
மனிதர்களுக்கு வயதாகும்போது முகம், கை, கால்களில் சுருக்கம் ஏற்பட்டு நோய்களும் அரவணைத்துக் கொள்ளும். ஆனால் சில திரைப்பட நடிகர்கள், பிரபலங்கள், சாதாரண பொது மக்களில் சிலர் கூட 70 வயதிலும் பார்ப்பதற்கு 45, 50 வயதினர் போல தோற்றமளிப்பார்கள். அவர்களது இளமைத் தோற்றத்தின் ரகசியத்தின் பின்னால் இருக்கும் பழக்க வழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சுறுசுறுப்பு: இவர்கள் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவழிப்பதில்லை. அதற்குப் பதிலாக நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். நடைப்பயிற்சி, யோகா, அத்துடன் வீட்டு வேலைகள், தோட்டப் பராமரிப்பு என்று அன்றாட வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இதனால் இவர்களின் ரத்த ஓட்டம் அதிகரித்து மூட்டுக்கள் வலுவாக இருக்கின்றன. மேலும் தசைகள் உறுதியாக்கப்பட்டு முகம் கை, கால்களில் சுருக்கம் குறைவாக இருக்கிறது.
வண்ணமயமான உணவு: இளைஞர்களைப் போல சத்தற்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை இவர்கள் தொடுவதில்லை. அதற்கு மாறாக வண்ண வண்ணக் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு இவர்களுக்கு ஆற்றல் கிடைக்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரைகள், தக்காளி போன்ற பிரகாசமான நிறத்தில் உள்ள காய்கறிகள் வயதாவதை தாமதப்படுத்தி இளமைத் தோற்றத்தை தருகிறது. மேலும் இவர்கள் நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கிறது.
சிறந்த மன அழுத்த நிர்வாகம்: மன அழுத்தம் மிகுந்தவர்கள் இளவயதிலேயே முதுமையான தோற்றத்தை அடைந்து விடுவார்கள். நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் என்கிற ஹார்மோனை அதிகரித்து சருமத்தில் உள்ள கொலாஜனை உடைத்து விடுகிறது. இதனால் விரைவில் வயதான தோற்றம் வந்துவிடும். ஆனால் இயற்கையில் நேரம் செலவிடுதல், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுதல், வாய்விட்டு சிரித்தல் போன்ற செயல்களின் மூலம் இவர்கள் இளமையாக இருக்கிறார்கள், மன அழுத்தத்தை நன்றாக நிர்வகித்து இளமையாக இருக்கிறார்கள்.
போதுமான தூக்கம்: இள வயதினரைப் போல நடு இரவு தாண்டியும் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருப்பதில்லை 70 வயது முதியவர்கள். சரியான நேரத்தில் படுக்கப் போய் நிம்மதியாக உறங்கி எழுகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தின்போது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது. கொலாஜனை உற்பத்தி செய்து இளமையாக வைக்கிறது. மூளையிலிருந்து நச்சுக்களை நீக்குகிறது. மனநிலையை மீட்டெடுக்கிறது.
இளையவர்களுடன் நேரம் செலவழித்தல்: 70 வயதிலும் இளமையாக தோன்றும் நபர்கள் இள வயதுக்காரர்களிடம் அதிகமாக நட்பு கொண்டிருக்கிறார்கள். பேரக்குழந்தைகள், மகன்கள், மருமகள்கள், இளைய நண்பர்கள் என்று பலருடனும் கலந்து பழகுவதால் அவர்களும் இளமையாக இருக்கிறார்கள்.
வாய்விட்டு சிரித்தல்: வாய்விட்டு சிரிக்கிறார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. முகத்தை பிரகாசமாக்குகிறது. கவர்ச்சியாகவும் இளமையாகவும் வைத்திருக்கிறிருக்கிறது. கடந்த காலத் துன்பங்களை நினைத்து அவர்கள் கவலை கொள்வதில்லை. அந்த கசப்புகளை மறந்து விட்டு நிகழ்காலத்தில் வாழ்வதும் அவர்களது இளமைக்கு முக்கிய காரணமாகும்.
கற்றுக் கொள்ளலில் ஆர்வம்: புதிது புதிதாக ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டே இருப்பார்கள். மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடம் மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும். புதிய மொழியை கற்றுக்கொள்வது, புத்தகம் படிப்பது, புதிய பொழுதுபோக்கைத் தொடங்குவது, புதிய இடங்களுக்கு பயணம் செல்வது என அவர்களின் இளமையின் ரகசியம் அதிகரிக்கிறது.
முதுமை எனும் பூங்காற்று: முரண்பாடாக இளமையாக தோன்றுவதற்கு அவர்கள் பெரிதாக மெனக்கிடுவதில்லை. இளமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கூட இல்லை. வயதாவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. வயதாவது வாழ்க்கையில் இயல்பான பகுதியாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ரகசியங்களைப் பின்பற்றினால் எல்லோருமே வயதான காலத்திலும் இளமையாக ஜொலிக்கலாமே.