

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சொற்றொடரே ஆறுதல். அந்த வகையில் சில சின்னச் சின்ன வாழ்க்கை முறை மாற்றங்களை பழகிக் கொண்டால் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாழ்க்கை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாறிவிடும் .அது குறித்து இப்பதிவில் காண்போம்.
* குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் அமர்ந்து பேசும் நேரங்களில் கைப்பேசியில் ஏதாவது அழைப்பு வந்தால் கவனம் உரையாடலில் இல்லாமல் மனப்பூர்வமாக பேச முடியாது அல்லது போனை நோண்டுவீர்கள் என்பதால் அத்தகைய நேரங்களில் மொபைலை தூக்கி தூர வைத்து விடுங்கள்.
* உடலை உறுதியாக்க, அவசரமான நேரங்கள் தவிர மற்ற தருணங்களில் உயரமான கட்டடங்கள் போன்றவற்றை தவிர்த்து, மற்ற எல்லா இடங்களிலும் லிப்டிற்கு பதிலாக படிகளைப் பயன்படுத்துங்கள். இது உடற்பயிற்சியைத் தாண்டி உடலை உறுதியாக்கி உற்சாகமூட்டும்.
* தினசரி சரியான நேரத்தில் கண் விழித்து எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மனம் ஒருநிலைப்படும். மேலும், அதிகாலையில் எழுந்தவுடன் வாக்கிங், கொஞ்ச நேரம் படிப்பு என பழகிக் கொண்டால் மனம் உற்சாகமடையும்.
* காலையில் எழுந்ததும் சில நிமிடங்களை ஒதுக்கி, இன்று செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டுக் கொண்டால் அன்றைய நாளின் பல நிமிடங்களை மிச்சம் செய்ய உதவும்.
* உடலை உற்சாகமாக வைத்திருக்க பசி எடுக்கும்போது சாப்பிடுவதோடு, தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
* உங்களுக்கு அருகிலேயே ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளான பழங்கள், கொட்டை வகைகளை வைத்திருங்கள். இல்லையென்றால் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிட வேண்டியதாகிவிடும்.
* எந்த ஒரு வேலையையும் தேவையில்லாமல் தள்ளிப் போடக் கூடாது. மேலும், ஒரு வேலை முடிந்ததும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.
* மனதை இதமாக வைத்திருக்க அவ்வப்போது திருவிழாக்கள், சுற்றுலாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்தாருடன் செல்லுங்கள். பக்கத்து தெருவில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவது கூட இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் செயலாகும்.
* சிரிப்பு மனதிற்கும் உடலுக்கும் நல்லது என்பதால் யாரைப் பார்த்தாலும் புன்னகையுடன் பேச ஆரம்பியுங்கள்.
* வீட்டில் தோட்ட வேலை செய்வது, அருகில் உள்ள பூங்காவிற்கு செல்வது, கடைகளுக்கோ அல்லது கோயிலுக்கோ நடந்து செல்வது போன்றவை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதிலிருந்து விடுதலை கொடுக்கும்.
* எப்போதும் உட்கார்ந்தபடியே டிவி பார்க்காமல் கை, கால்களை அசைத்து ஸ்ட்ரெச்சிங் செய்வதோடு போன் பேசும் நேரங்களில் காலார நடந்துகொண்டே பேசுவது உடலுக்கு நன்மை தரும் பழக்கமாகும்.
* கொடுப்பவர்களே அதிகம் பெறுகிறார்கள் என்பதால், தேவையான சூழ்நிலைகளில் அடுத்தவரின் உதவிகளை தயங்காமல் கேட்பதோடு, உங்களால் முடிந்த உதவிகளையும் அடுத்தவர்களுக்கு செய்யுங்கள்.
மேற்கூறிய சிறிய சிறிய மாற்றங்களை பழக்கப்படுத்திக் கொண்டால் மனதும் உடலும் உறுதியடையும்.