
பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியர் தம்மிடம் எதிர்பார்ப்பது புதிய டிசைனில் பட்டுப்புடவையும் ஜொலிக்கும் நகையும்தான் என்று தவறாக நினைக் கிறார்கள். ஒரு மனைவி தன் கணவனிடம் இருந்து நிதி உதவி மற்றும் பொருட்களுக்கு அப்பாற்பட்டு எதிர்பார்க்கும் விஷயங்கள் சில உள்ளன. அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
புரிதல்;
தன் கணவன் தன்னுடைய உணர்ச்சிகளை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதே ஒரு மனைவியின் ஆகச்சிறந்த எதிர்பார்பார்ப்பு ஆகும். தன்னுடைய சவாலான காலகட்டங்களில் கணவனின் உணர்ச்சி பூர்வமான ஆதரவு மிகவும் அவசியம் என்று எண்ணுகிறாள்.
கேட்டல்;
நிறையப் பெண்கள் தங்கள் மனதில் உள்ள கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கணவன் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதிலும் பலர் தங்கள் பிரச்னைக்கான தீர்வுகளை கூட கணவன் சொல்ல வேண்டியதில்லை. காது கொடுத்து கேட்டாலே தங்கள் மனதில் உள்ள பாரம் குறையும் என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள், மனைவியர் பேசுவதை காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதுதான் பிரச்னையே.
மனம் திறந்த உரையாடல்;
தன் கணவன் வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று ஒரு பெண் எதிர்பார்க்கிறாள். கணவன் தன்னுடைய கவலைகள் மற்றும் தினசரி அனுபவங்களை பற்றி மனைவியிடம் விவாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். எல்லா விஷயங்களிலும் இல்லாவிட்டாலும் கூட முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் முன் தன்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஒரு மனைவி விரும்புகிறாள். தன்னுடைய நிதி மற்றும் தனிப்பட்ட இலக்குகள் தொடர்பான முடிவெடுக்கும் செயல் முறைகளில் கணவன் தன்னிடம் விவாதிப்பதை புத்திசாலியான பெண் மிகவும் விரும்புவாள்.
பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்;
பெண் என்பவள் குடும்பத்தின் ஆணிவேராக இருக்க வேண்டும் என்று ஆண் சமுதாயம் எதிர்பார்க்கிறது. வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால் கூட வீட்டு வேலைகளை அவளே செய்யவேண்டும் என்று நிறைய ஆண்கள் இந்த காலத்திலும் நினைக்கிறார்கள். வீட்டு வேலைகள் குடும்பப் பொறுப்புகள் பிள்ளைகள் சார்ந்த பெற்றோருக்கு உரிய கடமைகளை கணவன் பகிர்ந்து கொண்டால்தான் சீரான குடும்ப வாழ்க்கை உருவாகும். அலுவலகத்திலும் வேலை செய்து களைத்து வரும் மனைவி வீட்டிலும் வேலை செய்து பிள்ளைகளை பராமரித்து என்று நிலையில் உடலும் மனமும் சோர்ந்து போகிறாள். அவளுடைய மனம் ஆதரவுக்காக ஏங்குகிறது. தன்னால் முடிந்த உதவிகளை கணவன் நிச்சயம் செய்ய வேண்டும்.
பரஸ்பர மரியாதை;
கணவன் மனைவி உறவு முறையில், தான் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒருவருக்கொருவர் தனிப்பட்ட கருத்துக்களை வைத்திருப்பது. எல்லைகளை வகுத்துக் கொள்வது தனித்துவத்தை மதிப்பிடுவது போன்றவை இதில் அடங்கும்.
தரமான நேரம் செலவழித்தல்;
மனைவியுடன் செலவழிக்கும் நேரம் தரமானதாக இருக்கவேண்டும். மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டு ஃபோனையோ டிவியையோ பார்த்துக் கொண்டு இருப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அரை மணி நேரமாவது தினமும் மனைவியின் முகத்தைப் பார்த்து ஒரு கணவன் பேச வேண்டும். அவளுக்கே அவளுக்காக என்றுநேரம் ஒதுக்கும் போது மட்டும்தான் அவளுடைய மனம் மகிழும்.
பொருளுக்கும் பணத்திற்கும் மேல், பெண் எதிர்பார்ப்பது தன் கணவரிடம் எதிர்பார்ப்பது மரியாதை, பரஸ்பர அன்பு, புரிதல் போன்றவைதான். இதைப் புரிந்து நடந்து கொண்டால் வாழ்க்கை மிக இலகுவாக இன்பமாக செல்லும்.