

வீட்டின் மிகவும் முக்கியமான இடம் என்றால் அது சமையலறைதான். என்னதான் வீட்டின் லிவிங் ரூம் பெரியதாக, வசதியாக இருந்தாலும், சமையலறைதான் அனைவரது மனதுக்கும் உடலுக்கும் சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய இடம். அந்த இடத்தில் தேவையான சௌகரியங்கள் இருந்தால்தான் சமைப்பது எளிதாக இருக்கும். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சமையலறை அமைப்பு: சமையலறை முக்கியமாக காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சமையல் செய்யும் மேடை சரியான உயரத்தில் இருக்க வேண்டும். அதிக உயரமாக இருந்தால் சமைக்கும்போது கடினமாக இருக்கும்; மேலும் தோள்பட்டை, கழுத்து வலி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
காற்றோட்டம்: ஜன்னல் மற்றும் கதவுகள் வெளிப்புறமாக திறக்கும்படி அமைத்தால் நடக்கும்போது கைகளுக்கு இடிக்காது; திறப்பதற்கும் எளிதாக இருக்கும். சமையல் மேடையின் அகலம் தேவையான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேடையின் கீழ் உள்ள செல்ஃப்கள் (shelves) தேவையான உயரத்தில் இருக்க வேண்டும். L டைப் சமையல் மேடை என்றால், மேடையின் கீழ் நிலத்திலிருந்து சுமார் 4 அங்குலம் உயரத்தில் அமைத்துக் கொள்ளலாம். இது வீடு துடைக்கும்போது தண்ணீர் உள்ளே செல்லாமல் தடுக்க உதவும்; கதவுகளும் ஈரத்தால் பாழாகாது.
சிங்க் (Sink) மற்றும் வசதிகள்: சமையலறையில் இருக்கும் சிங்க் பெரியதாகவும் அதன் பைப்புகளில் அடைப்பு ஏற்பட்டால் எளிதாக சீரமைக்கக்கூடிய வசதிகளுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது நல்லது. சிங்க் வைத்திருக்கும் இடத்தின் மேல் அல்லது பக்கவாட்டில் ஜன்னல் வைத்திருப்பது அவசியம். இதனால் நல்ல காற்றோட்டமும் கிடைக்கும்; சிங்க் ஈரமில்லாமல் எளிதில் உலரும், வாடையும் இல்லாமல் இருக்கும்.
சிங்கிற்கும் மேடைக்கும் இடையில் சிறிய அளவு சுவர் அல்லது மறைப்பு இருப்பது பாத்திரம் துலக்கும்போது அல்லது கை அலம்பும்போது தண்ணீர் மேடையில் தெறிக்காமல் தடுக்கப்படும். சிங்க் (Sink) வைத்திருக்கும் சுவரில் லைட் கலர் (light colour) பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அழுக்கு பட்டால் எளிதில் தெரியும் என்பதால் சுத்தமாக வைத்திருக்கத் தோன்றச் செய்யும். மேலும், சிங்க் இருக்கும் இடத்தின் மேல் ஒரு டவல் ஸ்டாண்ட் (towel stand) மற்றும் சிறிய அலமாரி வைத்தால், லிக்விட் சோப் (liquid soap) போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம்.
கூடுதல் வசதிகள்: சிம்னி (Chimney) வைக்கும்போது, அதில் தேவையான வெளிச்சம் மற்றும் எக்ஸாஸ்ட் (Exhaust) வசதிகள் இருப்பதை உறுதி செய்ய கொள்ள வேண்டும். சமையலறையில் ஒரு Fan இருப்பது அவசியம். சமையல் முடிந்த பிறகு சிறிது நேரம் Fanஐ ஓட விட்டால் உஷ்ணம் தணிந்து, வாடைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க உதவும்.
முடிந்தவரை கேஸ் சிலிண்டர் இணைப்பு (connection) சமையலறைக்கு வெளியே இருப்பது நல்லது. இதனால் இடம் வீணாகாது. இனி, நீங்கள் வீடு கட்டும்போது, சமையலறையில் இந்த விஷயங்களை நினைவில் வைத்து திட்டமிட்டு அமைத்து வசதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வோம்.