
ஒரு நிறுவனத்தின் முதலாளி அல்லது தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பணியாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவராக இருப்பது அவசியம். பணியாளர்கள் தம் முதலாளியிடம் எதிர்பார்க்கும் எட்டு முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. நேர்மை: தங்களை வழிநடத்தும் தலைவர் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பணியாளர்கள் எதிர்பார்ப்பார்கள். இது அடிப்படைக் குணமாகும். உண்மையை மட்டும் பேசி நம்பகத் தன்மையுடன் நடந்துகொள்ளும் முதலாளிகளைத்தான் பணியாளர்கள் விரும்புவார்கள்.
2. ஆதரவு: ஒரு நல்ல தலைவர் தனது ஊழியர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, பாதுகாத்து அவர்கள் வளர உதவ வேண்டும். ஒரு தலைவர் இதைச் செய்ய தவறும்போது ஊழியர்கள் தாங்கள் ஆதரவற்றவர்களாக உணர்வார்கள். வேலையில் அவர்களுக்குப் பிடிப்பில்லாமல் போகும்.
3. பாராட்டுகள்: ஊழியர்கள் தமது பணியை திறம்பட செய்யும்போது அதை அங்கீகரித்து பாராட்டுவது ஒரு தலைவரின் முக்கிய வேலையாகும். பாராட்டப்படும்போது ஒரு ஊழியர் தாம் கௌரவிக்கப்படுவதைப் போல உணர்கிறார். முன்பை விட இன்னும் தனது பணியை சிறப்பாக செய்வதற்கு முயல்வார்.
4. எளிதில் அணுகும் தன்மை: ஒரு முதலாளி அல்லது தலைவர் தமது பணியாளர்கள் தம்மை எளிதில் அணுகும் வண்ணம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவரை அணுகி தங்களது மனக் குறைகள் மற்றும் கருத்துக்களை அச்சமின்றி பகிர்ந்து கொள்வார்கள். மிகவும் இறுக்கமாக அணுக முடியாத தொலைவில் அவர்களை வைத்திருக்கும்போது பணியாளர், முதலாளி உறவில் விரிசல் விழும்.
5. பச்சாதாபம்: ‘எம்பத்தி’ என்னும் பச்சாதாபம் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு இருக்க வேண்டிய ஒரு அவசியமான குணமாகும். முதலாளி, தனது ஊழியர்களின் உணர்வுகளை உண்மையிலேயே புரிந்து கொண்டு நடக்கும்போதுதான் அந்த பணியிடம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். பணியாளர்கள் செய்யும் வேலையில் மட்டுமல்லாமல் அவர்களது நலனிலும் அக்கறை செலுத்தும் பச்சாதாபம் தலைவருக்கு இருக்க வேண்டும்.
6. இனிமையாகப் பேசுதல்: கடுகடு சிடு சிடுவென பேசும் முதலாளிகளை பணியாளர்கள் விரும்புவதில்லை. அவர்கள் மேல் பயம் அல்லது வெறுப்பு போன்றவை பணியாளர்கள் மனதில் எழும். எனவே, தனக்குக் கீழே வேலை பார்க்கும் கடைநிலைப் பணியாளர்களிடம் கூட முதலாளிகள் இனிமையாகப் பேசுவது மிகவும் அவசியம்.
7. சுதந்திரம்: பணியாளரின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் முதலாளி தலையிடும்போது அல்லது கட்டுப்படுத்தும்போது அவர்களால் சுதந்திரமாக வேலை செய்ய முடியாது. சிறிய முடிவுகளை எடுப்பதற்கு கூட அவர்கள் அனுமதிக்கப்படாவிட்டால் அவர்களால் சிறப்பாக வேலை செய்ய முடியாது. அவர்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் திறன்களை சரியாக பயன்படுத்தவும் முடியாது. எனவே, பணியில் அவர்களுக்குப் போதுமான சுதந்திரம் தரப்பட வேண்டும். அந்தந்த பதவிகளுக்குத் தேவையான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரத்தைத் தர வேண்டும்.
8. சரியான ஊதியம்: கடுமையாக வேலை வாங்கிவிட்டு மிகக் குறைந்த ஊதியம் தந்தால் அது எத்தனை பெரிய சிறப்பான நிறுவனமாக இருந்தாலும் பணியாளர்கள் அங்கே வேலை செய்வதை விரும்ப மாட்டார்கள். தாங்கள் செய்யும் வேலைக்கு பதவிக்கும் ஏற்றவாறான சரியான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த 8 பண்புகளும் இருந்தால் பணியாளர்கள் விரும்பக்கூடிய மனிராக ஒரு நிறுவனத்தின் தலைவர் விளங்குவார் என்பது உறுதி.