"நீங்கள் எதையும் கேட்கவில்லை என்றால். எப்போதுமே உங்களுக்கு, ‘இல்லை’ என்ற பதில்தான் கிடைக்கும்" என்கிறார் பிரபல நாவலாசிரியர் நேரா ராபர்ட்ஸ். இதிலிருந்தே கேள்வி கேட்பதன் மகத்துவம் புரியும் உங்களுக்கு. நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை வைத்துத்தான் உங்களை மற்றவர்கள் எடை போட முடியும். கேட்டால் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற தயக்கத்தில்தான் யாரும் கேட்கத் தயங்குகின்றனர். கேளுங்கள் சரியோ, தவறோ அது நம் உரிமை.
கேட்பதில் வெட்கம் தேவை இல்லை. கேட்க மிகவும் தயக்கம் என்றால், ‘உங்களால் எனக்கு ஏதாவது உதவ முடியுமா? உங்களை நம்பி ஒன்று கேட்கிறேன்’ என்று தொடங்கி உங்களுக்கு வேண்டியதை பணிவாகக் கேளுங்கள்.
கேளுங்கள், எதையும் பயமின்றி கேளுங்கள். இதற்கு முறையான பயிற்சி இருந்தாலே போதும். ஒரு முறை கேட்டு எதுவும் ஆகவில்லையா? பரவாயில்லை மறுபடியும் கேளுங்கள். தயங்காதீர்கள். எதையும் கேட்பதற்கு முன் ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து முறையாக ஆணித்தரமாக கேளுங்கள்.
கேள்வி ஞானம் எப்போதும் வெற்றிக்கு அவசியமாகும். பாடங்கள் படிக்கும்போது, ஒரு திட்டத்தை செயல்படுத்த முனையும்போது ஏன், எங்கே, எப்படி, யார்? என பல்வேறு கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது இலக்கை அடைய உதவும்.
எல்லா நேரங்களிலும் அடக்கமாக, அமைதியாக ஜென்டில்மேன் போன்று நடந்து கொள்வது நல்லதல்ல என்கிறது ஓர் ஆய்வு. குறிப்பாக, சம்பளம் பேசி முடிப்பதில் ஜென்டில்மேனை விட வாயாடிகள் சாதிப்பதாக ஆய்வு கூறுகிறது.
ஆஸ்திரேலியாவின் யுனிவர்சிட்டி ஆப் நோட்ரே டேம்ஸ் ஆய்வில் வேலைக்கு செய்பவர்களின் ஆளுமை மற்றும் சமூக பழக்க வழக்கம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் அடக்கமான குணம் கொண்ட ஜென்டில்மேனை விட, அதிக அளவில் கேள்வி கேட்டவர்கள் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவது தெரிய வந்துள்ளது.
சம்பளம் பேசி முடிப்பதில் இருந்து பதவி உயர்வு பெறுவது வரை வாயாடிகள், அதாவது அதிகம் கேள்வி கேட்பவர்கள் சிறந்து விளங்குகின்றனர். குறிப்பாக எதைச் சொன்னாலும் தலையாட்டுபவர்களை விட எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் 18 சதவீதம் கூடுதலாக சம்பாதிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உங்கள் வாழ்வின் அர்த்தம் நீங்கள் கேள்வி கேட்பதன் மூலமே கிடைக்கிறது. அதிக கேள்வி கேட்பதன் மூலமே நல்ல பதில்களை பெற முடியும். நம் வாழ்வின் தரம் நாம் கேட்கும் கேள்விகள் பொறுத்தே அமைகிறது. நீங்கள் வெளிப்படையானவரா, புத்திசாலியா என்பது நீங்கள் கேட்கும் கேள்விகள் மூலமே அறியப்படும். வாழ்வின் மகிழ்ச்சி நீங்கள் கேட்கும் நல்ல கேள்விகள் மூலமே கிடைக்கிறது.
உங்கள் எண்ணங்கள் சரியானதுதானா என்பது நீங்கள் கேட்கும் கேள்விகள் மூலமே தெரியவரும். கேள்வி கேட்பது உங்கள் அறிவு விசாலமடைய உதவுகிறது. கேள்விகளே உங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும்.
முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு கேள்வியை தினந்தோறும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முடிந்த பிறகு தாங்கள் செய்த செயல்களை ஆராய்ந்து இதுதான் என்னுடைய சிறப்பான செயலா? என கேட்டுககொள்ளும்போது நாம் செய்த தவறுகள் நமக்கு தெரியவரும். அவற்றை திருத்திக்கொண்டு ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்ற முடியும்.
உங்களுக்கு எந்தத் துறையில் உயர்வு வேண்டும் என்பதில் தெளிவான தீர்மானம் இருக்க வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் எதைச் செய்து முடிக்க இருக்கிறீர்கள் என்பதும் திட்டவட்டமாகத் தெரிந்து இருக்க வேண்டும். உண்மையான இலட்சியத்தை அடைய இத்தகைய கேள்விகளை அடிக்கடி உங்களுக்கு நீங்களே கேட்டு, உங்களைத் திருத்தி வடிவமையுங்கள் அப்போதுதான் குறிப்பிட்ட இலக்கை அடையத் தேவையான ஊக்கம் தொடர்ந்து தங்களுக்குள் உருவாகும்.
1879ம் ஆண்டு பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளில் சர்வதேச கேள்விகளைக் கேளுங்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவருடைய பிரபலமான மேற்கோள்களில் ஒன்று ‘கேள்வியை நிறுத்தக்கூடாது’ என்பதுதான்.
‘கேள்வி கேட்பதால் கேட்ட ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீங்கள் முட்டாளாக கருதப்படுவீர்கள். கேள்வியே கேட்காமல் இருந்தால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் முட்டாளாக கருதப்படுவீர்கள்" என்பது ஒரு சீன பழமொழி.
எனவே, நீங்கள் எதையாவது பற்றி ஆர்வமாக இருந்தாலோ, எதையாவது பற்றி தெளிவில்லாமல் இருந்தாலோ அல்லது கூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ கேள்வியைக் கேளுங்கள். கேள்விகளைக் கேட்பதே கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி. எந்த கேள்வியும் முட்டாள்தனமான கேள்வி அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.