நம்மில் பலர் மற்றவர்களுடன் உரையாடும்போதும் அல்லது சாதாரணமாகப் பேசும் பொழுதும் அவர்களுக்குப் புரிகிறதோ புரியவில்லையோ இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்படிச் செய்யலாமா? நிச்சயமாக செய்யக்கூடாது. இப்படி நீங்கள் செய்தால் எதிரில் உங்களது பேச்சை கேட்பவர்களுக்கு கோபம்தானே வரும். சரி என்னதான் செய்வது?
சிலர் பேசும் பொழுது நமக்கு எதுவுமே புரியாது. நாம் சொல்லவரும் கருத்துக்களையும் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பேசுவதை மட்டுமே நாம் கேட்க வேண்டும் என்று நினைத்து பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் நீங்கள் அவர்களின் பேச்சை இடைமறித்துப் பாருங்களேன். அப்போது கூட தனது பேச்சை நிறுத்த மாட்டார்கள்.
இத்தகைய பேச்சை கேட்பவருக்கு எரிச்சல்தான் வரும். அதனால் அவர் கேட்பதைப் பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். அதனால், மற்றவர்களுக்குப் புரியும்படி தெளிவாகப் பேச வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் நமது பேச்சை மற்றவர்கள் விரும்பிக் கேட்பார்கள். முடிந்தவரை குரலைத் தாழ்த்தி, இனிமையாகப் பேசப் பழக வேண்டும். அப்படிப் பேசுவதுதான் நம்மை பண்பு உள்ளவராக மற்றவருக்குக் காட்டும்.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எந்த நிலையிலிருந்தும் நம்மை மாற்றிக்கொள்ளக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டு ஆவேசத்துடன் கூச்சலிட்டுப் பேசினால், அது கேட்க சங்கடமாக இருப்பதுடன், நம்மைப் பற்றிய நல்ல எண்ணம் மாறுவதற்கு நாமே காரணமாக ஆகி விடுவோம்.
சிலர் பேசும்போது மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், தாங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருப்பர். இதனால், கேட்பவர் எரிச்சல் அடைவது மட்டுமின்றி, பேச்சைக் கேட்பதையும் நிறுத்தி விடுவர். எனவே, நம்மிடம் உள்ள இதுபோன்ற குறைகளை நீக்கி விட்டு மற்றவர்களுடன் உரையாட வேண்டும். அப்போதுதான், நாம் அறிவாளியாகவே இருந்தால் கூட மற்றவர்கள் மத்தியில் நமது பேச்சு எடுபடும்.
உங்கள் உள்ளத்தில் உள்ள உணர்ச்சிகளையும், நீங்கள் சொல்லும் செய்தியையும் பொருத்தமான உணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதத்தில் பேசுங்கள். அது கேட்பவரின் இதயத்தை எட்ட வேண்டும்.
சரி, இனியாவது பேசும்பொழுது மற்றவர்களுக்குப் புரியும்படியாகவும் அவர்களது கருத்தையும் நாம் உள்வாங்கிக் கொண்டு அதன் பிறகு பேச வேண்டும். பேச்சில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம்… நீங்கள் பேசும் பேச்சில்தான் உங்களது இமேஜ் அடங்கி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.