நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் சமையலறைதான் பிரதான இடம். இங்குதான் நமது ஆரோக்கியத்திற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. பெரிய பெரிய விஷயங்கள் மட்டுமல்லாமல், சிறிய சிறிய வீட்டுக்குறிப்புகளும், சில உணவுப் பழக்கங்களும் நமது வேலைகளை எளிதாக்குவதுடன், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அப்படிப்பட்ட சில பயனுள்ள எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க வெங்காயம் அல்லது தக்காளி சட்னி அரைக்கும்போது, வறுத்த வெள்ளை அல்லது கருப்பு எள்ளை சிறிதளவு பொடி செய்து சேர்த்தால், சட்னியின் சுவையும் நறுமணமும் கூடும்.
பால் பாயாசம் செய்யும்போது, அரைத்த பாதாம் பருப்பைச் சேர்ப்பது தனிச் சுவையைக் கொடுக்கும்.
ரவா கேசரி செய்யும் முன், ரவையை நெய்யில் வறுத்து, காய்ச்சிய பாலைப் பயன்படுத்திச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுக்கும்போது சிறிதளவு இட்லிப் பொடியைத் தூவி வறுத்தால், அதன் சுவை இன்னும் அதிகரிக்கும்.
சில சமயங்களில் பச்சை குடைமிளகாய் காரமாக இருக்கும். அதன் விதைகளை நீக்கிவிட்டுச் சமைத்தால் காரம் குறையும்.
முள்ளங்கிச் சமைக்கும்போது எண்ணெயில் நன்கு வதக்கிச் சமைத்தால், அது எளிதில் சளி பிடிக்காமல் தடுக்கும்.
இஞ்சியைத் துருவி வெயிலில் காயவைத்து அரைத்த பொடியை பால், டீ, பொங்கல் போன்ற பலவற்றில் சேர்த்தால், மணத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால், அதன் மீது கோலப்பொடி அல்லது அரிசி மாவைத் தூவி சிறிது நேரம் கழித்துத் துடைத்தால், எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
ஈக்கள் மற்றும் எறும்புகள் வராமல் தடுக்க, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து சமையலறையின் ஓரங்களில் தெளித்து விடலாம்.
மெதுவடைக்கு உளுத்தம்பருப்புடன் சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக வரும்.
இஞ்சி பூண்டு விழுது அரைக்கும்போது சிறிதளவு உப்பும் மஞ்சளும் சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
நெய் காய்ச்சும் பொழுது சிறிதளவு உப்பு சேர்த்து காய்ச்சினால் நல்ல வாசனையாகவும், நீண்ட நாட்களுக்குப் புதியது போலவும் இருக்கும்.
தேங்காய் துவையல் செய்யும்போது சிறிதளவு கசகசா சேர்த்து அரைத்தால் சுவையாக இருப்பதுடன், இரவு நல்ல உறக்கத்திற்கும் உதவும்.
இப்படிச் சிறியதாகத் தோன்றும் இந்தக் குறிப்புகள் சமையலறையில் நமது வேலைகளைச் சுலபமாக்குவதுடன், உணவின் தரத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.