

நெடுஞ்சாலைகளில் நாம் பயணிக்கும்போது உரிய இடங்களில் பலவிதமான வண்ணங்களைப் பின்புலமாகக் கொண்டு வழிகாட்டிப் பலகைகளைக் (Sign Boards) காண நேரிடுகிறது. இத்தகைய வழிகாட்டிப் பலகைகள் அனைத்தும் ஏன் ஒரே வண்ணத்தில் அமைக்கப்படாமல், பலவிதமான வண்ணங்களில் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணமும் தனித்துவமானவை. வண்ணங்கள் நம் மன ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. உதாரணமாக, சிவப்பு வண்ணத்தைப் பார்த்தால் நம் மனமானது ஒருவித எச்சரிக்கை உணர்வினை உடனே அடைகிறது.
ஒவ்வொரு வண்ணமும் நமக்கு ஒருசில தகவல்களைத் தெரிவிக்கின்றன. இத்தகைய தகவல்களை நாம் புரிந்து கொண்டால் நன்மைகளை அடையலாம். அவை என்னென்ன தகவல்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வழிகாட்டிப் பலகைகள் பச்சை, நீலம், பிரௌன், மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என பொதுவாக ஆறு வண்ணங்களில் அவற்றிற்குரிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். வெளிநாடுகளில் இன்னும் சில கூடுதல் நிறங்களில் இத்தகைய வழிகாட்டி அல்லது தகவல் பலகைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
பச்சை வண்ண வழிகாட்டிப் பலகைகள் பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் (National Highways) அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய பச்சை வண்ண வடிகாட்டிப் பலகையானது அடுத்தடுத்து வரவிருக்கும் முக்கிய நகரங்களையும் மற்றொரு நெடுஞ்சாலை வரப்போகிறது என்பதையும் குறிப்பதற்காக அமைக்கப்படுகின்றன. பொதுவாக, பச்சை வண்ணமானது அமைதியான மனநிலையை உண்டாக்கும். பச்சை வண்ணம் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பாதவை. எனவேதான், நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலைகள் பச்சை வண்ண வழிகாட்டிப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நீல வண்ண வழிகாட்டிப் பலகையானது பொதுவாக மாநில நெடுஞ்சாலைகளில் (State Highways) அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய வழிகாட்டிப் பலகைகள் நாம் கடக்கும் ஊரில் அமைந்துள்ள கிராமங்களின் பெயர்கள், அருகில் உள்ள காவல்நிலையங்கள், மருத்துவமனைகள் முதலானவைற்றைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஊர்களில் தெருக்களின் பெயர்கள் நீல வண்ண பலகைகளிலேயே அமைக்கப்பட்டுள்ளதையும் நாம் காணலாம்.
பிரௌன் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகள் அந்த பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள், தேசிய நினைவுச்சின்னங்கள் (Monuments), நீர்வீழ்ச்சிகள் முதலான தகவல்களைத் தெரிவிக்க அமைக்கப்படுகின்றன. பிரௌன் வண்ணத்தில் அமைந்த வழிகாட்டிப் பலகையைக் கண்டவுடன் நமது மனம் அந்த பகுதியில் ஏதோ ஒரு சுற்றுலா அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளும்.
மஞ்சள் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தகவல் பலகைகள் எச்சரிக்கை மற்றும் தகவல் குறியீடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அபாயகரமான சூழ்நிலைகளில் கவனத்தை ஈர்க்க மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. சாலைகளில் அபாயகரமான வளைவுகள், பள்ளங்கள், விலங்குகளின் நடமாட்டம் முதலானவற்றைக் குறிக்க மஞ்சள் வண்ண தகவல் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளை வண்ணத்தில் உள்ள தகவல் பலகைகள் போக்குவரத்து தொடர்பான கட்டுப்பாட்டுத் தகவல்களை தெரிவிக்க உதவுகின்றன. உதாரணமாக, நோ ஹாரன், நோ பார்க்கிங், ஸ்பீடு லிமிட் முதலான தகவல்களைத் தெரிவிக்க பயன்படுத்தப்படுகின்றன.
சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் பலகைகள் கட்டாயமாக விதிகளைப் பின்பற்ற வேண்டிய எச்சரிக்கைகளைத் தாங்கி நிற்கும். உதாரணமாக, நிறுத்து (Stop), நுழைவு இல்லை (No Entry), வேகக் கட்டுப்பாட்டு வரம்பு (Speed Limit), யு-டர்ன் (No U Turn) எடுக்கக் கூடாது முதலான கட்டாயம் பின்பற்ற வேண்டிய எச்சரிக்கைத் தகவல்களை சிவப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு அமைப்பது வழக்கம்.