
தற்காலத்தில் பல தனி வீடுகள் மற்றும் ஃப்ளாட்டுகளில் சமையல் அறை என்பது மிகச்சிறியதாகவே அமைக்கப் படுகிறது. இடநெருக்கடியின் காரணமாக மிகவும் சிரமப்பட்டே சமைக்க வேண்டியுள்ளது. சமையல் அறை சிறியதாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டால் இருக்கும் சிறிய இடத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தி சமைக்கலாம். அதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்.
சமையலறையில் தினமும் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் எனப் பார்த்தால் குக்கர், பிரஷர் பான், தோசை தவா, இட்லி வேகவைக்க, சாதம் வடிக்க, குழம்பு வைக்க, ரசம் வைக்க, பொரியல் வைக்க, பால் காய்ச்ச, சாப்பிடும் தட்டுகள் சில, குடிக்க டம்ளர் சில மற்றும் கரண்டிகள் இவையே முக்கியமானவை. ஆனால் இன்று பலருடைய சமையல் அறையில் பார்த்தால் நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
இவற்றில் பலவற்றை ஒருபோதும் பயன்படுத்துவதே இல்லை. குறுகிய சமையலறையில் இத்தகைய தேவையற்ற பாத்திரங்களே பெரும் இடத்தை ஆக்கிரமித்து நம்மை சிக்கலில் மாட்டி விடுகின்றன. தேவையில்லாத பாத்திரங்களை தூக்கிப்போடவும் மனசு வராது. தினமும் பயன்படுத்தம் தேவையும் இருக்காது.
எனவே, இல்லத்தரசிகளே! இன்றே நீங்கள் அன்றாட உபயோகத்திற்குத் தேவையான பாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து வைத்துக்கொண்டு அதிகப்படியாக இருக்கும் பாத்திரங்களை யாருக்காவது கொடுத்து உபயோகிக்கச் சொல்லலாம். இல்லையென்றால் அவற்றை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு பேக் செய்து வீட்டில் உள்ள பரணில் போட்டு வைத்து பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் கிடைக்கும் இடத்தில் அவசியமான சமையலுக்குத் தேவையான பொருட்களை வைத்துப் பயன்படுத்தலாம்.
சமையல் மேடையில் கேஸ் அடுப்பு, மிக்ஸி தவிர வேறு எந்த பொருளையும் வைக்காதீர்கள். சமைக்கும்போது காய்கறி நறுக்க, மிக்ஸியில் அரைக்க இந்த இடத்தை சிக்கலின்றி பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
தற்காலத்தில் குடும்ப விழாக்களுக்குச் செல்லும்போது டிபன் பாக்ஸ், தட்டுகள், சிறிய டப்பாக்கள் முதலானவற்றை ரிட்டர்ன் கிப்ட்டாகத் தருகிறார்கள். இத்தகைய எவர்சில்வர் பாத்திரங்களும் சமையலறையை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன. இவற்றை சமையல் அறையில் வைக்காமல் வேறு இடங்களில் வைக்கப் பழகுங்கள்.
பொதுவாக சமையலறை சிமெண்ட் ஷெல்ப்களில் எல்லா அறைப் பிரிவுகளும் (Partitions) ஒன்றரை அடி இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். கோதுமைமாவு, பருப்புகள் முதலான சமையல் பொருட்களைப் போட்டு வைக்கும் பெரிய டப்பாக்களை அடுக்கி வைக்க இந்த இடைவெளி சரியாக இருக்கும். ஆனால் இத்தகைய பெரிய ஷெல்ப்புகளில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு முதலான சிறிய ரக டப்பாக்களை வைக்கும்போது இடம் வீணாகும். ஷெல்ப்பில் நடுவில் உள்ள இரண்டு பிரிவுகளில் மட்டும் ஒரு நீளமான பிளைவுட்டை இடையில் பொருத்திவிட்டால் கிடைக்கும் கூடுதலாக கிடைக்கும் இரண்டு பிரிவுகளில் இத்தகைய சிறிய டப்பாக்களை அடுக்கி வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக எவர்சில்வர் டப்பாக்களில் சமையல் பொருட்களை போட்டு வைத்துப் பயன்படுத்துவது வழக்கம். வழக்கமாக சமைப்பவரைத் தவிர்த்து வீட்டில் உள்ள யாராவது சமையலறையைப் பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் பொருட்களைத் தேடிக்கண்டு பிடித்து சமைப்பது சிரமமாக இருக்கும். இந்த சிக்கலைத் தவிர்க்க கண்ணாடியிலான டப்பாக்களில் சமையல் பொருட்களைப் போட்டுப் பயன்படுத்துங்கள். இதில் மேலும் ஒரு நன்மை என்னவென்றால் பொருட்கள் தீரும்போது அதை கவனித்து அவ்வப்போது அவற்றை வாங்கி வந்து நிரப்பிக்கொள்ளலாம்.
சமைத்த பாத்திரங்களை சிங்க்கில் போட்டு வைத்து இரவு அல்லது மறுநாள் காலையில் சுத்தம் செய்யும் வழக்கம் பலருக்கு உள்ளது. இதனால் சமையல் அறையில் துர்நாற்றம் வீசும். மொத்த பாத்திரத்தையும் ஒரே சமயத்தில் சுத்தம் செய்வது மிகவும் சிரமமான காரியம்.
மொத்த பாத்திரங்களையும் ஒரே சமயத்தில் சுத்தம் செய்யும்போது அவற்றை காயவைக்க இடம் இருக்காது. ஒருவேளை உணவை சமைத்ததும் சேரும் பாத்திரங்களை அப்போதே சுத்தம் செய்து காயவைத்து விடுங்கள். வேலையும் சுலபமாக இருக்கும். துர்நாற்றம் வீசுவதும் தவிர்க்கப்படும்.
சிங்க்கின் கீழ்ப்பகுதியில் மெல்லிய ஸ்டெய்னஸ் ஸ்டீல் மெஷ்ஷை போட்டு வைத்து பிறகு பாத்திரங்களை சுத்தப்படுத்துங்கள். பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சாதம் முதலான பல சமையல் கழிவுகள் சிங்கிற்குள் சென்று சிங்க் அவ்வப்போது அடைத்துக் கொள்ளுவதை இதன் மூலம் சுலபமாகத் தவிர்க்கலாம். பாத்திரங்களை சுத்தம் செய்து முடித்ததும் மெஷ்ஷை எடுத்து அதில் படிந்துள்ள சமையல் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டி மீண்டும் சிங்க்கிற்குள் போட்டுப் பயன்படுத்தலாம்.