வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நமது ஆளுமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். அதற்குரிய வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருந்தால் நமது இலக்குகளை எளிதாக அடைய முடியும். வாழ்க்கையில் நீங்கள் என்னவாக வர வேண்டும் என்று ஆழமாக சிந்திக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள். இதுவே இந்த இயற்கை நமக்குத் தந்திருக்கும் அற்புதமான பரிசு. இதை விட சிறந்த பரிசை யாராலும் தர முடியாது.
உடல் அளவில் உயர்ந்து நில்லுங்கள்: உடலை எவ்வளவு நேராக வைத்து, நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியுமோ அதனை பின்பற்றுங்கள். இவ்வாறு நடப்பதன் மூலம் எத்தனை வயதாக இருந்தாலும் கூட இளமையாகவே தோற்றம் கொள்வதோடு மட்டுமல்லாமல், நேர்மறை உணர்வுகள் அதிகரிக்கும். இதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றும் மற்றவர்கள் முன்பு நமது செல்வாக்கு உயரும்.
மனதளவில் உயர்ந்து நில்லுங்கள்: நமது எண்ணம் பெரிதாகும்போது செயல் பெரிதாகும். ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பெரிய எண்ணங்களை கொண்டிருக்கும்போது மனதளவில் நம்மால் உயர்ந்து நிற்க முடியும். நாம் நினைப்பதை விட பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது. ஆகவே, நமது சிந்தனைகள் மற்றும் எண்ணங்களை பெரிதாக்கிக்கொள்ளும்போது நமது செயல்களும் பெரிதாகவே அமையும்.
ஆன்மிக ரீதியாகவும் உயர்ந்து நில்லுங்கள்: நமது நம்பிக்கையை அதிகரிக்க நாம் ஆன்மிக ரீதியாக செயலாற்றுவதும் முக்கியமான வழிமுறை ஆகும். இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மன அமைதியும், மன உறுதியும் மேம்படுகிறது. சில சமயங்களில் தொடர் தோல்விகளின் மூலம் நாம் சலிப்புறுவது உண்டு. ஆனால், ஆன்மிக ரீதியாகவும் செய்படுபவர்கள் வாழ்கையில் வரும் ஏற்றத்தாழ்வுகளை எளிதில் கடந்து விடுகிறார்கள். உங்களுக்கு சரியென்று பட்ட நியாயமான விஷயங்களில் ஈடுபடும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒதுக்கித் தள்ளுங்கள். சாதித்தவர்கள் யாரும் அடுத்தவர்களின் புகழுக்கு உழைத்தவர்கள் அல்ல.
ஒரு விஷயத்திற்கும் அதிகமாக சிந்தித்து மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுங்கள். உங்களுடைய செயல்களுக்கு நீங்களே முழு பொறுப்பு. அதனால் எது நடந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களை வித்தியாசமாக நடத்துகிறார்களா? கவலையை விடுங்கள். உங்கள் குறிக்கோள் நோக்கியே செல்லுங்கள். சாதித்தவர்கள், அடுத்தவர்கள் தங்களை வித்தியாசமாக நடத்தியதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
சாதித்தவர்கள் மற்றவர்கள் உதவுவார்கள் என்று நினைத்து எதையும் செய்வதில்லை. எது நடந்தாலும் சரி என்று அவர்கள் நினைத்ததை சாதிக்க முனைவர்கள். எந்தத் தடைகளையும் தாண்ட முயல்பவர்கள். சாதித்தவர்கள் மற்றவர்கள் தங்களுக்கு உதவவில்லையே, அவரால் அது தடைபட்டு விட்டதே என்று குறைகள் சொல்லித் திரிவதில்லை. அதில் நேரம் செலவிடுவதும் இல்லை.
வைரத்தை உரசாமல் பட்டை தீட்ட முடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. அதுபோல, நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள், ஆனால் வீழ்ந்து விட மாட்டார்கள். உங்களுக்கான பாதையை அறிந்து துணிந்து போராடி வென்று காட்டுங்கள். உங்களுக்கென்று படைக்கப்பட்ட எதுவும் உங்களை விட்டு எங்கும் சென்று விடாது.