேதியலில் ஏதாவது ஒரு உட்பிரிவை எடுத்து படிக்கலாம். அல்லது பொதுவாக முதுநிலை வேதியியல் M.Sc கூட (Chemistry)படிக்கலாம்.
வேதியலில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவுடன் CSIR- ( Council of Scientific and Industrial Research) இந்த தொழிலக ஆய்வு நிறுவனம். இந்தியாவில் 38 இடங்களில் உள்ளது. இந்த CSIR அமைப்பு நடத்தும் நெட் (NET )என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றால் நல்ல உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி பட்டப்படிப்பை(P.hD) மேற்கொள்ளலாம். இல்லையெனில் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியலாம்.
ஐஐடி நடத்தும் கேட் (GATE)என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் ஆராய்ச்சி படிப்பை உதவித்தொகையுடன் படிக்கலாம். அதைப்போலவே NIT (National Institute of technology) தேசிய தொழில்நுட்ப கழகம்) நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று உதவித்தொகையுடன் இங்கேயும் படிக்கலாம்.
முதுநிலை வேதியியல் M.Sc மட்டும் முடித்தால் வெளிநாடுகளான தைவான், தென்கொரியா, வடகொரியா, ஜெர்மன், அமெரிக்கா, போன்ற பல நாடுகளில் அதிகமான உதவி தொகையுடன் P.hD ஆராய்ச்சி பண்ணுவதற்கும் வேலைக்கு செல்வதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
B.Sc (Chemistry)இளநிலை வேதியியல் அல்லது M.Sc ( Chemistry )முதுநிலை வேதியியல் படித்து முடித்து இருந்தால் படிப்பிற்கு ஏற்றார் போல் வேலை கிடைக்கும். இந்த வேதியியல் படிப்பிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தோல் தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலை, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, பெட்ரோலியம் தயாரிக்கும் தொழிற்சாலை, மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உங்களுக்கு வேலை திறமையை பொறுத்து கிடைக்கும்.
இளநிலை வேதியியல் அல்லது முதுநிலை வேதியியல் படித்து முடித்தவுடன் கல்வியியல் கல்லூரிகளில் சேர்ந்து கல்வியில்(B.Ed) படித்து முடித்து பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியலாம்.
CSIR- NET தேர்ச்சி பெற்றால் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியலாம். வேதியியல் ஆராய்ச்சியில் அதிக திறமை இருந்தால் CSIR, IIT, NIT, BARC, TIFR, IISER, NISER IASc, IISc, போன்ற பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானியாக (Scientist) பணிபுரியலாம்.
முதுநிலை வேதியியல் படிப்பு முடித்தவுடன், நீங்கள் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். நமது நாட்டில் இன்னும் சில வகையான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சர்க்கரை நோய், எய்ட்ஸ், கேன்சர் போன்ற பல நோய்களுக்கு புதிய மருந்துகளை கண்டுபிடிக்கலாம். இதன் மூலம் நோபல் பரிசுகளையும் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேதியியல் படிப்பானது பெரும் சிறந்த துறையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த துறையை எடுத்து படிப்பதன் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபடலாம். நமது சமூகத்திற்கு ஒரு சிறந்த மருந்துகளையும் கண்டுபிடிக்கலாம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை! கெமிஸ்ட்ரி என்பது அனைவரும் புரிந்து படித்தால் எல்லாம் எளிமையானதாகவே இருக்கும்.