குடும்ப உறவில் சண்டைகள் வருவது மிகவும் இயல்பானதுதான். ஆனால், சண்டைக்குப் பிறகு வரும் சமாதான உடன்படிக்கையில்தான் பலரும் கோட்டை விடுகிறார்கள். இதனால் சண்டை பெரிதாகி சமரசம் என்பது இல்லாமல் போகும் அளவிற்கு அது கொண்டு விடுகிறது.
மனிதர்கள் தனித்தன்மை உடையவர்கள். எல்லோருக்கும் பொதுவான விஷயங்கள் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றோ, இப்படி நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றோ நம் துணையை பற்றி நினைப்போம். எந்த உறவிலும், குறிப்பாக கணவன், மனைவி உறவில் சந்தோஷங்கள் மட்டுமே நிறைந்திருக்காது. அடிக்கடி ஊடலும் பின்பு கூடலும் நிகழத்தான் செய்யும். தனித்தனியான இரண்டு மனிதர்கள் இணைந்து உருவாகும் உறவில் கருத்து வேற்றுமைகளும், விவாதங்களும், விருப்பு வெறுப்புகளும் வராமல் போகாது.
கோபத்தில் சண்டை போடலாம் தவறில்லை. குடும்ப உறவில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள சின்னச் சின்ன சண்டைகள் தேவைதான். ஆனால், அவை நீண்ட காலம் நீடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சண்டைக்குப் பின் சமாதானக் கொடியை யார் முதலில் தூக்குகிறார்கள் என்பது முக்கியம். சண்டை போடவும் சண்டைக்கு பிறகான சூழலை சமாளிக்கவும் முடியுமென்றால் அடிக்கடி சண்டை போடலாம். ஜாலியாக. ஊடலும் காதலும் உறவில் தேவைதான். அவைதான் அந்த உறவை உயிர்ப்புடன் வைத்திருக்கும். உறவை பிடிப்புடன் மேலும் பலப்படுத்தும், வளப்படுத்தும்.
கோபத்தில் உண்டாகும் சண்டை நீண்ட நேரம் நீடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமைதிகொள்ள வேண்டும். முதலில் யார் பேசுவது, யார் இறங்கி வருவது என்று போட்டி போடாமல் கோபம் தீர்ந்தவுடன் யார் வேண்டுமானாலும் முதலில் இறங்கி வந்து சமாதானமாக போகலாம். காலம் அதிகரிக்க அதிகரிக்க அந்த சண்டை சமாதானமாக முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகமாகும்.
நம் வாழ்க்கைத் துணைவரிடம் விட்டுக்கொடுத்துப் போவதில் தவறில்லை. அவர் ஒன்றும் எதிரி அல்ல. இருவருக்கும் பிடித்த விஷயங்கள் எவ்வளவோ இருக்கும்பொழுது உப்பு சப்பற்ற சின்னச் சின்ன விஷயங்களுக்காக கொடி தூக்குவது சரியல்ல. மன்னிக்க முன்வாருங்கள். தவறு யார் மீது உள்ளதோ அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. கிடைத்த அருமையான சுழலை கெடுத்துக் கொண்டதற்காக யார் வேண்டுமானாலும் முதலில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கலாம்.
மன்னிப்பு கேட்பது வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், உள்மனதிலிருந்து உண்மையாக வர வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமானது சண்டையிலிருந்து இருவரும் என்ன தெரிந்து கொண்டார்கள் என்பதுதான். தனது துணைக்கு இப்படிச் செய்வது அல்லது இப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என தெரிந்து கொண்டு அடுத்த முறை அதனைத் தவிர்க்க நினைப்பதுதான் புத்திசாலித்தனம். வீம்புக்கு துணைவருக்குப் பிடிக்காததையே திரும்பத் திரும்ப செய்யும்பொழுது உறவின் தன்மை கெட்டு விடும்.
சண்டையே போடாதவர்கள் பர்ஃபெக்ட் தம்பதிகள் கிடையாது. எந்த சண்டை வந்தாலும் அதை சரியாகக் கையாளத் தெரிய வேண்டும். உறவை சுமூகமாக்க முயற்சிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் துணையின் சுயமரியாதையை பாதிக்கும் விஷயங்களைச் சொல்லி சண்டையிடக் கூடாது. மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் நம் துணை பகிர்ந்து கொண்ட ரகசியங்களை சண்டையின்போது சொல்லிக்காட்டி, குத்திப் பேசி அவமதிக்க வேண்டாம்.
எதற்காக சண்டை வந்ததோ அந்தக் காரணத்தைத் தாண்டி மற்றவற்றைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அன்று அப்படிப் பேசினீர்கள், இப்படி சொன்னீர்கள் என்று தேவையில்லாத அனாவசிய பேச்சை பேசாமல் இருப்பது சண்டையின் வீரியத்தைக் குறைக்கும். எக்காரணத்தைக் கொண்டும் கடினமான வார்த்தைகளை சண்டையின்பொழுது பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எதிரில் உள்ளவரின் மனம் புண்படும்படி பேசிவிட்டு பிறகு, ‘கோபத்தில் சொல்லிவிட்டேன், மன்னித்து விடுங்கள்’ என்றோ, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று வாதம் செய்வதோ அர்த்தமற்றது. குடும்ப உறவில் விரிசல் வராமல் பாதுகாக்க வாழ்த்துக்கள்!