
வீடு அல்லது நிலம் போன்ற சொத்துக்களை வாங்கிய பிறகு சில ஆவணங்களை சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் உரிமையை உறுதிப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இந்த ஆவணங்கள் தேவை. அந்த வகையில் சொத்துக்கள் வாங்கிய பிறகு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கிரயப் பத்திரம் அல்லது தானப் பத்திரம்: வீடு அல்லது நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்றும்போது பெறப்படும் கிரையப் பத்திரம், தானப் பத்திரம் அல்லது இதர பத்திரங்கள் போன்றவை உங்களுடைய உரிமையை உறுதிப்படுத்தும் முதன்மை ஆவணங்களாக இருக்கின்றன. உயில், பாகப்பிரிவினை, சொத்து தானம், வாரிசுரிமை, அரசு ஒதுக்கீடு போன்றவற்றின் மூலம் அந்த நிலம் பெறப்பட்டிருந்தால் அதற்குரிய ஆவணங்கள் மிகவும் முக்கியம்.
முந்தைய உரிமையாளரின் சொத்தாக இருந்தபோது பயன்படுத்தப்பட்ட மூலப் பத்திரமும், இல்லையெனில் அதற்கான சான்றிதழ் நகலும், தொலைந்து விட்டால் அதற்காக காவல்துறையில் புகார் அளித்த சான்றும் மிகவும் முக்கியமாகும்.
பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்: சொத்தின் சட்டபூர்வ உரிமையை உறுதி செய்ய உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்கள் அரசுப் பதிவேடுகளில் உங்களுடைய சொத்தின் அடையாளத்தை உறுதி செய்யும். சொத்தின் மீது கடனோ அல்லது சட்ட சிக்கலோ இல்லை என்பதை வில்லங்க சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது. கட்டடமாக சொத்து வாங்கி இருந்தால் அதற்கான கட்டட அனுமதி மற்றும் ஆவணங்கள் சொத்து சட்டபூர்வமாக கட்டப்பட்டதா என்பதை உறுதி செய்யும்.
சொத்து வரி, மின்சார பில் அவசியம்: சொத்து வரி மற்றும் மின்சார பில் சான்றிதழ்கள் உங்கள் பெயரில் முறையாக சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதோடு, வங்கிக் கடன் சொத்தின் மீது இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமாகவும் இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
நகல் எடுத்து வைத்திருந்தால் நல்லது: அசல் ஆவணங்களை வங்கியில் லாக்கர் போன்ற பாதுகாப்பான இடங்களில் வைப்பதோடு ஒவ்வொரு ஆவணத்தின் நகலையும் எடுத்து வைப்பது மிகவும் இன்றியமையாதது. மேலும், எந்த ஆவணங்கள் எங்கு உள்ளது என்பது போன்ற விபரங்களை குடும்ப உறுப்பினர்களிடம் தெரியப்படுத்துவதால் எந்தவித குழப்பமும் இல்லாமல் எதிர்காலத்தில் ஆவணங்களை முறையாகப் பாதுகாக்க முடியும்.
சொத்து வாங்கியவுடன் மேற்கூறிய ஆவணங்களை முறையாகப் பராமரித்து எதிர்கால சிக்கல்களுக்கு தீர்வு காணுங்கள்.