குடும்பம் என்பதுதான் நம் வாழ்வின் அடித்தளம். இது அன்பு, ஆதரவு மற்றும் நல்ல உணர்வை வழங்குகிறது. சில நேரங்களில் நம் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில விஷயங்களை நாம் மறைக்கிறோம். ஆனால் குடும்ப உறுப்பினர்களிடம் ஒருபோதும் மறைக்கக்கூடாத விஷயங்கள் என சிலது உள்ளது. அவை என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
உடல்நலப் பிரச்சனைகள்: குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஒருபோதும் மறைக்கக்கூடாத மிக முக்கிய விஷயங்களில் உடல்நலப் பிரச்சனைகளும் ஒன்று. நாள்பட்ட நோய்கள் மனநல போராட்டங்கள் அல்லது குறிப்பிடத்தக்க மருத்துவப் பிரச்சனைகள் போன்ற எதுவாக இருந்தாலும், நமது குடும்பத்திற்கு அவற்றை தெரியப்படுத்த வேண்டும். இது மூலமாக உங்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு கிடைக்கும். மேலும் அவசர காலங்களில் உங்களுக்கான உதவிகளும் கிடைக்கலாம்.
நிதிப் பிரச்சனைகள்: குடும்பங்களில் நிதிப் பிரச்சனை என்பது சாதாரணமானது என்றாலும், மிகப்பெரிய நிதிச்சுமை மற்றும் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மறைப்பது அந்த நிலையை மேலும் மோசமாக்கலாம். எனவே உங்களது நிதிப் பிரச்சனைகளை குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டு அவற்றை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளைக் கேட்டுப் பெறவும். கடினமான நிதிச் சூழலில் குடும்ப உறுப்பினர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.
உறவுகளில் சிக்கல்: ஒரு குடும்பத்தில் உறவுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். கணவன், மனைவி, தாய், தந்தை, மாமனார், மாமியார் என இவர்களுக்குள் இருக்கும் சிக்கல்களை மறைக்காமல் வெளிப்படையாக பேசிக் கொள்வது முக்கியம். இவற்றை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தால், உறவுகளுக்குள் விரிசல் தான் ஏற்படும். எனவே எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது.
தனிப்பட்ட இலக்குகள்: உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட இலக்குகள் இருந்தால் அதை வெளிப்படையாக குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லிவிடவும். இதன் மூலமாக அவர்கள் உங்களை தவறாக நினைப்பது இல்லாமல் இருக்கும். இதற்கு மாறாக நீங்கள் அனைத்தையும் மறைத்து உங்கள் விருப்பம்போல செயல்பட்டால், நீங்கள் செய்யும் செயல்களை அவர்கள் புரிந்துகொள்ளாமல் தவறாக பேசும் வாய்ப்புள்ளது. அது உங்களது இலக்குகளுக்கு தடையாக அமையலாம். எனவே உங்களது குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை குடும்ப நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பாதுகாப்பு கவலைகள்: நீங்கள் யாருடைய துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்களை சந்தித்து வந்தால், அதை நம்பகமான குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் சொல்லி வைப்பது அவசியம். இத்தகைய பிரச்சினையை மறைப்பது உங்களுக்கு மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே இந்தக் கவலைகளை குடும்ப நபர்களுடன் பகிர்ந்து கொள்வதால், அனைவரும் ஒன்றாக சேர்ந்து உங்களுக்கான பாதுகாப்பை வழங்கி உங்களை அத்தகைய கவலைகளிலிருந்து வெளியே கொண்டு வருவார்கள்.
உங்களது குடும்பம் என்றும் மகிழ்ச்சியாக இருக்க மேலே குறிப்பிட்ட 5 விஷயங்களை உங்களது குடும்ப உறுப்பினர்களிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். குடும்பங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது, நல்ல உறவை மேம்படுத்த மிகவும் முக்கியமானது. எனவே இதுபோன்ற முக்கியமான விஷயங்களை குடும்பத்துடன் பகிர்வது நல்லது.