பிஞ்சு உள்ளங்களின் விடலை வித்தைகள்... நஞ்சை கலப்பது யார்?

Children Crimes
Children Crimes
Published on

பேருந்து படிகளில் தொற்றிக் கொண்டு செல்வது, சிலசமயம் பேருந்து கூரை மேலேறியும் சாகசப் பயணம் செய்வது, வேகமாக ஓடும் ரயில் பெட்டியின் படியில் தொற்றிக் கொண்டு, கையிலிருக்கும் ஆயுதத்தால் ரயில்வே பிளாட்பார தரையில் கீறி எல்லோர் கவனத்தையும் பயங்கரமாகக் கவர்வது என்றெல்லாம் இன்றைய சிறுவர்கள் தங்கள் விடலை வித்தைகளைக் காட்டுகிறார்கள். இது, தாங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டிய துணிச்சல் என்று நினைக்கிறார்கள்; பார்ப்பவர்களோ அவர்கள் எதிர்நோக்கும் பேராபத்தை எண்ணிக் கவலை கொள்கிறார்கள்.

பொது இடத்தில் வேண்டுமென்றே அடாவடி செய்வது, தன் வயது நண்பர்களின் பாராட்டைப் பெறுவது, சுற்றி இருப்பவர்கள் மிரட்சியுடன் தம்மைப் பார்ப்பது, தம்மை திரைப்பட கதாநாயகர்களாக உருவகித்துக் கொள்வது இவற்றில்தான் இந்த ஒழுங்கீனம் ஆரம்பிக்கிறது. 

தினமும் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களைப் பற்றிய தகவல்களை செய்தித் தாள்களில் படிக்கும்போது நெஞ்சே பதறுகிறது.

இந்தத் தளிர்கள் தாமாகக் கருகுவதில்லை என்பது உண்மை. ‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,‘ என்பதுபோல எல்லா குழந்தைகளும் குணத்தளவில் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். அவர்களைக் கையாளும் விதத்தில்தான் அவர்கள் மடைமாற்றம் அடைகிறார்கள். 

ஒரு குடும்பத்தில் வசதிக் குறைவு அல்லது பற்றாக்குறை என்று ஏற்படுமானால் அதை சரிகட்ட குடும்பத்துப் பெரியவர்கள் எந்தெந்த வழிகளைக் கையாள்கிறார்கள் என்பதை சிறுவர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். உதாரணத்திற்கு, 'ஏங்க, பையனுக்கு பென்ஸில் இல்லையாம், ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிக் கொடுங்க,‘ என்று அம்மா சொல்கிறார் என்றால், உடனே ‘அதான் போன வாரம் ஆஃபீஸ்லேர்ந்து நாலு பென்ஸில் கொண்டாந்து கொடுத்தேனே!‘ என்று அதற்கு அப்பா பதில் சொல்கிறார் என்றால், அப்போது பையனுடைய மனோநிலை எப்படி இருக்கும், அது எப்படி வளரும்?

மிகச் சிறிதே ஆனாலும், வீட்டிலேயே ஊழல் ஆரம்பிக்கும்போது இதே சூழ்நிலையில் வளரும் சிறுவர்களுக்கு, எந்தக் கஷ்டமும் படாமல், எல்லாமே இலவசமாகவே கிடைத்து விட வேண்டும் என்ற பேராசை எழுவது இயற்கைதானே? அப்படி கிடைக்காவிட்டால்? திருடலாம் என்று குற்றம் ஆரம்பிக்கிறது, அது கொள்ளைவரை கொண்டு விட்டுவிடுகிறது.

சரி, விடலைப் பருவத்திலேயே தாம் செய்யும் குற்றங்களுக்காக சிறுவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதாகிய தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அந்தச் சிறுவர்கள், தம் தவறு உணர்ந்து, ‘இனி அப்படி ஒரு குற்றத்தைச் செய்யவே கூடாது‘ என்ற மன உறுதி கொண்டார்களென்றால், மனப்பூர்வமாக திருந்தி வாழ தீர்மானிக்கிறார்கள் என்றால், சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தண்டனைக் காலம் முடிந்து வரும் அவர்களை சமுதாயம் எப்படி வரவேற்கிறது, எப்படி ஏற்றுக் கொள்கிறது, எவ்வாறு அங்கீகரிக்கிறது?

இதையும் படியுங்கள்:
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கற்றுக்கொள்வது நல்லொழுக்கமா? ரௌடியிஸமா?
Children Crimes

உறவினர் பழிப்பு ஒரு பக்கம் என்றால், வெளியில் அந்தச் சிறுவன் நடமாடும்போது அவன் செய்த குற்றத்தைத் தெரிந்து கொண்டவர்களும், அவனுடைய அந்நாளைய சக நண்பர்களும், அவனை கேலி செய்து புறக்கணிக்க ஆரம்பிக்கிறார்கள். இது அவனுடைய மனதில் வக்கிரத்தை வளர்க்கிறது. ஏற்கெனவே வெட்க உணர்வால் பாதிக்கப்பட்டிருந்த அவன், இப்போது மேலும் நொந்து போகிறான். 

சமீபத்தில் சென்னையில் ‘சிறார் குற்றங்கள் தடுப்பு மற்றும் அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ‘குற்ற நிகழ்வுகளில் தொடர்புடைய சிறார்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் நிலை மாற வேண்டும்,‘ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. 

‘கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறார் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகம் தேவை. திருட்டு, வழிப்பறி, கொலை, போன்ற குற்றச் சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கவலை அளிக்கிறது. இவர்களுடைய நலனுக்காக அரசு அமைப்பு மட்டுமன்றி, பல்வேறு சமூக அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டியது இப்போதைய காலத்தின் கட்டாயம். எது நல்லது, எது கெட்டது என்று அவர்களுக்கு நாம் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். அது தொடர்பான மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்,‘ என்றும் கருத்தரங்கம் மிகுந்த கவலையுடன் தெரிவித்தது.  

சிறுவர்களின் நல் ஒழுக்கத்துக்கு யாரால் உத்தரவாதம் கொடுக்க முடியும்? மனத்துக்கண் மாசில்லாமல் இருக்கிறார்களே, அவர்களால் மட்டும்தான் முடியும். அதாவது குற்றம் சாட்ட ஆள் காட்டி விரலை நீட்டுபவர்கள், பிற நான்கு விரல்களும் தம்மையே சுட்டிக் காட்டுவதை உளப்பூர்வமாக உணரக் கூடியவர்களானால், அவர்களால் மட்டுமே முடியும்; அப்போதுதான் பாரதத் தூண்களை உறுதியானவையாக உருவாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com