வீடு, நிலம் வாங்குகையில் அதற்கான பத்திரப் பதிவை மேற்கொள்ளும்போது பல விஷயங்களை கவனிக்க வேண்டும். பத்திரப் பதிவு விஷயத்தில் பெரும்பாலும் ஆவண எழுத்தர்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்று அலட்சியமாக நாம் இருக்கக் கூடாது. நாமும் சில நடைமுறை விஷயங்களை அறிந்து கொண்டு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ஒரு நிலம் அல்லது வீட்டை ஒரு நபரிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி நம் பெயருக்கு மாற்றிக்கொள்வதற்கு போடப்படும் ஆவணம்தான் கிரைய பத்திரம். இது முத்திரைத் தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகளின் முன்னிலையில் பதியப்படுவதே கிரைய பத்திரப் பதிவாகும்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அதை எழுதிக் கொடுப்பவரின் பெயரும் இனிஷியலும், அவருடைய அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு போன்றவை ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். கிரையம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர், இன்ஷியல், முகவரி போன்றவை அடையாள அட்டையுடன் பொருந்தி உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
எழுதிக் கொடுப்பவர் ஏற்கெனவே முன்வாங்கிய கிரைய பத்திரத்தில் உள்ள அவருடைய முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றுதானா என்பதையும் பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியையும் இப்போது எழுதுகின்ற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
கிரையம் எழுதிக் கொடுப்பவருக்கு அந்த சொத்து எப்படி வந்தது? பாகப்பிரிவினை மூலமா? உயில், பூர்வீகமாக பட்டாபடி பாத்தியப்பட்டு வந்ததா போன்ற விவரங்களை தெளிவாக ஆவண எண் விவரத்துடன் சொத்து தனக்குக் கிடைத்த விவரத்தை எழுதி இருக்க வேண்டும்.
கிரையம் எழுதிக் கொடுப்பவர் தனக்கு அந்த சொத்து வந்த விதத்தை எழுதுவது மட்டுமில்லாமல், அவருக்கு முன் கிரையம் பெற்றவருக்கு யார் மூலம் இந்த சொத்து வந்தது என்ற அனைத்து லிங்க் டாக்குமெண்ட்களையும் கிரைய பத்திரத்தில் எழுதுவது மிகவும் அவசியமானது.
முக்கியமாக, அக்ரிமெண்ட் போடும்போது எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, காசோலையாக கொடுக்கப்பட்ட பணம், ரொக்கமாக கையில் கொடுக்கப்படும் பணம் மற்றும் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் ஆகியவற்றை தெளிவாக அதில் குறிப்பிட வேண்டும்.
கிரையம் எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவரிடம் இந்தப் பத்திரத்தில் வில்லங்கம் எதுவும் இல்லை என்ற உறுதிமொழிகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். அத்துடன் அரசாங்க வரிகளைக் கட்டியதையும் கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
கிரைய சொத்தின் நான்கு பக்கங்களில் உள்ள நீள, அகல அளவுகளை பிழையின்றி தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். அவை மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு மிக உதவியாக இருக்கும்.
சொத்து விவரத்தை குறிப்பிடும்பொழுது தெருவின் பெயர், கதவு எண் போன்றவற்றையும் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் அதனுடைய எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண் போன்றவற்றையும் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும். பத்திரம் எழுதிக் கொடுப்பவர் மற்றும் அவரின் தரப்பில் உள்ள சாட்சிகளின் பெயர், முகவரியுடன் கையொப்பம் உள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். பட்டா, அடையாள அட்டை நகல்கள் போன்றவை பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும்.