தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் அனைவரும் கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகளில் கலந்துகொள்வதும், பார்ட்டி, கெட்-டுகெதர் போன்றவற்றில் பங்கேற்பதும் வாழ்வியல் முறையில் மிகவும் சாதாரணமாகி விட்டது. அந்த மாதிரி நேரங்களிலெல்லாம் இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம், பொரித்த, வறுத்த உணவு வகைகள் என பலவற்றையும் கட்டுப்பாடின்றி சாப்பிட்டுவிட்டு வருவதும் சகஜமாகி விட்டது. இவை அனைத்தும் எவ்வித செரிமானக் கோளாறும் உண்டுபண்ணாமல் உடல் ஆரோக்கியம் காக்க, சாப்பாட்டுக்குப் பின் சில வகை மூலிகை டீ அருந்துவது நல்ல பயன் தரும் எனக் கூறப்படுகிறது. அவை எவை என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* பெப்பர்மின்ட் மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் டீ ஜீரண மண்டலத்தில் செரிமானம் சீராக நடைபெற ஓர் இனிய, அமைதியான சூழலை உருவாக்கித் தர வல்லது.
* கெமோமில் (Chamomile) மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து தயாரிக்கப்படும் டீ வயிற்றுக்குள் வீக்கம் மற்றும் வாய்வுக் கோளாறுகள் உண்டாவதைத் தடுக்க உதவுகிறது.
* கெமோமில் மற்றும் லாவண்டர் சேர்க்கப்பட்ட டீ நமது நரம்பு மண்டலத்தை நன்கு தளர்வுறச் செய்து நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது.
* கெமோமில் மற்றும் லெமன் பாம் சேர்க்கப்பட்ட டீ நேர்மறை எண்ணங்களுடன் கூடிய நல்ல மனநிலையை உண்டுபண்ணி நன்கு செரிமானம் நடைபெற உதவும்.
* நல்ல ஜீரணத்துக்கு நீரேற்றம் அவசியம். டீயில் நீரின் அளவு அதிகமாகவே இருக்கும். அது உணவுடன் கலந்து செரிமானத்துக்கு உதவும் என்பது தெள்ளத் தெளிவு.
* உணவு உண்ணும்போதும் இடை இடையே ஒரு வாய் மூலிகை டீயை குடித்துக்கொண்டே சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும்.
* பல மூலிகை டீக்களில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. அதிக கலோரி கொண்ட உணவை ஜீரணிக்கவும் சத்துக்களை உறிஞ்சவும் உதவியாயிருந்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கவும் செய்கின்றன.
* அதிகளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உட்கொண்டதால் இரத்தத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரையின் அளவை, பட்டை (Cinnamon) பவுடர் சேர்த்து தயாரித்த டீ அருந்துவதால் சமநிலைக்குக் கொண்டுவர முடியும்.
* புதினா இலைகள் சேர்த்து தயாரித்த டீ அருந்தினால், அஜீரணம் போன்றவற்றால் உண்டாகும் புளியேப்பத்தால் வரும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
* டான்டேலியன் (Dandelion) அல்லது நெட்டில் (Nettlle) போன்ற மூலிகையில் டீ தயாரித்து அருந்துவதால் அவை இயற்கை முறையில் நச்சுக்களை வெளியேற்றி நலம் பெற உதவுகின்றன.
எந்த வகை மூலிகை உபயோகித்து டீ தயாரித்து அருந்தினாலும் அது ஜீரண மண்டல உறுப்புகளை நன்கு தளர்வுறச் செய்து அளவுக்கதிகமாக உட்கொண்ட உணவுகள் நல்ல முறையில் செரிமானமாக உதவி புரியும்.