

இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் பிறக்கும்போது வெறும் கையோடு பிறக்கிறோம். இறக்கும்போதும் வெறும் கையோடுதான் இறக்கிறோம். அப்படி நம் முன்னோர்கள் முதுமையடைந்து இறந்த பின் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்குள் செல்வோமானால் தங்கம், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் நிறைந்து கிடப்பதைக் காண முடியும். உங்களுக்கு அந்த மாதிரியொரு சந்தர்ப்பம் கிடைக்குமென்றால், அந்த வீட்டிலிருந்து என்னென்ன பொருட்களை எடுத்து வந்து பத்திரப்படுத்திப் பாதுகாக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. புத்தகங்கள்: பாட்டி வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் புத்தகங்கள் உங்கள் வீட்டு அலமாரியில் நட்சத்திர அந்தஸ்து பெறும். அழகான அட்டைப்படம், தனித்துவமான தலைப்பு மற்றும் சில வரிகளில் குடும்ப விவரம் தாங்கிய புத்தகங்களை, அதன் உரிமையாளரின் சிறு குறிப்போடு அழகாக அடுக்கி வைக்கையில் அந்த இடத்தின் அழகு மெருகேறும். மேலும், அப்புத்தகங்களின் முதல் பிரதி பிரிண்ட்டான காலத்தை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படவும் கூடும்.
2. சமையல் சாதனங்கள்: ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் உருவான பழங்காலப் பாத்திரங்கள் பாட்டி வீட்டுப் பரணில் இருந்தால் தவறாமல் அதை எடுத்து வந்து விடுங்கள். இக்காலத் தயாரிப்பில் அதே டிசைன் கிடைப்பது அரிது. உங்கள் வீட்டு பார்ட்டிகளில் அதை முன் வைத்து, பாட்டியின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
3. வெள்ளிப் பொருட்கள்: பாட்டி சேகரித்து வைத்திருக்கும் வெள்ளிப் பொருட்கள் விலை மதிப்பற்றவை. அவற்றில் உள்ள கலை நயம் மிக்க வேலைப்பாடுகள் மற்றும் வெள்ளியின் தரம் தற்போது கிடைக்காது. உங்கள் வீட்டிற்குக் கொண்டுவந்து அலங்காரப் பொருளாக வைத்து மகிழலாம்.
4. தங்க நகை மற்றும் பழைமையான ஃபர்னிச்சர்கள்: பரம்பரை கடந்து குடும்ப மரபாய் வரும் உடைமைப் பொருட்கள் இவை. இவற்றின் வடிவமைப்பும் தரமும் அபூர்வமானவை. எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பன்மடங்கு உயரும். மேலும், அதன் தனித்துவம் மிக்க வரலாற்றைப் பகிர்ந்து கொள்வது தனி மகிழ்ச்சி தர வல்லது.
5. வார்ப்பிரும்புப் பாத்திரங்கள்: இந்த வகையான சமையல் பாத்திரங்கள் உஷ்ணத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்வதாலும், பண்படுத்தப்பட்ட (seasoned) பாத்திரங்களில் உணவுப்பொருள் ஒட்டிக்கொள்ளாதிருப்பதாலும், இதில் சமைக்கப்படும் உணவுகள் சுவை மிகுந்திருப்பதாலும் அநேக வீடுகளில் காணப்படும் பாத்திரங்கள் இவை.
6. போட்டோ ஃபிரேம், தையல் மெஷின், பெட் சைடு ஸ்டூல் etc.: தாத்தா, பாட்டியின் நினைவுகளைக் கொண்டுவரும் செண்டிமெண்ட்டான பொருள் எதுவாயினும் எடுத்து வருவது, அவர்களுடன் நீங்கள் கழித்த சுவாரஸ்யமான நாட்களை மீண்டும் நினைவுபடுத்த உதவும்.
7. பட்டன்கள்: வயதான பாட்டிகள் தன் கூடவே ஒரு டப்பா வைத்திருப்பதைக் காணலாம். அதில் விதவிதமான அளவுகள் கொண்ட பட்டன்கள், ஊசியுடன் ஒரு நூல் கண்டு, பின் போன்றவற்றை சேகரித்துப் போட்டு வைத்திருப்பர். அவசரத் தேவைக்கு அது நல்ல முறையில் உபயோகப்போடும். அதையும் மறக்காமல் எடுத்து வந்து விடலாம்.
உங்கள் தாத்தா, பாட்டி வீட்டிலிருந்து கொண்டு வரும் ஏதாவதொரு பொருளாயினும் உங்களின் சிறு வயது நினைவலைகளை மீட்டுக் கொண்டு வர உதவும்.