தேனீர்களில் சமீபத்திய புது வரவாக இணைந்திருப்பது. 'ஒய்ட் டீ' எனப்படும் வெள்ளை டீ! இதற்கு எதனால் இப்பெயர் வந்தது என்ற காரணத்தை முதலில் பார்ப்போம். தேயிலை செடிகளில் இருக்கும் மலராத இளம் மொட்டுக்களைப் பறித்து அவற்றை தளிர் இலைகளுடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ, மிதமான சூழலில் பதப்படுத்தி தயாரிக்கப்படுகிறது இந்த டீ.
அவ்வாறு பறிக்கப்படும் மலராத மொட்டுக்களைச் சுற்றி வெள்ளை நிற முடி போன்ற பல இழைகள் சூழ்ந்திருக்கும். இதன் காரணமாகவே இந்த வகை டீ 'ஒய்ட் டீ' என அழைக்கப்படுகிறது. இனி, ஒய்ட் டீயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒய்ட் டீயில் கேட்டச்சின், ஃபிளவனாய்ட், பாலிஃபினால் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை ஃபிரிரேடிகல்களை உண்டுபண்ணும் செல் சிதைவைத் தடுக்கின்றன. உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. இவை தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், அக்கிருமிகளால் உண்டாகும் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.
பாலிஃபினால்கள் இரத்தத்திலுள்ள LDL என்னும் கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன; இரத்த நாளங்களை தளர்வுறச் செய்து இரத்த ஓட்டம் தடையின்றிப் பாய துணை புரிகின்றன. இதனால் இதய வால்வுகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது; இதயம் சிறப்பாக இயங்க முடிகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறச் செய்து அதன் மூலம் அதிகப்படி கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றன. புதிய கொழுப்பு செல்கள் உருவாவதையும் தடுக்கின்றன. இதனால் உடல் எடையை சீரான முறையில் பராமரிக்க முடிகிறது.
ஒய்ட் டீ ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, இள வயதிலேயே முதுமை அடைந்தது போன்ற தோற்றம் பெறுவதைத் தடுக்கிறது. கேட்டச்சின்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்தி ஆஸ்டியோபொரோஸிஸ் நோய் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன.
ஒய்ட் டீயில் இயற்கையாகவே அதிகளவில் உள்ள ஃபுளோரைட், கேட்டச்சின், டேன்னின் போன்றவை கிருமிகளுக்கு எதிராகப் போராடி, பற்களில் சொத்தை உண்டாவது, ப்ளேக் (plaque) மற்றும் துர்நாற்றம் ஏற்படுவது போன்ற கோளாறுகளைத் தடுக்கின்றன.
ஒயிட் டீ இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துகிறது; சருமத்தில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கவும், அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுக்களால் ஏற்படும் செல் சிதைவை குணப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள சக்தி வாய்ந்த EGCG (Epigallo Catechin Gallate) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆன்டி கேன்சர் குணம் கொண்டவை. இவை நுரையீரல் புற்றுநோய் மற்றும் கோலன் கேன்சர் வரும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன. பார்க்கின்சன் மற்றும் அல்சிமைர் நோய்களையும் தடுக்க வல்லது ஒயிட் டீ! என்ன, நீங்களும் ஒயிட் டீக்கு மாறிடுவீங்கதானே?