புண்ணிய மாதம் வைகாசியின் விசேஷ தினங்கள்!

Lord Murugan
Lord Murugan

த்திராயண புண்யகாலத்தில் வரும் சித்திரை மாதத்தில் தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் பிரம்மோத்ஸவம், பூச்சொரிதல் விழா, தேர்த்திருவிழா என்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு முடிந்தவுடன் வைகாசி இன்று பிறந்து விட்டது.  சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே வைகாசி மாதம். அதனால் இதற்கு ரிஷப மாதம் என்னும் பெயரும் உண்டு. உத்திராயண காலத்தின் ஐந்தாவது மாதம்தான் வைகாசி. இளவேனில் என்னும் வசந்த காலம் இது.  வைகாசி மாதத்தை, ‘மாதவ மாதம்’ என்றும் சொல்வார்கள். இந்த வைகாசி மாதத்தில் வரும் விசேஷங்கள் மற்றும் விழாக்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மோகினி ஏகாதசி (19.05.2024): வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'மோகினி ஏகாதசி' என்று பெயர்.  இன்று விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

நரசிம்ம ஜயந்தி (22.05.2024): ஸ்ரீமன் நாராயணன் தன்னை சரணடைந்த பக்தனை காக்க சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரஹரி  ரூபமாய் நரசிம்ம அவதாரம் எடுத்த தினம் இன்று. இன்று பெருமாளை வணங்கினால் நம் அனைத்து பயங்களும் விலகி, மனதில் தைரியம் ஏற்படும். இன்று பானகம் நெய்வேத்தியமாக வைப்பது விசேஷம்.

வைகாசி விசாகம் (23.05.2024): ஆறுமுகப் பெருமானின் அவதார தினம் இன்று. அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த சுடரில்  உருவாக்கிய தெய்வம் ஸ்ரீ ஆறுமுகப்பெருமான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய முருகப்பெருமான் அவதரித்த  இந்த தினத்தில் முருகப் பெருமானை வழிபட, வாழ்வில் எல்ல நலன்களும் ஏற்படும்.  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதமிருந்து வழிபட அவர்களுக்கு புத்திர செல்வம் ஏற்படும். இந்த தினம் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.  முருகனுக்கு மட்டுமல்ல, சிவனுக்கும் வைகாசி விசாகம் விசேஷமான நாள்தான். இன்று சிவன் கோயில்களிலும் விசேஷ அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் வைகாசி விசாகம்தான். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்கு சிவபெருமான் பாசுபதம் வழங்கிய நாளும் இந்த நாள்தான். பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகள் அவதரித்த நாளும் இந்நாளில்தான். இவர்கள் மட்டுமல்ல, எமதர்மராஜன் அவதாரம் செய்த நாளும் வைகாசி விசாகம்தான்.

Buddhar
BuddharImage credit - pixabay.com

புத்த பூர்ணிமா (23.05.2024): புத்த மதத்தவருக்கு இது முக்கியமான நாளாகும். வைகாசி பௌர்ணமியன்று தான் புத்தர் அவதாரம் செய்த தினமாகும். மேலும், அவர் போதி மரத்தினடியில் தியானமிருந்து ஞானம் பெற்றது, நிர்வாணம் என்னும் மேன்மையான நிலையை அடைந்தது ஆகிய மூன்று முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற தினமும் இன்றுதான்.

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா ஜயந்தி (24.05.2024): 'நடமாடும் தெய்வம்' என்று பக்தர்களால் போற்றி வணங்கப்பட்ட காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். தான் வாழ்ந்த  காலத்திலும், தான் முக்தியடைந்த பின்னரும் பக்தர்களால் போற்றி வணங்கப்பெறும் ஸ்ரீ மஹா பெரியவாளின் ஜயந்தி வைகாசி மாதத்தில்தான் வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஏர்ல் கிரேய் டீயிலிருக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
Lord Murugan

குமரகுருபர சுவாமிகள் குரு பூஜை (26.05.2024): தாமிரபரணி நதிக்கரையில் பிறந்த மகான் குமரகுருபர சுவாமிகளின் குரு பூஜை தினமும் வைகாசி மாதத்தில்தான் வருகிறது. ஐந்து வயது வரை வாய் பேச முடியாமல் இருந்து, பிறகு செந்தூர் முருகனின் திருவருளால் பேசும் திறனும் கவி பாடும் திறனும் பெற்று, எண்ணற்ற பக்தி இலக்கியங்களைப் படைத்த மகான் கங்கைக் கரையில் முக்தியடைந்தார். அவருடைய குரு பூஜை தினம் இன்று.

அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி (29.05.2024): கடந்த 04.05.2024 அன்று ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் இன்றோடு  முடிவடைகிறது. அனைத்துக் கோயில்களிலும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை இன்று நடைபெறும். இன்று கோயில்களில் நடைபெறும் விசேஷ அபிஷேகங்களை காண்பது மகா புண்ய பலன்களைத் தரும் என்று கருதப்படுகிறது.

வைகாசி மாத முக்கிய விசேஷ தினங்களில் நாமும் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு தெய்வங்கள் மற்றும் மகான்களின் அருளைப் பெறுவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com