
குழந்தைகளின் ஒவ்வொரு செயலையும் கண்காணித்து, அதற்கு தகுந்தாற்போல் எந்த ஒரு எதிர்மறை வார்த்தையும் பேசாமல், நேர்மறையாகப் பேசினாலே வேண்டாத பழக்கங்களை அவர்களே விட்டு விடுவார்கள். அதற்கு பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பதற்காகக் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள் என்பவை பரிசுப் பொருட்களா? அல்லது சன்மானமா? அல்லது லஞ்சமா? பிள்ளைகள் விளையாட்டுப் பொருட்களும், சன்மானங்களும் பெறுவதில் சந்தோஷப்படுவார்கள் என்பது உண்மையே. லஞ்சம் என்பது பெற்றோர், பிள்ளைகளுக்கு தாங்கள் விரும்பும் பழக்கங்களை வரவழைப்பதற்காக முன்கூட்டியே கொடுப்பது அல்லது விரும்பாத பழக்கம் செய்யும் முன்பு அதை தடுப்பதற்காகக் கொடுப்பதாகும். லஞ்சம் சில வேளைகளில் தீய பழக்கத்தை நீக்குவதற்குப் பதிலாக வளர்த்து விடும்.
பேருந்தில் ஏறும்பொழுது அல்லது கடை, கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்லும் பொழுது, ‘அது வேண்டும் இது வேண்டும் என்று தொந்தரவு செய்யாமல் இருந்தால் சாக்லேட் வாங்கித் தருவேன்’ என்று கூறும்பொழுது அங்கு தேவையற்ற பழக்கம் வலியுறுத்தப்படுகிறது. இதுபோன்ற செயலை மனதில் பதிய விடாமல் அங்கு நெகட்டிவ் மேலோங்குகிறது என்பதை நினைவில் கொண்டு, ‘அதை செய்யாதே’ என்று திரும்பத் திரும்ப கூறுவது சரியானது இல்லை. விரும்பத்தக்க பழக்கங்களை மாத்திரம் திரும்பத் திரும்ப கூறி வலியுறுத்தப்பட்டால் அவை குழந்தைகளின் மனதில் பதியும்.
இப்படி, நாம் குழந்தைகளிடம் பேசுவது எப்படி இருக்கிறது என்றால், சர்க்கஸ் மிருகங்கள் சாகசம் புரிகின்றன. அவற்றுக்கு அதன் பின்பு உணவு கிடைக்கும் என்பது தெரியும். பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக சாகசம் புரியவில்லை. அதன் பின்பு கிடைக்கப்போகும் விசேஷ கவனிப்புக்காகவே சாகசம் புரிகின்றன.
கிளி ஜோதிடக்காரர் ஜோதிட பலன் எழுதியுள்ள மட்டையை கிளி வாயால் கவ்வி இழுத்துப் போட்டதும் ஜோதிடர் ரகசியமாக கிளிக்கு உணவாக தானியம் ஒன்றை கொடுப்பார். உணவு மூலம் பயிற்று வைக்கப்பட்ட கிளி உணவுக்காக மட்டையை எடுக்கிறது. இதேபோல்தான் சர்க்கஸ் மிருகங்களும். அதற்குக் கிடைக்கப்போகும் விசேஷ கவனிப்புக்காகவே அவை சாகசம் புரிகின்றன.
டால்பின் கூட தண்ணீரில் துள்ளிக் குதித்து விளையாடி பார்வையாளர்களை மகிழ்விக்கிறது. பழக்குநர் அவற்றின் வாய்க்குள் சிறு மீன்களை உணவாகப் போட்டுக்கொண்டே இருப்பார். இவை அனைத்தும் உணவினை மையப்படுத்திய பயிற்சிகள். சாதாரண நேரங்களில் சர்க்கஸ் மிருகங்களும் ,கிளியோ, டால்பினோ தங்கள் அளவில் இருந்து கொள்ளும்.
பிள்ளைகளுக்கு நாம் வழங்கும் பரிசுப் பொருட்கள், சன்மானம் எல்லாம் இப்படிப்பட்ட லஞ்சமே. தற்காலிகமானவையே. பிள்ளைகளுடன் அறிவியல் ரீதியாக, வயதுக்கு ஏற்ப விளக்கங்களைக் கூற வேண்டும். பொருட்கள் மீதான ஆசைகளை வளர்க்காதீர்கள். வளர வளர எதிர்பார்ப்புகள் சேர்ந்து வளர்ந்து விடும். வளர்ந்த பின்பு லஞ்சம் பெறல், அன்பளிப்பு எதிர்பார்த்தல் போன்றவை சாதாரண பழக்கமாகி விடும். யார் என்ன தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே எந்த வேலையும் செய்வார்கள். அதன்படியே வளர்வார்கள்.
பள்ளிக்கு பிந்தி போகாதே என்பதற்கு பதிலாக நேரத்துக்கு போ என்பது நல்லது. வேண்டத்தகாத பழக்கங்களை பிள்ளைகள் செய்யும்போது கவனியாது இருந்தால் அவை காலப்போக்கில் செயலிழந்து விடும். பெற்றோரின் கவனத்தை தங்களின் மீது திருப்புவதற்காக முயற்சி பண்ணும்போது அவற்றை கவனிக்காத மாதிரி இருப்பது நல்லது.
தேவையில்லாமல் சிணுங்குதல், பொருட்களை எறிதல், அழுதல் போன்ற செயல்களை திரும்பிப் பார்க்காமல், உங்கள் கவனத்தை ஏற்க பிள்ளை செய்யும் செயலில் நீங்கள் முற்றும் கவனிக்காதது போல் உங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தால், தனது செய்கை பயன் தராது என்று அறிந்ததும் அப்பழக்கத்தை கைவிட்டு விடுவார்கள். குழந்தைகளின் செயல் ஆபத்தானதாக இருந்தால் உடனே கவனிக்க வேண்டும். சகோதரரை அடிப்பது, நாய் போன்றவற்றை தொந்தரவு செய்வது, ஆபத்தான பொருட்களை தூக்கி வைத்திருந்தால், வாய்க்குள் ஏதாவது பொருளைப் போட்டு கொண்டு விடுவது போன்ற செயல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிள்ளைகள் நடந்து கொண்டால் கொடுக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள், சிற்றுண்டிகள், ஐஸ்கிரீம் எல்லாம் லஞ்சமே. சரியானது செய்யும்போது கையும் மெய்யுமாக பிடித்துப் பாராட்டினால் அது அவர்களின் சுயமதிப்பை வளர்க்கும். பெற்றோர், பிள்ளை உறவு உயர்வடையும். அவை மனதில் ஆணி அடித்தது போல் இறங்கும்.