
முன்பெல்லாம் கிராமங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி வீட்டின் முன்புறம் திண்ணைகள் அமைத்து வீடு கட்டியிருப்பார்கள். அந்தத் திண்ணைகளில் மாலை வேளைகளில் அமர்ந்து மக்கள் கூடி பேசுவது என்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. வெயில் கால இரவுகளில் காற்றாட படுத்து உறங்கும் கட்டிலாகவும் திண்ணைகள் பயன்பட்டன. திண்ணை தரும் சௌகரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லப்போனால் அந்தக் காலத்தில் வாசல் திண்ணைகள் இப்போதைய வரவேற்பு அறையின் மறுவடிவம் என்றே கூறலாம். வீட்டு விசேஷங்களுக்கு வருகை தரும் உறவினர்களையும், அன்றாடம் வீடு தேடி பேச வருபவர்களையும் சந்திக்கக் கூடிய வரவேற்பறையாக இருந்தன இந்தத் திண்ணைகள். ஆனால், இன்றைய இன்டர்நெட் மற்றும் சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இந்த வழக்கங்கள் முற்றிலும் மறைந்தே போனது.
திண்ணைப் பேச்சின் முக்கிய அம்சங்கள்:
சமூக இணைப்பு: திண்ணைப் பேச்சு அல்லது திண்ணை அரட்டையின் முக்கிய அம்சங்களில் ஒன்று சமூக இணைப்பாகும். மக்கள் தங்கள் வீடுகளின் திண்ணைகளில் அமர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும், தெருவில் போவோர் வருவோரிடம் பேச்சுக் கொடுப்பதும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தியது.
தகவல் பரிமாற்றம்: ஒரு காலத்தில் வெளிப்புறம் திண்ணைகள் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. மாலை நேரத்தில் பெரியவர்கள் திண்ணையில் கூடி அரட்டை அடிப்பார்கள். நாட்டு நடப்புகள், செய்திகள், அரசியல், சினிமா, சில சமயங்களில் ஊர் வம்பு போன்ற பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக திண்ணைகள் இருந்தன. அவரவர் குடும்பங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள் இங்கே பேசாத விஷயங்களே கிடையாது. அனைத்து வயதினருக்கும் திண்ணை ஒரு பிடித்தமான இடமாக இருந்தது.
கவனிக்கும் இடமாக இருந்தது: தெருவில் நடப்பவற்றை கவனிப்பதற்கும், மக்களை ஒன்றிணைப்பதற்கும் திண்ணைகள் பயன்பட்டன. வேலை முடிந்து வந்த களைப்பு மறந்து போகும்படி சிரித்துப் பேசி மகிழும் இடமாகவும் திண்ணை இருந்தது. இது மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளித்தது. நாளடைவில் அனைவரின் வாழ்க்கையும் அதிநவீனமாக மாறியதன் காரணமாக திண்ணைகள் காணாமல் போனது.
பொழுதுபோக்கு: ஒரு காலத்தில் மாலை வேளைகளில் பெரியவர்கள் கூடிப் பேசும் ஒரு மகிழ்ச்சியான பொழுது போக்கிற்கான இடமாகவும் இருந்தது. மாலையில் காற்று வாங்கவும், அருகில் வசிப்பவர்கள் கடந்து செல்லும் பொழுது குசலம் விசாரிக்கவும், கதை பேசவும் திண்ணைகள் பயன்பட்டன. ஆனால், இன்றோ கிராமப்புறங்களில் கூட அரட்டைக் கச்சேரிகளைக் காண்பது அரிதாகி விட்டது. அலுவலகப் பணி நெருக்கடி, தனிப்பட்ட பிரச்னைகள், குடும்பப் பிரச்னைகள் குறித்து பிறரிடம் பகிர்ந்து கொள்வதே தவறு என்ற எண்ணம் மேலோங்கி, எல்லாவற்றையும் மனதிற்குள் பூட்டி வைத்து மன அழுத்தத்தில் அவதிப்படுவது அதிகமாகி உள்ளது.
இனியாவது நாம் கட்டும் வீடுகளில், பிளாட் என்றாலும் பரவாயில்லை திண்ணை அமைத்து கட்டுவோமா? சொல்ல மறந்து விட்டேனே! நாங்கள் புதிதாக வாங்கிய ஃபிளாட்டில் அழகான ஒரு திண்ணை போன்ற அமைப்பை மொட்டை மாடியில் அமைத்துள்ளோம். மாலையில் அனைவரும் உட்கார்ந்து பேசுவதற்கு வசதியாக இது உள்ளது. ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசும் பொழுது ஒரு பெரிய குடும்பத்தில் ஒன்றாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.