காளான் உணவு சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு, பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. நாம் அன்றாடம் சந்திக்கும் உடல் பிரச்னைகளில் இருந்து இது தீர்வு தருகிறது. அந்த வகையில் காளான் உணவு சாப்பிடுவதால் ஏற்படும் 5 வகை பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. எடை இழப்பு: காளான் உணவுகளில் குறைந்த கலோரியும் நார்ச்சத்தும், நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் இருக்கும் பண்புகளையும் கொண்டிருக்கிறது. மேலும் இதில், பொட்டாசியம், செலினியம், தாமிரம், வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அடங்கி இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதல் தேர்வாக காளான் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹார்மோன்களை சம நிலையில் வைத்திருக்கவும் காளான் உணவு உதவுகிறது.
2. காளான் உணவு எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்: காளான் உணவுகளில் உள்ள நார்ச்சத்தும், வைட்டமின் டி, புரதம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்களும் வயதுக்கு ஏற்ப எலும்புகளை வலுவிழக்காமல் தடுப்பதோடு எலும்புகளை உறுதியாக பராமரிக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
3. சிறந்த நோய் எதிர்ப்பு அமைப்பு: காளான் உணவுகளில் உள்ள பாலி சாக்கரைடுகள் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் ஆன்டிபயாட்டிக் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, வழக்கமான நுகர்வு மூலம் உடல் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் பெறுவதோடு, உடலை பாக்டீரியா தொற்றுகளில் இருந்து எதிர்த்தும் போராட உதவுவதால் இவை ஊட்டச்சத்துக்களின் சக்தியாகக் கருதப்படுகிறது.
4. சருமப் பராமரிப்பு: காளானில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் சருமத்தில் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவி,சருமத்தை மிகவும் பொலிவாகவும் கரும்புள்ளிகள் இன்றி அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.
5. சர்க்கரை நோய்: காளான் உணவுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. இது தவிர, காளான் உணவில் வைட்டமின் பி மற்றும் பாலிசாக்கரைடு உள்ளதால் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு காளான் உணவு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
காளான் உணவை உண்ணும் பழக்கத்தை அதிகரித்துக் கொண்டால் மேற்கண்ட 5 பலன்களையும் எளிதில் பெறலாம்.