திறந்தே கிடந்த நிலைவாசல் கதவுகள்!

அக்கால வீடுகள்
அக்கால வீடுகள்

ற்காலத்தில் வீடு மற்றும் ப்ஃளாட்களின் நிலை வாசல் கதவுகள் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும் காட்சிகளையே நம்மால் காண முடிகிறது. அழைப்பு மணி ஓசையைக் கேட்டதும் கதவில் பொருத்தப்பட்டுள்ள லென்ஸ் வழியாக வந்திருப்பது யார் என்பதை அறிந்த பின்னரே நிலை வாசல் கதவுகள் திறக்கப்படுகின்றன. ஆனால், 70 மற்றும் 80களில் வீடுகளின் நிலைக் கதவுகள் எந்நேரமும் திறந்தேதான் கிடக்கும் என்பது இந்தத் தலைமுறையினர் அறியாத விஷயங்களில் ஒன்று.

அக்காலத்தில் வீடுகள் அனைத்தும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே கட்டப்பட்டன. ஓட்டு வீடு. முன்புறத்தில் பக்கத்திற்கொன்றாக இரண்டு திண்ணைகள். திண்ணைகளை ஒட்டி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பக்கத்திற்கொன்றாக ஜன்னல் வைத்த அறைகள். இரண்டு திண்ணைகளுக்கு மத்தியில் மரத்தினால் செய்யப்பட்ட பெரிய அளவிலான நிலைவாசல் ஒற்றைக் கதவு. நிலைவாசல் கதவானது பெரும்பாலும் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வீட்டிலும் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் ஒற்றுமையாக வசிப்பது வழக்கம். அக்காலத்தில் குருவிகளும் மனிதர்களோடு வீடுகளில் கூடுகட்டி சேர்ந்தே வாழ்ந்தன. அக்கால மனிதர்களும் குருவிகளையும் தங்கள் சொந்தங்களாகவே பாவித்து வாழ்ந்தார்கள்.

வீட்டின் நிலை வாசல் கதவானது, அதிகாலை ஐந்து மணிக்கு அந்த வீட்டில் வசிப்பவர்களில் யார் முதலில் எழுந்திருக்கிறார்களோ அவர்களால் திறக்கப்படும். அத்தோடு, இரவு பத்து மணிவாக்கில் யார் கடைசியாக படுக்கச் செல்லுகிறார்களோ அவர்களால் மூடப்படுவது வழக்கமாக இருந்தது. இடையில் எக்காரணத்தைக் கொண்டும் நிலை வாசல் கதவினை மூடவே மாட்டார்கள். காற்றும் வந்து கொண்டே இருக்கும். அந்தந்த வீடுகளில் வசிக்கும் மனிதர்களும் அவர்தம் உறவினர்களும் வந்து சென்று கொண்டிருப்பார்கள். வீட்டின் நிலைக் கதவானது காலை முதல் இரவு வரை எந்நேரமும் திறந்திருந்தாலும் அக்காலத்தில் திருடு போனதே கிடையாது. திருடு என்பது அக்காலத்தில் அரிதான ஒரு விஷயமாகவே இருந்தது.

இதையும் படியுங்கள்:
புண்ணிய மாதம் வைகாசியின் விசேஷ தினங்கள்!
அக்கால வீடுகள்

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையின் காரணமாக அக்கால வீடுகள் பூட்டப்பட்டதே இல்லை. வீட்டில் எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருப்பார்கள். நிலைக்கதவின் வெளிப்புறத்தின் மேற்பகுதி, நடுப்பகுதி மற்றும் கீழ்ப்பகுதிகளில் மரத்தினாலான பெரிய அமைப்பு கதவின் வலுவிற்காகவும் அழகுக்காகவும் பொருத்தப்பட்டிருக்கும். கதவின் மேலே மையத்தில் பித்தளையால் ஆன கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். சிறுவர்கள் நிலைக்கதவின் கீழ் உள்ள கட்டை மீது ஏறி நின்று பித்தளைக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ஒரு காலைத் தரையில் ஊனித் தள்ள கதவு முன்னும் பின்னும் போய் வரும். அக்காலத்தில் சிறுவர்களுக்கு இது ஒரு விளையாட்டாக இருந்தது.

அக்காலத்தில் இப்படியாகத் திறந்திருக்கும் வீடுகளைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவ்வீடுகள் ஒரு உற்ற நண்பனைப் போல நம்மை வீட்டிற்கு வா வா என்று அன்போடு வரவேற்பதைப் போலவே நமக்குத் தோன்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com