
"காதல் ஒருவனை கைபிடித்து காரியம் யாவினும் கை கொடுப்போம்" - இது பாரதி கண்ட அன்றைய புதுமைப் பெண்ணின் வாக்கு.
"காரிகை ஒருவளை கைப்பிடித்து அவள் காரியம் யாவிலும் உடனிருப்போம்!" - இது இன்றைய இளைஞர்களின் உறுதிமொழி.
ஆனால் இன்றைய தம்பதிகளின் நிலை குறித்து முரணான கருத்துகள் நிலவுகின்றன. மன நிறைவு என்பது பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை இயல்பான ஒன்றாகி விட்டதோ என தோன்றுகிறது.
அதற்குச் சான்றாக, செய்திகளில் அடிக்கடி இடம்பெறும் பிரபலமான கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சொன்ன அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். ஒன்றாக இருக்கும்போது மகிழ்ந்து பிள்ளைகளைப் பெற்று ஏதோ ஒரு மனக்கசப்பில் இப்படி ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்துவது திருமணத்தின் மீதான நம்பிக்கையின்மையை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் வாய்ப்பு உள்ளது.
காதல் திருமணமோ அல்லது பெற்றோர் பார்த்து வைத்து ஏற்பாடு செய்த திருமணம் இரண்டிலுமே அந்த தம்பதிகள் மட்டுமின்றி பல குடும்பங்கள் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.
இதில் அனைவருமே ஒரே மாதிரியான குணத்துடனும் அல்லது ஒரே மாதிரியான ரசனை உடனும் இருப்பது அபூர்வம். குணங்களும் ரசனைகளும் மாறுபட்டு இருந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு திருமண வாழ்வில் நுழைவது தான் திருமணத்தின் முதல் விதியாக பார்க்கப்படுகிறது.
ஆனாலும் சில விதிகளை மீறிய விதிவிலக்குகளும் உண்டு. ஒரு ஆணோ பெண்ணோ தன் துணையிடம் நம்பிக்கை பெறாமல் வார்த்தை வன்முறைகள் மற்றும் உடல் மீதான வன்முறைகளை செலுத்தும் போது அந்த இடத்தில் திருமணம் என்பது கேள்விக்குறியாகி விவாகரத்து தேவைப்படுகிறது.
ஆனால் தற்போது கல்வி சுதந்திரம் பெற்றுவிட்ட ஆண்களும் பெண்களும் ஒரு சிறு பிரச்சனை என்றாலும் தாங்க முடியாமல் துவண்டு போகிறார்கள். இது அவர்களின் திருமண வாழ்விலும் எதிரொலிக்கிறது.
கணவன் மனைவி என்பவர்கள் தங்கள் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் பொதுவெளியில் அல்லது மூன்றாம் மனிதரிடம் தங்கள் பிரச்சனைகளை கொண்டு செல்லும் போது தான் சமரசம் என்பதை விடுத்து மன முறிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகிறது.
விவாகரத்து பெற்று விட்ட ஒரு பெண்ணோ ஆணோ மீண்டும் ஒரு திருமணத்தின் மூலம் தங்கள் முழு மகிழ்ச்சியை அடைந்து விடுகிறார்களா என்பது என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதில்களாக வரும். தங்கள் முதல் துணையிடம் இல்லாத ஏதோ ஒன்றுக்காக மற்றொரு துணையை நாடும்போது அங்கும் அவர்களது எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனால் அந்த மறுதிருமண பந்தம் நிலைக்குமா?
ஆகவேதான் உடலாலும் உயிராலும் உயிர் உள்ளவரை இணைந்தே இருப்போம் என்று அக்னி முன் பல பேர் காண உறுதிமொழி எடுத்து திருமண பந்தத்தில் நுழைந்த தம்பதிகள் சற்றே சகிப்புத்தன்மையுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் திருமண முறிவுகள் குறையும் வாய்ப்பு உண்டு.
விவாகரத்துக்குச் செல்லும் முன் பலமுறை சிந்திக்க வேண்டும். தங்களைப் பற்றியும் தங்கள் பிள்ளைகளைப் பற்றியும். முக்கியமாக தங்கள் பிள்ளைகளை பற்றி. ஒரு விவாகரத்தின் மூலம் இரு மனங்கள் மட்டும் பிரிவது அல்ல. அவர்கள் பெற்ற பிள்ளைகளின் மனங்களும் முறிந்து போய்விடுகிறது. அதன்பின் இயல்பான ஒரு வாழ்க்கையை அவர்களால் வாழ முடியாமல் மன சஞ்சலங்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.