
பாரம்பரியமாக வைர நகைகளை அணிந்து வருபவர்கள் அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அதை எப்படி வாங்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். ஆதலால் அதை தைரியத்துடன் விலை கொடுத்து வாங்கி வந்து விடுவார்கள். ஆனால் முதன் முதலாக செல்பவர்களுக்கு அச்சம் இருக்கும். அதை சரியாக கணித்து வாங்கி விட முடியுமா? என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. அப்பொழுது நன்றாக வைரத்தைப் பற்றி தெரிந்த ஒரு நண்பரையோ, உறவினரையோ அழைத்துச் செல்வது நல்ல பயனளிக்கும் விஷயமாகும்.
வைர நகைகள வாங்கப் போகும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ:
1.வைரம்.
வைர நகைகளை வாங்கும் போது அவை தரமானவைதானா என்று சோதித்துப் பார்த்து விட்டு வாங்க முடியாது. அதன் தரத்தையும் தொழில் நுட்ப ரீதியாகத் தான் சோதிக்க முடியும். எனவே, மிக மிக நாணயமான நம்பிக்கைக்குரிய நகைக் கடைகளில், அதாவது விற்கும் போது அவற்றை திரும்ப ஏற்றுக் கொள்ளக் கூடிய கடைகளில் மட்டும் வாங்குவது பாதுகாப்பானது.
வைரம் மற்றும் தங்க நகைகளை வாங்கும் போது, அவற்றின் அழகிய வேலைப்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு வாங்குவதை தவிர்த்து, எதிர்கால மதிப்பீட்டையும் கணக்கிட்டு வாங்க வேண்டும்.
இப்பொழுது ஃபேஷனாக சிறிய வைரக் கற்களை நிறைய வைத்து செய்வதை அழகு என்று வாங்குகின்றோம். அதில் தான் பளபளப்பும், பளிச்சென்ற நிறமும் நாம் விரும்பிய டிசைனும் கிடைக்கும் என நினைக்கின்றோம். வைர கற்கள் சுமார் ஒரு சென்ட் முதல் ஒரு கேரட் வரை கிடைக்கின்றன. அதில் பெரிய கற்களை வைத்து செய்யப்படும் நகைகளில் கூட நம் விருப்பப்படி மிக அழகாக செய்ய முடியும்.
உதாரணத்திற்கு, மூன்று சென்ட் கற்கள் மூன்று வைக்கும் இடத்தில் ஒன்பது சென்ட் கல் ஒன்றை வைத்து செய்யலாம். அப்படி செய்யும்போது மிகவும் எடுப்பாக இருக்கும். அப்படி பெரிய கற்களாக இருப்பதற்கு தான் வைரத்தில் மதிப்பும் அதிகம். வைரத்தைப் பொறுத்தவரை சென்ட் ஏற ஏற அதன் பளபளப்பும், அழகும் விற்கும்போது மதிப்பீடும் அதிகரிக்கும்.
வைரங்களிலேயே மஞ்சள், நீலம், பிரவுன் போன்ற நிறம் உடைய ஃபேன்சி கற்களும் உள்ளன. ஆனால் இவை இந்தியாவில் கிடைப்பது அரிது. இவற்றின் விலையும் மிக மிக அதிகம். ஆதலால் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும் கற்களை பார்த்து வாங்க வேண்டியது அவசியம். நிறம் மங்கிய கற்களை தவிர்ப்பது நல்லது .
வைரக் கற்கள் தோஷம் இல்லாததாக இருக்க வேண்டியது அவசியம். இதை எல்லோராலும் நன்றாக கண்டுபிடிக்க முடியாது என்பதால் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை துணைக்கு அழைத்துச் செல்வது அவசியம்.
வைரத்தில் வேறெந்த உலோகமும் சிராய்ப்பு ஏற்படுத்த முடியாது. வைரத்தை வைரம் மட்டுமே அறுக்கும். ஆதலால், வைர நகைகளே ஆனாலும் எல்லாம் வைரம் தானே என்று ஒன்றோடு ஒன்று சேர்த்து வைக்கக்கூடாது. தோடு, மூக்குத்தி, கழுத்து ஆபரணங்கள் போன்றவற்றை உராய்ந்து தேயாதபடிக்கு தனித்தனியே அதற்கான பெட்டிகளில் வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் பூந்தி கொட்டையைப் போட்டு கலக்கி அதில் வைர நகைகளை மென்மையான பிரஷ்ஷால் தேய்த்துச் சுத்தப்படுத்தினாலே பளிச்சென்று ஆகிவிடும்.
நம்பிக்கை, நாணயத்துடன் எப்பொழுதும் வீட்டு நகைகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்ற, பாரம்பரியமாக அதை சுத்தம் செய்பவர்கள் கடையில் கொடுத்தால் அவர்கள் இந்த கற்களை எடுத்துக்கொண்டு தங்க நகையை கையில் கொடுத்து விடுவார்கள். சுத்தம் செய்த உடன் அந்த தோட்டைக் கொண்டு கொடுத்து அதில் வைர கற்களை பதித்து வாங்கிக் கொண்டு வரலாம்.
2. தங்கம்
தங்க நகைகளை வாங்கும் பொழுது தினசரி உபயோகத்திற்கு மிக ஆடம்பரமாகவோ அதிக வேலைபாடுகளுடன் உள்ளதாகவும் இருப்பதை வாங்குவதை தவிர்த்து எளிமையான பிளைன் நகைகளை வாங்குவது நல்லது. அப்போதுதான் அவற்றை விற்கும் போதும் அதிக சேதாரம் இருக்காது. பராமரிப்பதும் சுலபமாக இருக்கும்.
கல் வைத்த நகைகளை ஆசைக்கு சிலவற்றை குறைந்த எண்ணிக்கையில் வாங்கிக்கொண்டு கல் பதிக்காத நகைகளை அதிகம் வாங்குவது இன்று விலை ஏறி வரும் தங்கத்தை பாதுகாப்பதற்கு சிறந்த வழியாக இருக்கும். பழசானவுடன் அதை மாற்றும் போதும் அதிக சேதாரம் இல்லாமல் இருக்கும்.
அதேபோல் தினசரி உபயோகத்திற்கு அதிக எடை உள்ள நகைகளையும் எப்போதாவது பார்ட்டி, ஃபங்ஷன் என்று உபயோகிக்க குறைந்த எடையுள்ள நகைகளையும் தேர்ந்தெடுத்தால் அணிவதற்கு வசதியாக இருக்கும்.
ஒன்று இரண்டு நகை தங்கத்தில் வாங்கினாலும் அதை 22 கேரட்டில் வாங்குவதே சிறந்தது.