

இன்றைய டிஜிட்டல் உலகில், பலரும் போன் கால்களை விட வாட்ஸ்அப் அல்லது மெசேஜ் செய்வதையே அதிகம் விரும்புகிறார்கள், குறிப்பாக, இளம்பெண்களும், இளைஞர்களும் போன் ரிங் ஆனாலே ஒருவித பதற்றம் அடைபவர்கள் உண்டு. இதற்குப் பின்னால் சோம்பேறித்தனம் மட்டும் காரணம் அல்ல, ஆழமான சில உளவியல் காரணங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. சிந்திக்கக் கிடைக்கும் கால அவகாசம்: போன் கால்களில் நாம் உடனடி பதில் சொல்ல வேண்டும். அங்கு 'எடிட்' செய்ய வாய்ப்பில்லை. ஆனால், மெசேஜ் செய்யும்போது நாம் சொல்ல வரும் கருத்தை நிதானமாக யோசித்து, சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும். இது நமது ஆளுமையை மற்றவர்களிடம் நேர்த்தியாகக் காட்ட உதவும் ஒரு நுணுக்கமான ஹேக் ஆகும்.
2. பதற்றம் குறைகிறது: நேரடி அழைப்புகளில் மற்றவர்களின் குரல் ஏற்றத்தாழ்வு, வேகம் போன்றவற்றை உடனடியாகக் கவனித்துப் பேச வேண்டும். சிலருக்கு இது ஒரு 'சமூக நெருக்கடியாக' தோன்றும். மெசேஜ் என்பது ஒரு திரைக்குப் பின்னால் இருந்து பேசுவது போன்றது. இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவதால், பலரும் மெசேஜ் செய்வதை ஒரு 'கம்ஃபர்ட் ஸோனாக' உணர்கிறார்கள்.
3. கட்டுப்பாட்டு உணர்வு: ஒரு போன் கால் வரும்போது, நீங்கள் என்ன வேலையில் இருந்தாலும் அதை நிறுத்திவிட்டுப் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், மெசேஜ் வரும்போது நீங்கள் விரும்பும் நேரத்தில், உங்களுக்கு வசதியான சூழலில் பதில் அளிக்கலாம். இந்த 'சுதந்திரம்' மற்றும் 'நேர மேலாண்மை'தான் இன்றைய இளைஞர்களை மெசேஜ் பக்கம் இழுக்கிறது.
4. ஆவணப்படுத்துதல்: முக்கியமான தகவல்கள், முகவரிகள் அல்லது தேதிகளைப் போனில் சொல்லும்போது மறந்து போக வாய்ப்புண்டு. ஆனால், மெசேஜ் செய்யும்போது அது ஒரு நிரந்தரப் பதிவாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அதில் பார்த்துக் கொள்ளலாம். இது மூளையின் பணிச்சுமையைக் குறைக்கிறது.
5. தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்தல்: போன் கால்களில் எடுத்த உடனே விஷயத்திற்கு வர முடியாது. ‘எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?’ என ஆரம்பித்து சில நிமிடம் தேவையில்லாத விஷயங்கள் பற்றி பேச வேண்டியிருக்கும். நேரத்தைச் சேமிக்க நினைப்பவர்கள் மற்றும் நேரடியாக விஷயத்தைப் பேச விரும்புபவர்கள் மெசேஜ் முறையை ஒரு சிறந்த வழியாகப் பார்க்கிறார்கள்.
கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: மெசேஜ் செய்வது வசதியாக இருந்தாலும், சில உணர்ச்சிகரமான விஷயங்களை எழுத்துக்களால் முழுமையாகக் கடத்த முடியாது. குரலில் இருக்கும் அந்த நெருக்கம் மெசேஜில் கிடைக்காது. எனவே, சாதாரண தகவல்களுக்க வாட்ஸ் அப் மெசேஜ் பயன்படுத்துங்கள். ஆழமான அன்பை வெளிப்படுத்தும்போதும், அக்கறையாக விசாரிக்கும்போதும் அல்லது மன்னிப்பு கேட்கும் சூழலின்போதும் கால் செய்யுங்கள்.
மெசேஜ் செய்வது என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல; அது நமது மன அமைதியையும், நேரத்தையும் பாதுகாத்துக் கொள்ள நாம் கையாளும் ஒரு நவீன 'சைக்காலஜிக்கல் ஹேக்'. அடுத்த முறை யாராவது உங்களுக்கு மெசேஜ் செய்தால், அவர்கள் உங்களை மதிக்கவில்லை என்று நினைக்காதீர்கள்; அவர்கள் தங்கள் வார்த்தைகளில் அதிக கவனமுடன் இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளுங்கள்!