
சில நேரங்களில் வீட்டில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்களை கவனிக்காமல் விட்டு விடுவது உண்டு. ‘எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது’ என்று சாத்திவிட்டு தூங்குவோம். ஆனால், அவற்றில் நம்மை அறியாமலேயே சில பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. அப்படி ஏற்படும் அந்தப் பிரச்னைகள் குறித்தும் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
ஒரு சமயம் நாங்கள் இருக்கும் வீட்டிற்கு கீழே உள்ள வீட்டில் அப்பாவும் மகனும் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் உறங்கும்போது செல்போனை அடுத்த ரூமில் வைத்து விட்டு உறங்குவதுதான் வழக்கம். அதுபோலவே அன்றும் அவர்கள் உறங்கி விட்டனர். அவர் மனைவியோ வெளியூர் சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த கதவு இறுக்கமாக பூட்டிக் கொண்டு விட்டது. அதை எப்படி திறந்தாலும் திறக்க முடியாமல் பெரும்பாடாகி விட்டது.
ஒருவழியாக மறுநாள் காலை நாங்கள் வாசல் பெருக்க வரும்பொழுது எங்களை ஜன்னல் வழியாகப் பார்த்து சத்தம் போட்டு அழைத்தார். செல்போனும் அடுத்த அறையில் இருந்ததால் மற்றவர்களிடம் உதவி கேட்க முடியாத சூழ்நிலை. ஆதலால் சத்தம் போட்டு விஷயத்தைக் கூற, நாங்கள் ஸ்க்ரூ டிரைவர், சுத்தி போன்றவற்றை அவர் கையில் கொடுக்க அதை வைத்து அவர்கள் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தார்கள். மேலும், அந்த அறையில் பாத்ரூம் வசதிகள் வேறு இல்லாமல் இருந்ததால் இரவு முழுவதும் வெளியில் வர முடியாமல் திண்டாடி போயிருக்கிறார்கள்.
இதேபோல் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தவர்கள் ஒரு வாரமாக யாருமே மாடியில் இருந்து கீழே இறங்கி வரவில்லை. காரணம் கேட்டபொழுது, ‘கீழ் வீட்டில் இருந்த ஒரு பொந்தில் பாம்பு நுழைந்து விட்டதால் அது எங்கிருக்கிறது என்று பயம். ஆதலால்தான் இறங்கவில்லை’ என்று கூறினார்கள். அதன் பிறகு தகுந்த ஆட்களை அழைத்து வந்து அந்தப் பாம்பை பிடித்த பின்பு சந்து, பொந்துகளை எல்லாம் அடைத்து, தரையை மேம்படுத்தி பிறகு புழங்க ஆரம்பித்தார்கள்.
மழைக்காலம் வந்துவிட்டால் இதெல்லாம் நடப்பது புறநகர் பகுதிகளில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் எப்பொழுதும் மராமத்து பணிகளை செய்து வீடு, கதவு, ஜன்னல் மற்றும் ஏதாவது வித்தியாசமான ஓட்டைகள் வீட்டில் இருந்தால் அதையும் கண்காணித்து திறம்பட சரிபடுத்தி வைத்துக்கொள்வது நம்மை நிம்மதியாக வாழ வழிவகுக்கும்.
அதேபோல், குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகவும் ஜாக்கிரதையாக கதவு, ஜன்னல்களை கண்காணிக்க வேண்டியது அவசியம். ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது வெளியில் வந்து வெளி தாழ்ப்பாளை போட்டு விட்டது. அம்மா வீட்டிற்குள், குழந்தை வெளியில். அதற்கு தாழ்ப்பாளைத் திறக்கத் தெரியவில்லை. பிறகு பக்கத்து வீட்டாரை போனில் அழைத்து அவர்கள் காம்பவுண்ட் வழியாக குதித்து, கதவைத் திறந்து விட, வெளியில் வந்தார்கள். ஆதலால், தாழ்ப்பாள்தானே என்று அசட்டையாக இருக்காமல், அவை ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்துவது மிக மிக அவசியம்.