
தம்பதியருக்குள் ஏற்படும் மனமுறிவு அவர்களின் மணமுறிவுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. விவாகரத்துகள் அதிகமாகி வருவதன் பின்னணியில் பரஸ்பர ஒற்றுமையின்மை, புரிதல் இல்லாமை, குறைந்த சுயமரியாதை என பல காரணங்கள் இருக்கின்றன. கணவன், மனைவி உறவில் பொறுத்துக்கொள்ள முடியாத சில விஷயங்கள் உண்டு. அவை என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உடல் மற்றும் மன ரீதியான வன்முறை: கோபம் மற்றும் வாக்குவாதத்தின்போது மனைவியை அடிப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது மற்றும் உணர்ச்சி ரீதியாக அவமரியாதை செய்தல், கெட்ட வார்த்தைகளில் திட்டுதல், அவர்களது சுயமரியாதையை குறைத்து மதிப்பிட்டுப் பேசுதல் போன்றவற்றை எந்தப் பெண்ணும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. மனைவியும் தனது கணவனை மேற்கண்ட முறையில் நடத்தவே கூடாது. சில இடங்களில் பாலியல் ரீதியான வன்முறையும் நடக்கிறது. இவற்றை ஒருபோதும் ஆணோ, பெண்ணோ அனுமதிக்கக் கூடாது. பொறுத்துக்கொள்ளவும் கூடாது.
2. துரோகம்: கணவன், மனைவி உறவில் நேர்மையும் உண்மைத் தன்மையும் மிகவும் முக்கியம். துரோகம் செய்வது, ஏமாற்றுவது போன்றவற்றை ஒரு ஆணோ, பெண்ணோ சகித்துக்கொள்ளக் கூடாது. நம்பிக்கையும் விசுவாசமும்தான் ஒரு நல்ல தம்பதிக்கு அடையாளம். அதை மீறும்போது அந்த உறவிற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.
3. கட்டுப்படுத்தும் குணம்: கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டுமே தவிர, அடக்கியாள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அது எப்போதும் மோதலில் மட்டுமே முடியும். தனது துணையின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல அன்பாகவும் பக்குவமாகவும் நடந்து கொண்டால் மட்டுமே அந்த உறவு சிறப்பாக இருக்கும். தன்னுடைய கருத்துக்களைத் திணிப்பது, எதிர்க் கருத்துக்களுக்கு மோசமாக நடந்து கொள்வது, சந்தேகப்படுவது, ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கேட்பது போன்றவை நச்சு நடத்தையின் அறிகுறிகள். இவற்றைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
4. உருவக்கேலி: உருவக்கேலி என்ற உடல் தோற்றத்தைப் பற்றி இழிவான கருத்துக்களை ஒருபோதும் தம்பதியர் பேசக் கூடாது. அது அவமானம், குற்ற உணர்வு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். உடை அணியும் விதம் மற்றும் தோற்றத்தில் தொடர்ந்து குறைபாடுகளைக் கண்டுபிடித்து விமர்சித்துக்கொண்டே வந்தால் மற்றவரால் தாங்கிக்கொள்ள முடியாது. உணர்ச்சி ரீதியான தீங்கு விளைவிக்கும். மனம் புண்பட்டு அன்பு குறைந்துவிடும்.
5. தனிமைப்படுத்த முயற்சித்தல்: கணவனோ, மனைவியோ அவர்களது அன்புக்குரியவரிடமிருந்து அவரை தனிமைப்படுத்த நினைத்துச் செயல்படுவது கண்டிக்கத்தக்கதாகும். நெருங்கிய உறவினர்களிடம் கூட பேச விடாமல் அவர்களுடன் பழக விடாமல் செய்வது பாதுகாப்பற்ற தன்மையை தோற்றுவிக்கும். தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கணவன், மனைவி இருவரும் வெளிப்படையாகப் பழகுவதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.
6. அவமரியாதை செய்வது: கேலி செய்வது, மனம் புண்படுத்தும் விதம் பேசி சிரிப்பது, கண்களை உருட்டுவது போன்ற உடல் சைகைகள் ஆழ்ந்த வெறுப்பின் வெறுப்பு மற்றும் அவமதிப்பின் அடையாளங்கள். இதை திருமணத்தின் ஆன்மாவையே அழித்து விடும். இவற்றை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
7. அடிமைத்தனம்: பெண் மட்டுமே நாள் முழுவதும் சமைத்து, வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளை கவனிப்பது என்ற காலம் மலையேறி விட்டது. வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சமநிலையாக இருக்கும். ஒருவர் மீது மட்டுமே அனைத்து பொறுப்புகளும் திணிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளவே கூடாது. மகிழ்ச்சியான உறவு நீடிக்க வேண்டும் என்றால் கணவனோ, மனைவியோ இந்தச் செயல்களை ஒருபோதும் செய்யக் கூடாது.