மாமியார் - மருமகள் ஒற்றுமைக்கு அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்!

Things you need to know about mother-in-law - daughter-in-law unity
Things you need to know about mother-in-law - daughter-in-law unityhttps://tamil.boldsky.com

மாமியார் - மருமகள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டால் குடும்பம் குதூகலம் ஆகும். வீட்டில் சண்டை, சச்சரவு இன்றி அமைதியாகக் குடும்பம் நடத்தலாம். அதற்கு அவசியம் அறிய வேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் அறியலாம்.

திருமணமாகி தம் வீட்டுக்கு வரும் மருமகளிடம் வீட்டின் உணவுப் பழக்க வழக்கங்கள், விளக்கு ஏற்றும் முறை, எந்தெந்த விசேஷங்களில் என்னென்ன பலகாரங்கள் செய்ய வேண்டும், தினசரி விளக்கேற்றும்போது நிவேதனமாக எதைப் படைக்க வேண்டும் என்பதையெல்லாம் மாமியார் அவளுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டால் அதற்கு தகுந்தாற்போல் அவள் தன்னை தயார்படுத்திக்கொண்டு, தெரியாத புது புது மெனுக்களை தெரிந்து வைத்துக்கொள்ள முயற்சி செய்வாள். அதேபோல், விசேஷ நாட்களில் செய்தும் அசத்துவாள்.

திருமணமாகி வரும் மருமகளிடம் அவளுக்குத் தெரிந்த கைத்தொழில் மற்றும் விசேஷ திறமைகள் இருந்தால் அவற்றை மாமியாருக்கு கற்றுக் கொடுக்கலாம். புதுப்புது விஷயங்களை தினசரி கற்றுக்கொள்ளும்போது மறதியெல்லாம் வராமல் இருக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும். இதனால் மாமியார், மருமகளைப் போற்றுவார்.

சாப்பிடும்போது மாமியாரை உட்கார வைத்து மருமகள் சுடச்சுட தோசை வார்த்துக் கொடுக்கலாம். சப்பாத்தி செய்து பரிமாறலாம். இதனால் சூடாக சாப்பிட்ட திருப்தியும், மற்றவர் கையால் சாப்பிட்ட நிறைவும் இருக்கும். பிறகு மருமகள் சாப்பிடும்போதும் மாமியார் இதுபோல் செய்து அசத்தலாம். ஒருவருக்கு ஒருவர் இதுபோல் செய்து கொண்டால் அன்பு பலப்படும். குறிப்பாக, வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்லதாக பரிமாறிவிட்டு, கடைசியாக தீய்ந்த தோசை, சப்பாத்தி என்று சாப்பிடும் பெண்மணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். நம் மீதே நமக்கு ஒரு மரியாதை ஏற்படும்.

உங்கள் மாமியார் வெளியில் செல்லும்போது ஏதாவது ஒரு அழகான புடைவையை சொல்லி, ‘அது உங்களுக்கு பளிச்சென்று அழகாக இருக்கும். அதை உடுத்தி செல்லுங்கள்’ என்று சொல்லிப் பாருங்கள். மனம் குளிர்ந்து போவார். அதையே உடுத்த ஆரம்பிப்பார். அதேபோல் நீங்கள் வெளியில் செல்லும்பொழுது எந்த உடையை அணிந்து கொள்ளலாம் என்று ஒரே ஒரு வார்த்தை கேட்டு பாருங்கள். மாமி மகிழ்ந்து போவதுடன், தானே தினசரி புடவை செலக்ஷன் செய்து, ‘இதைக் கட்டிக்கொண்டு போ’ என்று கூறுவார். இதனால்  மாமியார் மருமகளுக்கு இடையே பரஸ்பரம் ஒற்றுமையும் அன்பும் உறுதிப்படும்.

பண்டிகை மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு துணிமணி, நகைகள் வாங்கும்போது மாமியாரையும் அழைத்துச் சென்றால் மனமகிழ்ந்து அவரின் அனுபவபூர்வமான டிப்ஸ்களை கூறி நல்ல பொருளாக வாங்க வழிவகை செய்வார். இதனால் மருமகளுக்கு நல்ல துணை கிடைத்து விட்ட திருப்தி, நம்பகமான தோழி என்று பல விதங்களிலும் சந்தோஷப்பட வாய்ப்பு கிடைக்கும்.

மாமியாரின் அனுபவங்கள் பல்வேறு விஷயங்களில் பாடம் கற்பிக்கும். வயதாக ஆக எதையும் தடுமாறாமல் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை மருமகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். இதனால் நல்ல புரிதல் உண்டாகும். புகுந்த வீடுதான் உங்கள் உலகம் என்கிற பெரிய தத்துவத்தை புரிந்துகொண்டு பிறந்த வீட்டை பற்றிய சுயபுரணத்தை விட்டுவிட்டால் உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும்.

இதையும் படியுங்கள்:
கொலஸ்ட்ராலைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற எண்ணெய்கள்! 
Things you need to know about mother-in-law - daughter-in-law unity

எல்லா தாய்மார்களுக்குமே தனது மகளுடன், மருமகள் இணக்கமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் கலந்துகொண்டு பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தி மகளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதைப் புரிந்து கொண்டு மருமகள்களும் வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன விசேஷங்களுக்கு ஜாக்கெட் துணி வாங்கும் பொறுப்பு, மஞ்சள் குங்குமம், பாத்திரம் பண்டங்கள் வாங்குவது முதலியவற்றை நாத்தனார் கையில் ஒப்படைத்து விட்டால் நாத்தனார் மன மகிழ்வார். திருமண நாள், பிறந்த நாள் போன்றவற்றிற்கு பரிசு கொடுத்து அசத்தலாம். இதனால் மாமியார் குடும்பத்தில் உறவு பலப்படும்.

இப்படி சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனத்தோடும் அக்கறையோடும் நடந்து கொண்டால் மாமியார் - மருமகள் உறவு பலப்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com