முன்னே கசக்கும்! அதுவே பின்னே இனிக்கும்! புரியலையா?

Lifestyle
Lifestyle
Published on

- தா.சரவணா

கரியையும், சாம்பல் தூளையும் கொடுத்து பல் விளக்கச் சொன்னபோது, பட்டிக்காடு என இளித்த பற்கள் இன்று வேரற்று போனபோது, சர்வோதயா, காதிகிராப்ட் என பல்பொடி வாங்க வரிசையில் நின்றேன். அதைப் பார்த்து, அப்பத்தாக்கள் சிரிக்கிறார்கள்!

வெந்தயமும், சீகைக்காயும் வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி என்றபோது, பித்துக்குளிகள் என எள்ளி நகையாடி ஷாம்புவை சிக்கென பிடித்த நம் கருப்பு கேசம், இன்று வெண் கேசம் கண்ட பின்னர் சீகைக்காய் வாங்க அண்ணாச்சி மளிகைக் கடைக்குச் செல்கிறேன்.

பாசிப் பயறோ, கடலை மாவோ அரைத்துக்குளி என்றபோது, சினிமா நடிகைகளின் உடலை வருடிய சோப்புகளை வாங்கி, பந்தாவாகக் குளித்தோம். இப்போது, இளவயதிலேயே தோள் சுருங்கி, வயோதிகம் தெரிந்தபின்பு ஓடுகின்றேன் பயத்தமாவு அரைக்க!

இருமலோ, தும்மலோ வந்தபோது, துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு கசாயம் தந்தபோது, முகத்தை சுளித்த நான், இருமலுக்கான சிரப்பை வாங்கிக் குடித்துவிட்டு, தைராய்டு வரை சென்ற பின்னர் இப்போது ஓடுகிறேன் துளசி, துாதுவளை செடி வளர்க்க.

வயிறு வலி என்றபோது, வெறும் வயிற்றில் வெந்தயக்களியோ, கற்றாழைச் சாறோ கொண்டுவந்து தந்தபோது, தூக்கி எறிந்து, வலி நிவாரணி மாத்திரைகளைப் போட்டு பித்தப்பை பிரச்னை வந்ததும் ஓடுகிறேன் கற்றாழை வளர்க்க.

நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி, மணமாய் தந்தபோது மனம் அதை ஏற்காமல், முகம் தெரியும் பிசுபிசுப்பில்லாத எண்ணெய் உபயோகப்படுத்திய பின்னர் ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருப்பதாக தெரிய வர, செக்கு நோக்கி ஓடுகிறேன்.

மண்பானை சமையல், மண்பானை குளிர் நீரை எல்லாம் மாற்றிவிட்டு ஆர்ஓ வாட்டர் என புழு பூச்சிகூட வாழத் தகுதியற்ற நீரைக் குடித்து குடித்து சவமான பின்பு ஓடுகின்றேன் மண்பானை வாங்க.

இதையும் படியுங்கள்:
லிப்ஸ்டிக் குறியீட்டு கோட்பாட்டின் சாதக, பாதகங்களை அறிவோம்!
Lifestyle

இப்படியாக...

படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து, குருகுலக் கல்வியைக் கோடிக்கணக்கான ரூபாய் கல்வியாக்கி, கொல்லைத் துளசி வைத்தியம் மறந்து, மாடி மாடியாய் குளிரூட்டப்பட்ட அறையில் லட்ச லட்சமாய்க் கொட்டிய வாழ்வில் ஏது சுதந்திரம்? ஏது சுகாதாரம்? என்று எங்கோ இருந்து நம் அப்பத்தாக்களும், பாட்டிகளும் பார்த்து, பார்த்து சிரிக்கின்றனர்.

மூத்தோர் சொல் வார்த்தையும், முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும். பழமையை மறந்தோம், படாதபாடு படுகிறோம்.

நம் முன்னோர்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவே மருந்து என மிகச் சிறந்த முறையில் சீரும் சிறப்பாக வாழ்ந்திருக்கின்றனர். மருந்தே உணவாக வாழவில்லை.

பழமையில் புதுமை படைப்போம் பழமையை புதுமையாக காண்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com