

வீட்டில் அதிர்ஷ்டம் பெருகுவதற்கு பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைப்பது சிறந்தது. இதைத் தொடர்ந்து கிழக்கு அல்லது வடக்கு திசையும் உகந்ததாக இருக்கும். வடமேற்கு திசையை நோக்கிய வீடுகளில், வடகிழக்கு மூலையில் பூஜை அறையை அமைப்பது சிறந்தது. வழிபடுபவர்கள் வடகிழக்கு திசையை நோக்கி பிரார்த்தனை செய்ய அதிர்ஷ்டம் பெருகும்.
வடக்கு திசையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இந்த திசையில் சில செடிகளை வளர்ப்பது செல்வத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்க உதவும். சில வாஸ்து செடிகள் வறுமையைப் போக்கி, மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற்று தரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டின் வடக்கு திசையில் வாழை மரத்தை நட்டு வளர்ப்பது மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும். துளசி வழிபாடு சிறப்பைத் தரும். துளசி செடியை வாட விடாமல் பாதுகாப்பது வீட்டில் செல்வம் பெருக வழிவகுக்கும்.
வீட்டில் மூங்கில் செடியை வளர்ப்பது மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவரும். வீட்டின் வட திசையில் மூங்கில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தைத் தருவதுடன் எதிர்மறை சக்திகளை விலக்கும். அதேபோல், ஒரு நீல நிற பாட்டிலில் மணி பிளான்ட் செடியை வைத்து வளர்க்கலாம். ஆனால், இது தரையைத் தொடாதவாறு பராமரிப்பது செல்வ செழிப்பிற்கு வழிவகுக்கும்.
வீட்டில் நேர்மறை ஆற்றலையும் செல்வத்தையும் பெருக்க சில குறிப்பிட்ட சிலைகளை வைப்பதும் நல்லது. மகாவிஷ்ணுவின் அவதாரமான கூர்மத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆமை சிலையை வீட்டில் வைப்பது செல்வத்தை ஈர்க்கும். பித்தளை அல்லது வெள்ளியால் ஆன யானை சிலையை வீட்டில் வைக்க நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதுடன், செல்வத்தின் அடையாளமாகவும் இது திகழ்கிறது. அதேபோல், கன்றுடன் கூடிய பசுவின் சிலையும் வீட்டில் இருக்க செல்வம் குறையாது என்பது நம்பிக்கை.
குபேர யந்திரம் அல்லது ஒரு சிறிய நீர் ஊற்றை வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைப்பது நிதி செழிப்பை அதிகரிக்கும். வீட்டின் வடக்கு திசையில் ஒரு சிறிய நீரூற்றை (water fountain) வைப்பது நிதி தடைகளை நீக்கி பண வரவை அதிகப்படுத்தும். நீரூற்றிலிருந்து பாயும் நீர் பண வரவுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
இருக்கும் இடத்தை சுத்தமாகவும், தேவையில்லாத பொருட்களை அடைத்து வைக்கவோ, சேர்த்து வைக்கவோ இல்லாமல் அவ்வப்போது அகற்றி விடுவது நல்ல ஆற்றலை ஈர்க்கும்.
பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைக்கும் பெட்டி அல்லது பீரோவை அறையின் தென்மேற்கு சுவரில் வைக்க வேண்டும். அதன் கதவுகள் வடக்கு திசையை நோக்கி திறக்கும்படி அமைப்பது செல்வத்தை பெருக்கும். இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகும்.